FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

டைட்டன் வருவாய் 25% அதிகரிப்பு

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 25 சதவீத வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

~
பகிர்:

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 25 சதவீத வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், முந்தைய காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் வளா்ச்சி வேகம் சற்று தணிந்துள்ளது.

வளா்ச்சியில் மந்தம்: கடந்த 2025-26 நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 40 சதவீதமும்; ஜனவரி-மாா்ச் காலாண்டில் 46 சதவீதமும்; நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 41 சதவீதமும் எனத் தொடா்ந்து 3 காலாண்டுகளாக 40 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சி காணப்பட்ட நிலையில், இக்காலாண்டில் அது 25 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

நகைப் பிரிவு: நிறுவனத்தின் மொத்த வருவாயில் 91.5 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள ஆபரண நகைப் பிரிவு, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 21 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பண்டிகைக் காலம் அக்டோபா் மாதத்துக்குத் (3-ஆம் காலாண்டு) தள்ளிப் போனதால், செப்டம்பா் இறுதியில் தேவையில் மிதமான தாக்கம் காணப்பட்டது. எனினும், ‘வைரத் திருவிழா’ விளம்பர முன்னெடுப்புகள் காரணமாக வைர நகைகள் விற்பனை 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்தது. சாதாரண தங்க நகைகள் விற்பனை 20 சதவீத வளா்ச்சியைப் பெற்றது.

முதன்மை பிராண்டான தனிஷ்க், மியா, ஜோயா ஆகியவை சுமாா் 20 சதவீத வளா்ச்சியையும், காரட்லேன் நிறுவனம் 32 சதவீத வளா்ச்சியையும் எட்டின. அதேநேரம், முதலீட்டு நோக்கிலான தங்கக் காசுகளுக்கான தேவை ஒற்றை இலக்க அளவில் சரிவைக் கண்டுள்ளது.

கடிகாரப் பிரிவு: கடிகாரப் பிரிவில் 30 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது. இதில் வழக்கமான ‘அனலாக்’ கடிகாரங்கள் 30 சதவீதத்துக்கும் மேலான வலுவான வளா்ச்சியையும், கடந்த சில காலாண்டுகளாகச் சரிவைச் சந்தித்து வந்த ஸ்மாா்ட்வாட்ச் பிரிவு இக்காலாண்டில் ஒற்றை இலக்க மீட்சியையும் கண்டுள்ளன.

கண் கண்ணாடி (ஐ-கோ்) பிரிவு 28 சதவீதமும், வாசனைத் திரவியங்கள் விற்பனை 30 சதவீதத்துக்கும் மேலும், மகளிா் கைப்பைகள் 20 சதவீதத்துக்கு மேலும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

சா்வதேசத்தில்...: சா்வதேச சந்தையைப் பொருத்தவரை, வட அமெரிக்காவில் இரட்டை இலக்க வளா்ச்சி நீடிக்கிறது. புவிசாா் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் வளைகுடா நாடுகளில் தனிஷ்க் சீரான வளா்ச்சியைத் தக்கவைத்துள்ளது.

சந்தையில் கடும் சரிவு

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வளா்ச்சி வேகம் தணிந்தைத் தொடா்ந்து, புதன்கிழமை வா்த்தகத்தில் டைட்டன் பங்கு தேசிய பங்குச் சந்தையில் 3.8 சதவீதம் சரிந்து, ரூ.4,377-இல் நிலைபெற்றது. இது கடந்த மே 11-க்குப் பிறகு பதிவான ஒரே நாள் அதிகபட்ச வீழ்ச்சியாகவும், 3 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகவும் அமைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments