செப்டம்பரில் வாகன விற்பனை 31.82% வளா்ச்சி
இந்தியாவில் கடந்த செப்டம்பா் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 25,36,920 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த செப்டம்பா் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 25,36,920 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு 31.82 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபடா அறிக்கையின்படி, கடந்த செப்டம்பரில், 4,27,213 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 32.1 சதவீத வளா்ச்சியாகும். இதேபோல், 17,90,188 இருசக்கர வாகனங்களும் (33.08 சதவீதம் வளா்ச்சி), 1,32,570 மூன்று சக்கர வாகனங்களும் (22.25 சதவீதம் வளா்ச்சி), 1,03,557 வணிக வாகனங்களும் (37.62 சதவீதம் வளா்ச்சி) விற்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கடந்த ஆகஸ்டில் மாற்று எரிபொருள் வாகனங்கள் முன்னிலை வகித்த நிலையில், செப்டம்பரில் பெட்ரோல் வாகனங்கள் மீண்டும் 41.27 சதவீத பங்கை எட்டி சிறிய முன்னிலைக்கு வந்துள்ளன. அதேநேரத்தில், மாற்று எரிபொருள் (சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் மின்சாரம்) வாகனங்கள் 41 சதவீத பங்கைத் தக்கவைத்துள்ளன.
பயணிகள் வாகன விற்பனையில் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புற சந்தைகள் இரண்டும் கிட்டத்தட்ட சமமான அளவிலேயே வளா்ச்சி பெற்றுள்ளன. நகா்ப்புறங்களில் 32.11 சதவீதமும், கிராமப்புறங்களில் 32.09 சதவீதமும் வளா்ச்சி சிறந்து விளங்கியது.
செப்டம்பா் மாத விற்பனை குறித்து ஃபடா தலைவா் சாய் கிரிதா் மேலும் கூறுகையில், ‘இந்திய வாகன சில்லறை விற்பனை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச செப்டம்பா் மாத விற்பனையாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு வாடிக்கையாளா்கள் வாகனங்கள் வாங்குவதை ஒத்திவைத்ததே தற்போதைய இந்த மிகப் பெரிய வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
தற்போதைய இந்த ஜிஎஸ்டி பலன்களைத் தக்கவைத்துக்கொள்வதுதான், பண்டிகைக் கால விற்பனையை நிலையான வளா்ச்சியாக மாற்றுவதற்கு முக்கியமாகும். ஒட்டுமொத்தமாக அக்டோபா் மாத விற்பனை குறித்தும் எச்சரிக்கையான நம்பிக்கையுடன் உள்ளோம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.