நூற்றுக்கு நூறு

28. எது முதலில்

நேரம் என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் பொக்கிஷம். அதைப் புதையல்போல காத்து பயன்படுத்துவதும், வீணாக்குவதும் நாம்தான்.

சந்திரமௌலீஸ்வரன்

பழங்கங்களின் தாய் என்று நேர நிர்வாகத்தை உளவியலாளர்கள் சொல்வார்கள். ஆனால் அதனினும் முதன்மையானது, எந்தச் செயல் முக்கியம் என்பதைக் கொண்டு நேரத்தை மேலாண்மை செய்வது. எது முதலில் என்பதை காலமே தீர்மானிக்கிறது.

எது முதலில் என்பதை சரிவரத் தெரிந்துகொள்ளாதவர்கள் தடுமாறுகின்றனர். முக்கியம் என்பதும், அவசரம் என்பதும் இரண்டு மிக அவசியமான அம்சங்கள்.

உதாரணமாக, உடல்நிலையில் பின்னடைவு என்பதைக் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை முக்கியமானதும் ஆகும். அவசரமானதும் ஆகும். அதேபோல சில மாதங்கள் கடந்து நிகழவிருக்கும் திருமணம், அல்லது குடும்ப விழா அல்லது பள்ளி / கல்லூரித் தேர்வு முக்கியமானது, ஆனால் அதற்கு அவசரப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மாணவர் பலர் பல நேரங்களில், மிகவும் முக்கியமாகச் செய்யக்கூடிய பணிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியான பணிகள் செய்வதற்கு பொறுமையும் பணியில் ஒவ்வொரு நிலைக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் சரிவரச் செய்ய வேண்டிய அவசியமும் உண்டு. ஆனால் முக்கியமில்லாத அவசரமில்லாத பணிகளுக்கு அப்படி ஒரு கட்டாயம் இல்லை. மேலும் அதுபோன்ற உபயோகமில்லாத செயல்களினால் நீண்டகாலப் பயன் இருக்கப்போவதில்லை.

மாணவர்கள் பலர் இந்த இரண்டு அம்சங்களையும் சரிவரப் புரிந்துகொள்வது முக்கியமானதும். அவசியமானதுமான பழக்கம். நூற்றுக்கு நூறு தரும் பழக்கம்.

இதைக் சரிவர கடைப்பிடிக்க நாம் செய்து முடிக்க வேண்டிய செயல்களை நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

1. முக்கியமானதும் அவசரமானதும் ஆன செயல்கள்

• மறுநாள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வீட்டுப்பாடங்கள்

• உடல்நிலை தொடர்பான ஆலோசனைகள்

• முடிவு தேதி அறிவிக்கப்பட்டு செலுத்தப்பட வேண்டிய கட்டணம்

• அவசரம் எனக் கேட்கப்பட்ட நியாயமான உதவிகள்

2. முக்கியம் ஆனால் அவசரமில்லை (கால அவகாசம் எடுத்துக்கொண்டு செய்ய வேண்டியவை)

• பருவத் தேர்வுகளுக்கான பயிற்சி

• குறிப்பிட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் (எடை குறைப்பு உடற்பயிற்சி)

• கூடுதல் திறமைகள் வளர்த்துக் கொள்ளுதல் (பிறமொழி பயிற்சி, இசைக் கருவிகள் பயிற்சி போன்றவை)

• ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல், அதற்கான குறிப்புகள் சேகரித்தல்

• நற்பண்புகள் தொடர்பான செயல்கள் (சமூகப் பணி போன்றவை)

3. அவசரம் ஆனால் முக்கியமில்லாதவை

• எதிர்பாராத தொலைபேசி அழைப்புகள்

• தொடர்பில்லாமல் எழுப்பப்படும் கேள்விகள்

4. முக்கியமும் இல்லை அவசரமும் இல்லை

• வெட்டிப் பேச்சு

• வீண் அரட்டை

• காரணம் இல்லாத பயணம்

• திட்டமிடாத ஓய்வு, உல்லாச நடவடிக்கை

• இணையத்தில் எந்த காரணமும் இல்லாத தேடல்

• சமூக ஊடகங்களில் விரயமாகப் பொழுது கழித்தல்

• அவசியமில்லாத பொருட்கள் மீது உண்டாகும் லயிப்பும் அதனால் உருவாகும் தேடலும்

நாம் செய்ய வேண்டிய செயல்களை அதன் தன்மையைக் கருத்தில் கொண்டு, வகை பிரித்து அதனைக் கொண்டு அதன்படி செயல்படுத்துவது சிறந்த நேர மேலாண்மைச் செயலாகும். எந்த செயல் எப்போது முதலில் செய்யப்பட வேண்டும் என உணர்ந்து செய்கின்றவரே மேன்மை நிலையை அடைகின்றார்.

இப்படி நம் செயல்களை நிர்வாகம் செய்வதால், நமக்கு கிடைக்கும் அனுகூலம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் மட்டுமல்ல, நல்ல உறக்கம், நேரத்தே பசி எடுத்தல், மன அழுத்தம் குறைந்து இலகுவாக உணர்தல், எந்த சிக்கலையும் சவாலையும் சந்திக்கும் மனோபாவம் வளர்தல் என்பனவாக பல பலன்கள் உண்டு.

