தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா? கண்டுபிடிப்பது எப்படி?
தங்க நகைகளில் கலக்கப்படும் ரேணியம் தூள் மற்றும் அதனைக் கண்டுபிடிக்கும் வழிகள் பற்றி...

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தங்கம் வாங்க நல்ல நேரம் என்று நினைக்கும் மக்களுக்கு, இடிபோல இப்படி ஒரு செய்தி வந்து சேர்ந்திருக்கிறது.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இருந்தாலும் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ரேனியம் கலந்து நகைகள் செய்யப்படுகின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்க ஹால்மார்க் மற்றும் தங்கத்தின் தூய்மை தன்மை குறித்து பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது, இந்தியாவின் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் வழங்கும் முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
Advertisement
Advertisement
நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஹால்மார்க் முத்திரை அளிக்கும் நிறுவனங்களிடையே நடக்கும் கூட்டுச் சதியால், தங்கத்தில் ரேனியம் தூள் கலந்து நகைகள் தயாரிக்கப்படுவதாக இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கின்றன. இந்த ரேனியம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதாம். ஒரு கிராம் ரேனியம் விலை சுமார் ரூ.5 ஆயிரம்.
ராஜஸ்தானில் நகைத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் நடந்த ஆய்வில், தங்கத்துடன் ரேனியம் தூள் கலந்து நகைகள் தயாரிக்கப்படுவதாகவும் ரேனியம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகம் என்பதால், இதுவரை தடை செய்யப்பட்ட உலோகங்களின் பட்டியலில் சேர்க்கப்படாததால் ஆய்வகக் கருவிகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே, போலியான நகைகள்கூட, தூய்மையான தங்க நகை சோதனைகளின்போது காட்டிக்கொடுக்கப்படாமல், தேர்ச்சிபெற்று ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன.
ரேனியம் கலந்த தங்க நகைகள், சுத்தமான தங்க நகைக்கான பல்வேறு கட்ட ஆய்வுகளில் தேர்ச்சி அடைவதும், 22 காரட் தங்க நகை என ஹால்மார்க் முத்திரை குத்தப்படுவதும் பெரும் கவலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஒரு நகையில் எந்த அளவுக்கு ரேனியம் கலக்கப்படலாம் என்றால்? சற்று அதிர்ச்சியான தகவல்கள்தான் வெளியாகியிருக்கின்றன. ஒரு கிராம் தங்கத்துடன் 7 கிராம் ரேனியம் தூளைக் கலக்கலாம், இதனுடன் ராஜஸ்தானில் தங்க நகைகள் செய்ய கலக்கப்படும் 0.75 கிராம் செம்பு போன்ற உலோகத்தையும் சேர்த்து 8.75 கிராமுக்கு மேலான தங்க நகைகள் செய்யலாம். இந்த நகையில் இருப்பது ஒரு கிராம் தங்கம். நகையின் மதிப்பு ஒரு சவரன்.
இவற்றில் இருக்கும் ரேனியத்தை எந்த இயந்திரமும் காட்டிக்கொடுக்காது. ஏனெனில், அந்த இயந்திரங்களுக்கு ரேனியம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு நகைக் கடையில் இருந்த ஹால்மார்க் முத்திரை பெற்ற தங்க நகைகள் சோதனை செய்யப்பட்டதில், அதில் பெருமளவில் ரேணியம் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ரேனியம் தூள் கலந்த தங்க நகைகளை வாங்கி ஏமாறும் வாடிக்கையாளர்களுக்கு ஹால்மார்க் முத்திரை மீதான நம்பிக்கையே போய்விடும் என்றும், ஹால்மார்க் முத்திரையிடும் மையங்களில் திடீர் ஆய்வுகள், தொடர்ச்சியாக கண்காணிப்பு, தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை போன்றவைதான் இந்த தவறுகளைத் தடுக்க உதவும் என்கிறார்கள்.
உண்மையில் ஒரு நகையில் இருக்கும் மிகச் சொற்ப தங்கத்துக்குத்தான், மொத்த நகையின் எடைக்கு தங்கத்துக்கான மதிப்பு, இந்த போலி நகைகளை செய்ய செய்கூலி, அதில் சேதாரமான ரேணியத்துக்கு வேறு தங்கத்துக்கு இணையான பணம், ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகள் என்றால் அதற்கு செய்கூலி அல்லது சேதாரத்தில் கூடுதல் தொகை போன்றவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து பல லட்சங்களை வாரிக் கொடுக்கிறார்கள் தங்கம் என்று எண்ணி ரேனியத்தை வாங்கும் மக்கள்.
ரேனியம் எந்த வகையான உலோகம்?
தொழிற்சாலை பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் ரேனியமும் ஒரு அரிய வகை உலோகம்தான். இதன் அடர்த்தியும் தங்கத்தின் அடர்த்திக்கு இணையானது. எனவே தங்கத்துடன் ரேனியத்தை கலக்கும்போது அந்த கலவையின் ஒட்டுமொத்த அடர்த்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாமல், தங்கத்தின் நிறம் மாறாமல் எடை மட்டும் அதிகரிக்க உதவுகிறது. ரேனியத்தின் அடிப்படையில் சாம்பல் நிறம் கொண்டது. தங்க நிற ரேனிய தூள்களாக வியாபாரிகளுக்கு வந்தடைகிறது.
வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்திலும்கூட, தற்போதைய எந்த தங்க நகை தூய்மை சோதனைகளில் ரேனியம் கலப்பை கண்டுபிடிக்க முடியாது என்பதே.
வேண்டுமென்றால் விரிவான எக்ஸ்ஆர்எஃப் (XRF) பகுப்பாய்வு மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வேண்டுமென்றால் இந்த ரேனியத்தைக் கண்டுபிடிக்க உதவலாம்.
இறுதியாக, தீயில் உருக்கினால், தூய தங்கம் ஒரு பக்கம் ஒதுங்கி, மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. ரேனியமாகக் கூட இருக்கலாம் என காட்டிக்கொடுக்கிறது. இதைத் தவிர வேறு வழியில்லை ரேனியத்தை அச்சு அசலாகக் கண்டுபிடிக்க.