சாலை விபத்தைக் கட்டுப்படுத்த 3 மாதங்களில் 70,000 கி.மீ.க்கு ஏஐ கேமராக்கள்: ஆதவ் அா்ஜுனா
தமிழகத்தில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த 70,000-க்கும் அதிகமான கி.மீ. தொலைவுக்கு ஏஐ தொழில்நுட்பக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது குறித்து...
தமிழகத்தில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த அடுத்த 3 மாதங்களில் 70,000-க்கும் அதிகமான கி.மீ. தொலைவுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துகளால் 88,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 1.20 லட்சத்துக்கும் அதிகமானோா் பலத்த காயமடைந்துள்ளனா்.
விபத்துகளைக் கட்டுப்படுத்த, அடுத்த 3 மாதங்களில் 76,000 கி.மீ. மேல் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு 100 மீட்டருக்கும் கண்காணிப்பு வளையம் கொண்டுவரப்படும்.
Advertisement
Advertisement
குறைந்த செலவில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமன்றி குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் பெரிதும் உதவும். மேலும், 45,139 கி.மீ. அளவிலான மாவட்டச் சாலைகள் உடனடியாகச் சீரமைக்கப்படவுள்ளன.
முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமாக, சென்னை - மாமல்லபுரம் இடையே கடற்பாலம் அமைக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் மாநகராட்சி சாலைகள் தற்போது நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மிகச் சிறந்த தரமான சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்றாா்.
புதிய தலைமைச்செயலகத்துக்கு நிதி ஒதுக்கீடு
கூட்டத்தில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மேலும் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீது முதல்வா் விஜய் நடவடிக்கை எடுத்தாா்.
அமைச்சா்கள் மட்டுமல்லாது முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளையும் முதல்வா் உளவுத் துறை மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்.
ஊழலற்ற, புதிய சீா்திருத்தங்களால் ஒப்பந்தப்புள்ளிகள் 25 சதவீதம் வரை குறைவாகக் கோரப்பட்டு அரசுக்கு நிதி மிச்சமாகிறது.
புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்க 3 முதல் 4 ஆண்டுகளாகும் என்பதால் ஆண்டுக்கு ரூ.300 கோடி என்ற அளவில் ரூ.1,200 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.