முகப்பு
இசை

சென்னையில் ஒலித்த 'அமெரிக்காவில் பிறந்த சகோதரிகள்' மாயா மாளவியின் மதுரமான இசை

கடந்த ஞாயிறு ஆக.18 அன்று, தி.நகர் வாணி மகாலில் உள்ள மினி ஹாலில் ஒரு கச்சேரி. அமெரிக்காவில் வசிக்கும் சித்ரா, ரவி ரவீந்திரன் தம்பதியின் மகள்களான சிறுமியர் மாயா, மாளவி இருவரின் கச்சேரி.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 7:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:49 PM

கடந்த ஞாயிறு ஆக.18 அன்று, தி.நகர் வாணி மகாலில் உள்ள மினி ஹாலில் ஒரு கச்சேரி. அமெரிக்காவில் வசிக்கும் சித்ரா, ரவி ரவீந்திரன் தம்பதியின் மகள்களான சிறுமியர் மாயா, மாளவி இருவரின் கச்சேரி.

மாயா, மாளவி இருவருக்கும் வயது 16ம், 13ம். அமெரிக்காவில் ஓரிரு கச்சேரிகளைச் செய்திருந்தார்கள் என்றாலும், சென்னை மேடை இதுதான் முதலாவதாம்! ரவியும் அவரது மனைவியும் கர்நாடக சங்கீதக்காரர்கள் என்பதால், அவர்களது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.... நன்றாக!

கச்சேரி தொடங்கியது. நாட்டை விட்டு நாட்டுக்கு வந்து நாட்டையைப் பிடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். மகா கணபதி வராமல் வாதாபியே வந்தார். சரி... எங்கள் த்வனி எப்படி இருக்கிறது பாருங்கள் என்று ஹம்ஸத்வனியைக் காட்டினார்கள் போலும்! நினைத்துக் கொண்டேன்.

Advertisement

அவர்களிடம் பேசினால் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு துல்லியமாக வருகிறது. ஆனால் மேடையில் முருகா வா பாடலில் நம் தமிழர்களுக்கே உரிய ழகரம் அழுத்தந் திருத்தமாக வெளிப்பட்டது ஆச்சரியம்தான்! அதற்காகவே பாராட்டினேன்.

மெய்ப்பைத் திருத்தும் நம் மக்கள் ழவுக்கு சுவர்ல ஓடும் பல்லி ’ல’வா,  ஸ்கூல் போகும் பள்ளி ’ல’ வா, திங்கிற பழத்துல வர்ற ’ல’வான்னு லாலி பாடும் நிலையில், அமெரிக்காவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, வீட்டில் தமிழ்ப் பெற்றோரின் பேச்சைக் கேட்டு, பாட்டும் கற்று, ழ உச்சரித்த விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. 

ராம நீ ஸமானமெவரோன்னு சரியாக ஸ-வையும் உச்சரித்து, இசைக்கு, குறிப்பாக பாட்டுக்கு மொழி முக்கியம் என்பதை, அதுவும் உச்சரிப்பு மிகவும் முக்கியம் என்பதை நீரூபித்தார்கள். (ராம நீசமான மெவரோன்னு அபத்தமாக இங்குள்ள சிலர் பாடுவதைப் போல் இல்லாமல்!)

அன்றைய கச்சேரி அருமையாக அமைய இந்த இருவரின் பெற்றோர் மட்டுமல்லாமல், பக்க வாத்யமாக அமைந்த மூவரும் காரணமாயினர். அவர்கள் மூவரும் போட்ட போடில், சக்கரவியூகத்துக்குள் மாட்டிக் கொண்ட அபிமன்யு கதையானது இந்தச் சிறுமியர் நிலை. ம்... விரட்டு.. விடாதே.. பிடி... ம்... நிக்காதே... ஓடு.. ஓடுன்னு ஓட்டம் எடுக்க வைத்தார்கள் மூவரும்!

ஒருவர் சதீஷ்குமார். வயலின். நாளைய நம்பிக்கை நட்சத்திரம். அலுக்காமல் சலிக்காமல் பிடி கொடுக்காமல் பிடில் மூலம் கை கொடுத்தார். அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், இந்தப் பையன் நல்லா வாசிக்கறேன் இல்ல... என்று பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவரிடம் முணுமுணுத்தார்.

அடுத்தவர் பார்த்தசாரதி. லயம் காட்டி, தாளத்தைத் தப்பாமல் காட்டி, மிருதங்கத்தைத் தப்பி எடுத்தார்.

மூன்றாமவர்... ஹரிஹர சர்மா. கஞ்சிரா. பார்த்தசாரதி அடிக்க, ஹரிஹர சர்மாவின் கண்கள் துடிக்க... பரத நாட்டிய தாண்டவமெல்லாம் ஹரிஹர சர்மாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால்... ஹரிஹர சர்மாவுக்கு ஒன்று சொல்ல வேண்டும். வாயை அடக்கு என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அது அவ்வளவு நல்லது. ஆனால்... வாயில் அடக்கு என்று யாரும் சொல்லவில்லை. அது அவ்வளவு கெட்டது. வித்வானின் வித்வத், அவர்களின் செயலிலும் வெளிப்படும். கச்சேரி நேரத்திலாவது, வாயில் அடக்குவதைத் தவிர்க்கலாம்.

அனேகமாக இந்த வருட மார்கழி சீஸனில் மாயா மாளவிக்கு கச்சேரி வாய்ப்பு கிட்டும். குறைந்தது, மதிய நேரக் கச்சேரி வாய்ப்பேனும் நிச்சயம். அந்த அளவுக்கு குரல்... அதான் சாரீரம் இழையோடுகிறது. மாயாவின் குரலில் அவ்வளவு முதிர்ச்சி! அமெரிக்க மேடைகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்களாம்! இருந்தாலும் ஓரிரண்டு மைனஸ்களையும் சொல்ல வேண்டுமே.

முதலாவது, தண்ணீர் பாட்டிலில் நீர் அருந்தும்போது, மேடை நாகரிகம் கருதி சற்று தூக்கிக் குடிக்கலாம்- வாய் வைத்து உறிஞ்சாமல்!

அடுத்தது, ரசிகர்களின் கவனத்தை திசை திருப்புவதுபோல், அடிக்கடி கிசுகிசுக்கக் கூடாது. தேவையற்ற கொனஷ்டைகளைச் செய்யக் கூடாது. இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி காதைக் கடிக்காமல், கீழே அமர்ந்திருக்கும் தந்தை முகத்தை நோக்கியபடி இயக்குனரைக் கவனிக்காமல் இருந்தால் மிகவும் நல்லது. இசையிலேயே ரசிகர்களை கட்டிப் போட வேண்டும்.

மேடையில் 2 மணி நேரம் தொடர்ந்து அமர, முதலில் பயிற்சி எடுக்க வேண்டும்.

மாயா மாளவ கௌள ராகத்தின் பெயரை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துப் பங்கு போட்டுக் கொண்டுள்ள இருவரும், இந்தக் கச்சேரியின் வெற்றியையும் பங்கு போட்டுக் கொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.