மோடியை சமாதானப்படுத்திய அமித் ஷா!
தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், பெரிய கட்சிகளைத் தங்களது அணிக்குக் கொண்டு வருவதிலும் மாநிலத் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது பிரதமர் நரேந்திர மோடியை கவலையடைச் செய்துள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், பெரிய கட்சிகளைத் தங்களது அணிக்குக் கொண்டு வருவதிலும் மாநிலத் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது பிரதமர் நரேந்திர மோடியை கவலையடைச் செய்துள்ளது. இதனால் தமிழகம், கேரளம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லப் போவதில்லை என்று அண்மையில் நடந்த பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமித் ஷா, மோடியைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார். கேரளத்தில் மந்த நிலையில் இருந்த பாஜக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அமித் ஷா, வரும் 9-ஆம் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநிலத் தலைமைக்கு உத்தரவிட்டார்.
தான் பிரசாரத்துக்குப் போயும்கூட, போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் "டெபாசிட்' கூடப் பெற முடியாமல் போனால், அகில இந்திய அளவில் தனது "இமேஜ்' கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிற கவலை பிரதமருக்கு. அதனால்தான், கட்சி அமைப்பு பலவீனமாக உள்ள தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள நரேந்திர மோடி தயங்குவதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அவர் மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்திய பிறகு மீண்டும் பிரதமரைச் சமாதானப்படுத்தினார். இதனால் மனமிறங்கிய மோடி கேரளம், தமிழகத்தில் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கிய பிறகு, தலா ஒரு முறை மட்டும் பிரசாரத்துக்கு வருவதாக மோடி தெரிவித்தார்.
தமிழகம், கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி வந்து சென்றால் அது கட்சித் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் என்று அமித் ஷா நம்புகிறார். ஆனால், அது எந்த அளவுக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் எனத் தெரியாமல் கவலையில் உள்ளனர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாநில பாஜக பிரமுகர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.