இப்படி செயலையும் நேரத்தையும் நிர்வாகம் செய்ய சில முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், சில பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

பாடம்படித்தல் போன்ற "மிக முக்கியமான" வேலையில் ஈடுபடும்போது கைபேசிகளை உபயோகப்படுத்துவதைத் தவிர்த்தல், மடிக்கணினி போன்ற கருவிகள் வழியாக இணையத்தில் தேடும்போது, கவனம் சிதற ஏதுவாகும் பிற தளங்களைப் பார்வையிடுவதில் இருந்து கவனமாக விலகி இருத்தல் போன்ற கட்டுப்பாடுகள் அவசியம். அவற்றை பயன்படுத்துவதற்கென தனியே நேரம் ஒதுக்கி அப்போது மட்டும் அந்தத் தளங்களைப் பார்வையிடுவதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும்.

பாடங்களைப் படிப்பதற்கு முன்பு மிகத் தெளிவான அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். ஒரு பெரிய கட்டடம் கட்டுவதற்கு முன்பு அதனைக் குறித்த வரைபடம் தயார் செய்வது போன்றது இப்படியான அட்டவணை.

இந்த அட்டவணைதான் உங்கள் நேரத்தை பாடம் படிப்பதில் எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வடிவமைப்பு. இது மிக முக்கியம்.

இந்த அட்டவணையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்திலும், எந்தப் பகுதிகள் படிக்க வேண்டும், வினாக்களுக்கு எப்படி முக்கியத்துவம் தர வேண்டும், தேர்வுகளில் கேள்வித்தாள்களில் எப்படிப்பட்ட கேள்விகள் வருகின்றன அவற்றுக்கேற்ப எப்படி பயிற்சி எடுக்க வேண்டும் என்று எந்தப் பாடத்தில் எவ்வளவு முன்னேற்றம் என்பது போன்ற மிக நுணுக்கமான விவரங்களுடன் தயார் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நாம் படிப்பதற்கான முயற்சியினை சரியான திசையில் சரியான அளவீட்டில் செய்துகொள்கிறோமா என்பதைக் கணித்து செயல்படுத்த இயலும்.

அலுவக நிர்வாகத்தில், வியாபாரத்தில், உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரிடம் பழகியிருக்கிறேன். அவர்கள் வெற்றிக்கு என்னால் ஒரு காரணத்தை இதுதான் முதல் காரணம் என அடையாளமிட்டுச் சொல்ல முடிகிறது. அவர்களிடம் பேசும்போது அவர்களும் இதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செயல் செய்ய வேண்டும் என்பதைக் குறித்து ஒரு பட்டியலை தினம் குறித்துக்கொள்கிறார்கள். அதை மிக ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றார்கள். இங்கே சொன்ன அந்த நான்கு வகைகளில் அவர்கள் தங்களுக்கான task-priority list-ஐ ஒழுங்காகத் தயாரிக்கின்றனர், அதை மனப்பூர்வமாக பராமரிக்கின்றனர். மிக முக்கியமாக ஒவ்வொரு செயலுக்கும் என்று முடிக்கப்பட வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டு அதனை நினைவுபடுத்த பலவிதமான பயன்பாடுகளை பயன்படுத்துகின்றார்கள். மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற பட்டியலைக் கடைப்பிடிப்பது அவசியம். நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல, வாழ்வில் ஒவ்வொரு செயலும் நேரத்தே நிறைவேற்றப்பட வேண்டும் எனும் உறுதியும் மனப்பக்குவமும் இந்தப் பழக்கத்தினால் உருவாகும்.

ஒவ்வொரு முறை பாடத்திற்காக, பயிற்சிக்காக தேர்வுக்காக தயாராகும்போதும் என்ன செய்ய வேண்டும் எனும் ஒரு சிறு லிஸ்ட் தயார் செய்துகொள்ளும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.

வீட்டுப் பாடம் அல்லது செய்து முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் இவற்றுக்கான கெடு தேதிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னதாகவே அவற்றினை முடித்துவிட திட்டமிட்டு உழைக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை திருத்த, மேம்படுத்த சில நாள்கள் அவகாசம் கிடைக்கும்.

பாடங்களில் சந்தேகம் என்று நண்பர்கள் கேட்கும்போது உதவுவது நல்ல பழக்கமே. ஆனால் அதை தொலைபேசியில் செய்யும்போது, அரட்டை, வீண் விவாதம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இயன்றவரை இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களைத் தவிர்ப்பது நலம். அதுவும் நீங்கள் பாடம் படித்துக்கொண்டிருக்கும்போது நிகழும் இதுமாதிரியான உரையாடல்கள் உங்கள் நேரத்தை விழுங்கும் அசுரர்கள் என்பதை உணர வேண்டும்.

நேரம் என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் பொக்கிஷம். அதைப் புதையல்போல காத்து பயன்படுத்துவதும், வீணாக்குவதும் நாம்தான். எது முதலில் எனத் தெரிந்துகொள்வதும், முதலிலும் அவசியமாகவும் முடிக்க வேண்டிய செயலை முடிக்காமல், பொருத்தமில்லாத அவசியமில்லாத பயன்தராத செயலைத் தவிர்க்க பழக வேண்டுமா, உங்கள் படிப்பு மேஜை மீது ஒரு கடிகாரத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த வாரம் இன்னமும் சில நேர மேலாண்மைக் குறிப்புகளைக் காணலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT