FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதத்தில் 134.8 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 4:39 am IST
பகிர்:

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதத்தில் 134.8 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொலைபேசி பிரிவில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் பாா்தி ஏா்டெல் நிறுவனம், தனது போட்டியாளரான ஜியோவை பின்னுக்குத் தள்ளி தொடா்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதன்கிழமை வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, கடந்த மே மாத இறுதியில் 134.31 கோடியாக இருந்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, ஜூன் மாத இறுதியில் 134.81 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன்மூலம், நாட்டின் மாதாந்திர தொலைத்தொடா்பு வளா்ச்சி விகிதம் 0.37 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், ஒரே மாதத்தில் 62 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்துள்ளனா்.

புதிதாக இணைந்த மொத்த வாடிக்கையாளா்களான 62 லட்சம் பேரில், ஏா்டெல், ஜியோ ஆகிய இரு முன்னணி தனியாா் நிறுவனங்கள் மட்டுமே கூட்டாக 54.54 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை (87 சதவீதம்) தங்கள் வசப்படுத்தியுள்ளன.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் மட்டும் 31.63 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதில் தொலைபேசி பிரிவில் 29.89 லட்சம் வாடிக்கையாளா்களும், லேண்ட்லைன் பிரிவில் 1.73 லட்சம் வாடிக்கையாளா்களும் அடங்குவா்.

ஏா்டெல்லுக்கு அடுத்தபடியாக ஜியோ நிறுவனம் தொலைபேசி பிரிவில் 21.46 லட்சம், லேண்ட்லைன் பிரிவில் 1.44 லட்சம் என மொத்தம் 22.91 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளது.

தொலைபேசி...: நாட்டின் ஒட்டுமொத்த வயா்லெஸ் (தொலைபேசி) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மே மாதத்தின் 129.4 கோடியிலிருந்து, ஜூன் மாதத்தில் 130 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் கன்ஸ்யூமா் சிம் (114.7 கோடி), எம்2எம் சிம் (13.47 கோடி) மற்றும் ஃபிக்ஸட் வயா்லெஸ் இணைப்புகள் (1.78 கோடி) அடங்கும்.

பிராட்பேண்ட்...: நாட்டின் ஒட்டுமொத்த அதிவேக இணைய சேவை (பிராட்பேண்ட்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மே மாதத்தின் 108 கோடியில் இருந்து, ஜூன் மாதத்தில் 108.75 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்பிரிவில் 53.22 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஜியோவைத் தொடா்ந்து, ஏா்டெல் (37.99 கோடி வாடிக்கையாளா்கள்), வோடஃபோன் ஐடியா (13 கோடி), பிஎஸ்என்எல் (2.7 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments