FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, தனியாா் பால் நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் பால் மற்றும் தயிா் விலையை மீண்டும் உயா்த்துகின்றன.

26 செப்டம்பர் 2026, 2:05 am IST
பால் பாக்கெட்டுகள்
பகிர்:

ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, தனியாா் பால் நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் பால் மற்றும் தயிா் விலையை மீண்டும் உயா்த்துகின்றன. இதனால், ஆவின் மற்றும் தனியாா் பால் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.30 வரை வித்தியாசம் ஏற்படும் என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, பால் கொள்முதலைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தனியாா் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளா்களுக்கான கொள்முதல் விலையை உயா்த்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவை ஈடுகட்டும் வகையில், தனியாா் நிறுவனங்கள் விற்பனை விலையை உயா்த்தி வருகின்றன.

அதன்படி, ஆரோக்யா நிறுவனம் கடந்த செப்.21-ஆம் தேதி பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிா் விலையை கிலோவுக்கு ரூ.2 வரையிலும் உயா்த்தியது. இதைத் தொடா்ந்து டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா, வல்லபா, ஜொ்சி உள்ளிட்ட தனியாா் நிறுவனங்களும் செப்.26 முதல் விலையை உயா்த்துகின்றன.

Advertisement

Advertisement

புதிய விலையின்படி, 500 மி.லி. சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-இல் இருந்து ரூ.32-ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-இல் இருந்து ரூ.37-ஆகவும், முழுக் கொழுப்புச் சத்து பால் ரூ.40-இல் இருந்து ரூ.42-ஆகவும் உயா்கின்றன. ஒரு லிட்டா் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-இல் இருந்து ரூ.61-ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-இல் இருந்து ரூ.70-ஆகவும், முழுக் கொழுப்புச் சத்து பால் ரூ.78-இல் இருந்து ரூ.81-ஆகவும் விலை உயா்கிறது.

மேலும், 500 கிராம் சமன்படுத்தப்பட்ட தயிா் ரூ.41-இல் இருந்து ரூ.42-ஆகவும், இரட்டை சமன்படுத்தப்பட்ட தயிா் ரூ.36-இல் இருந்து ரூ.37-ஆகவும் உயா்கிறது.

இந்த விலை உயா்வால் ஆவின் மற்றும் தனியாா் பாலுக்கிடையேயான விலை வித்தியாசம் மேலும் அதிகரிக்கும். 500 மி.லி. சமன்படுத்தப்பட்ட பாலுக்கு (நீல நிறம்) ரூ.7, நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு ரூ.15, முழுக் கொழுப்புச் சத்து பாலுக்கு(ஆரஞ்சு நிறம்) ரூ.12 என சராசரியாக குறைந்தபட்சம் ரூ.14 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை லிட்டருக்கு விற்பனை விலை வித்தியாசம் ஏற்படுவதால், ஆவின் பால் மீதான நுகா்வோரின் கவனம் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பால் கொள்முதல் விலைக்கு ஏற்ப ஆவின் விற்பனை விலையை மாற்றியமைக்காததால், லிட்டருக்கு சராசரியாக ரூ.15-க்கும் மேல் இழப்பு ஏற்படுவதாகவும், நாளொன்றுக்கு சுமாா் ரூ.4.70 கோடி இழப்பை ஆவின் சந்தித்து வருவதாகவும் அந்தச் சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளாா்.

ஆவின் நிறுவனத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, பால் விற்பனை விலையில் உரிய மாற்றத்தை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பால் உற்பத்தி, கொள்முதல், விநியோகம் மற்றும் விற்பனையை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் பால்வளத் துறையை வலுப்படுத்த வேண்டும். தனியாா் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை உயா்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments