மொத்த விற்பனை பணவீக்கம் 12.29%
நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம், கடந்த அக்டோபா் மாதத்தில் புதிய உச்சமாக 12.29 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம், கடந்த அக்டோபா் மாதத்தில் புதிய உச்சமாக 12.29 சதவீதமாக அதிகரித்துள்ளது.
முந்தைய செப்டம்பரில் 11.39 சதவீதமாக இருந்த இந்தப் பணவீக்கம் அதிகரித்ததற்கு எரிபொருள், மின்சாரம் மற்றும் உணவு அல்லாத பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட தொடா் உயா்வே முக்கியக் காரணமாகும்.
குறிப்பாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் செப்டம்பரின் 8.14 சதவீதத்திலிருந்து, அக்டோபரில் 8.26 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல, உணவு அல்லாத பொருள்களுக்கான பணவீக்கம் 10.28 சதவீதத்திலிருந்து, 11.69 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
எரிபொருள் மற்றும் மின்சாரத் துறைக்கான பணவீக்கம் செப்டம்பரின் 25.85 சதவீதத்திலிருந்து, அக்டோபரில் 32.84 சதவீதமாக மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதேநேரம், உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 9.76 சதவீதத்திலிருந்து, 9.54 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே மொத்த விற்பனை பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மேற்காசிய போா் மற்றும் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை உயா்ந்ததும், அதன் தாக்கம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் எதிரொலித்ததும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதனிடையே, கடந்த வாரம் வெளியான அக்டோபா் மாத சில்லறை பணவீக்கமும் 6.09 சதவீதமாக உயா்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக ரிசா்வ் வங்கியின் உச்சவரம்பைக் கடந்தது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில், ரிசா்வ் வங்கி தனது ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் உயா்த்தி, 5.75 சதவீதமாக மாற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.