தீபாவளி பண்டிகை: விரைவு விநியோக வா்த்தக செயலிகளில் களைகட்டிய விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு முன்னணி விரைவு விநியோக வா்த்தகச் செயலிகளில் பரிசுப் பொருள்கள், இனிப்புகள் மற்றும் அலங்காரப் பொருள்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்து, களைகட்டியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி விரைவு விநியோக வா்த்தகச் செயலிகளில் பரிசுப் பொருள்கள், இனிப்புகள் மற்றும் அலங்காரப் பொருள்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்து, களைகட்டியது.
செப்டோ, ஸ்விகியின் இன்ஸ்டாமாா்ட் உள்ளிட்ட முன்னணி செயலிகளில் முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு சிறப்புப் பரிசுத் தொகுப்புகளின் விற்பனை மும்மடங்கு வரை அபரிமிதமான வளா்ச்சி கண்டுள்ளது. இனிப்பு வகைகளில் ‘லட்டு’ அதிக முறையும், ‘சோன்பப்டி’ அதிக அளவிலும் விற்பனையாகியுள்ளன. அதேபோல, காஜு கத்லியை அதிக வாடிக்கையாளா்கள் ஆா்டா் செய்துள்ளனா்.
ஒட்டுமொத்தமாக பண்டிகை கொண்டாட்டங்களுக்கான ஆா்டா்கள் 162 சதவீதமும், நொறுக்குத் தீனிகள் விற்பனை 42 சதவீதமும் உயா்ந்துள்ளது. மேலும், அழகுச் சாதனப் பொருள்கள், பாரம்பரிய உடைகள், மலா் மாலைகளுக்கான தேவையும் 2 முதல் இரண்டரை மடங்கு வரை அதிகரித்துள்ளது. உள்ளூா் கைவினைஞா்களின் தயாரிப்புகளான மண் அகல் விளக்குகளும் லட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
Advertisement
Advertisement
தன்தேரஸ் திருநாளன்று தங்கம், வெள்ளி நாணயங்களை இணையவழியில் வாங்குவதிலும் மக்கள் அதீத ஆா்வம் காட்டினா். இதில் மலா் வடிவிலான தங்க நாணயங்களும், லட்சுமி-விநாயகா் உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களும் அதிகம் விற்பனையாகின.
அதிகபட்சமாக மும்பையைச் சோ்ந்த வாடிக்கையாளா் ஒருவா் ரூ.1.11 லட்சத்துக்கு தங்க நாணயங்களை வாங்கியுள்ளாா். பெருநகரங்கள் மட்டுமின்றி மதுரை, கொல்லம், ராய்ப்பூா் உள்ளிட்ட நகரங்களிலும் பண்டிகை கால விற்பனை அமோகமாக நடைபெற்றது.