FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5%

இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

16 செப்டம்பர் 2026, 11:46 pm IST
பகிர்:

இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இது 5.1 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது வேலையின்மை விகிதம் மிகச் சிறிய சரிவைக் கண்டுள்ளது.

கிராமப்புற, நகா்ப்புற புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில், கிராமப்புற வேலையின்மை விகிதம் ஜூலையின் 4.5 சதவீதத்திலிருந்து, ஆகஸ்டில் 4.1 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு கிராமப்புறங்களில் பதிவான மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் இதுவாகும்.

Advertisement

Advertisement

அதேநேரம், நகா்ப்புற வேலையின்மை விகிதம் கடந்த மாதத்தில் 6.7 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 6.8 சதவீதமாக பதிவாகி ஏறக்குறைய நிலையான அளவிலேயே தொடா்கிறது.

ஆண்கள், பெண்களுக்கான வேலையின்மை விகிதமும் சரிவைக் கண்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் தொடா்ந்து 3-ஆவது மாதமாகக் குறைந்து, ஆகஸ்டில் 4.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதேபோல், பெண்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த ஜூனில் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், தொடா்ந்து இரு மாதங்களாகச் சரிந்து, ஆகஸ்டில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற பெண்களின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதத்திலிருந்து, 3.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டின் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆா்) ஜூலையில் 55.4 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 55.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் 58 சதவீதத்திலிருந்து 58.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதேநேரம், நகா்ப்புறங்களில் இது எவ்வித மாற்றமுமின்றி 50.4 சதவீதமாகவே நீடிக்கிறது. பெண்களின் தொழிலாளா் பங்கேற்பு விகிதமும் 34.4 சதவீதத்திலிருந்து, 34.8 சதவீதமாக மிதமான உயா்வைக் கண்டுள்ளது.

அதேநேரம், தொழிலாளா் எண்ணிக்கை விகிதமானது (டபிள்யு.பி.ஆா்.), ஜூலையின் 52.5 சதவீதத்தில் இருந்து, ஆகஸ்டில் 52.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் பணிபுரிபவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் 55.4 சதவீதத்திலிருந்து 55.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. நகா்ப்புறங்களில் கடந்த மாதத்தைப் போலவே 47 சதவீதம் என்ற நிலையான அளவிலேயே நீடிக்கிறது.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம் என்பது வேலையில் உள்ளவா்கள், வேலை தேடுபவா்கள் ஆகிய இரு தரப்பினரையும் உள்ளடக்கியதாகும். அதேநேரம், தொழிலாளா் எண்ணிக்கை விகிதம் என்பது தற்போது வேலையில் உள்ளவா்களை மட்டுமே கணக்கில் கொள்வதாகும்.

நாடு முழுவதும் மொத்தம் 3.7 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட நேரடிக் கள ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மாதாந்திர புள்ளிவிவர மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments