இந்த நாளில் அன்று - (15.09.1989) - தமிழகத்துக்கு அரிசி தரக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் - மக்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
தமிழகத்துக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் போதுமான அளவு அனுப்புமாறு கோரி பிரதமர் ராஜீவ் காந்திக்கு தந்தி மற்றும் கடிதங்களை பொது மக்கள் அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
தமிழகத்துக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் போதுமான அளவு அனுப்புமாறு கோரி பிரதமர் ராஜீவ் காந்திக்கு தந்தி மற்றும் கடிதங்களை பொது மக்கள் அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
இதுபற்றி தமிழக அரசு சார்பில் பல முறை மத்திய அரசிடம் கேட்டாகிவிட்டது. பதில் எதுவும் கிடைக்கவில்லை. முதல்கட்டமாக லட்சக்கணக்கில் தந்தி மற்றும் கடிதங்களை அனுப்புவோம். இதற்கு என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம். அதன்பிறகு அடுத்த நடவடிக்கை பற்றி முடிவு செய்யலாம் என்றார் கருணாநிதி.
சென்னையில், ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
Advertisement
Advertisement
தமிழக அரசு, மத்திய அரசை அணுகி அரிசி கேட்காதது போலவும், கேட்டால் தருவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பது போலவும் சிலர் தவறான பிரசாரம் மூலம் மக்களை திசை திரும்ப முயற்சிக்கின்றனர். எனவே உண்மையை விளக்கவேண்டி உள்ளது.
ஆளுநர் ஆட்சியின்போது தமிழகத்துக்கு 80 ஆயிரம் டன் அரிசி தரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அரிசியின் அளவு 40 ஆயிரம் டன்னாகக் குறைக்கப்பட்டது.
கடந்த 8 மாதங்களில் இரண்டு முறை பிரதமரை நேரில் சந்தித்து அரிசியின் அளவை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் கவனிப்பதாகச் சொன்னார். கவனிக்க வில்லை. பலமுறை கடிதம் எழுதினேன். பதில் ஏதும் வரவில்லை. அதிகாரிகள் தரப்பிலும் பலமுறை கடிதம் அனுப்பப்பட்டது. பயனேதும் இல்லை.
காங்கிரஸ் கட்சி அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட மத்திய அரசு காரணமாக இருக்கக்கூடாது என்று கருதுகிறேன். ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
திடீரென்று மத்திய அரசு மீது நாங்கள் குற்றம் சுமத்தவில்லை. மத்திய அரசுடன் மோதக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அதனால்தான் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.
அரசி அளவை அதிகரிக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருமாறு உணவு அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி என்னிடம் கேட்டுள்ளார். அவர் உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், உண்ணாவிரதம் இருக்கும் நபர் நானாகத்தான் இருப்பேன் என்று கருணாநிதி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.