FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நான் நவீனன் ஆனேன் - 22: சௌகார் ஜானகிக்கு வந்த கோபம்!

"ரங்கராட்டினம்' என்ற பெயரில் சௌகார் ஜானகி சொந்தப் படம் தயாரித்திருந்தார், படம் வெளிவந்திருந்த பொழுது பிரபல இசை விமர்சகர் சுப்புடு சென்னைக்கு வந்திருந்தார். தினமணி கதிருக்கு வந்த அவர், ஆசிரியர் சாவியிட

25 டிசம்பர் 2023, 7:29 pm IST
பகிர்:

"ரங்கராட்டினம்' என்ற பெயரில் சௌகார் ஜானகி சொந்தப் படம் தயாரித்திருந்தார், படம் வெளிவந்திருந்த பொழுது பிரபல இசை விமர்சகர் சுப்புடு சென்னைக்கு வந்திருந்தார்.

தினமணி கதிருக்கு வந்த அவர், ஆசிரியர் சாவியிடம், ""நான் ஏதாவது ஒரு தமிழ்ப் படத்துக்கு விமர்சனம் எழுதட்டுமா? என்று கேட்டார்.

""எழுதுங்களேன்'' என்ற சாவி வழக்கமாக விமர்சனங்கள் எழுதி வந்த என்னிடம் ""இந்த வாரம் சுப்புடு எழுதட்டுமே? ஒரு மாறுதலாக இருக்கும்'' என்றார்.

Advertisement

Advertisement

""ரங்கராட்டினம்'' படம் பார்த்துவிட்டு வந்த சுப்புடு சுவையாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ""சௌகார் ஜானகியின் இந்தப் படத்தை சவுக்காரம் போட்டுத் தான் கழுவ வேண்டும்!''

பட விமர்சனத்தைப் படித்த ஜானகி டெலிபோனில் என்னிடம் ""என் படத்துக்கு ஏன் அப்படி விமர்சனம் எழுதினீர்கள்? படம் அவ்வளவு அசுத்தமாகவா இருந்தது?'' என்று கோபத்துடன் கேட்டு விட்டு, ""உங்களைப் பற்றி உயர்வான கருத்து என்னிடம் இருந்து வந்தது. அதில் இருந்து அதலபாதாளத்துக்கு விழுந்து விட்டீர்கள்!'' எனக் குறையாத கோபத்துடன் முடித்து, போனை அதே சினச் சீறலுடன் "டொக்'கினார்.

முன் கோபம் கொண்ட சுபாவமுள்ள அவரிடம் ""அந்த விமர்சனத்தை நான் எழுதவில்லை'' என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டு ""பொய் சொல்கிறீர்கள்! அப்படி என்றால் எழுதியவர் யார்?'' என்றார்.

""பொதுவாகப் பட விமர்சனம் எழுதியவரின் பெயர் போடப்படுவது இல்லை. அதோடு எழுதியவர் யார் என்று உங்களிடம் சொல்வது பத்திரிகை தர்மத்திற்கு விரோதமானது. நான் எழுதவில்லை! அதுவே உண்மை'' என்றேன்.

""நோ!'' என்று அதே சினத்துடன் சொல்லிவிட்டுப் போனைத் துண்டித்து விட்டார் சௌகார் நடிகை. அதற்குப்பிறகு என்னை அவர் எங்காவது பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வார். காரின் கதவுக் கண்ணாடிகளை ஏற்றி விடுவார். எங்களிடம் இருந்து வந்த நீண்ட கால கண்ணியமான நட்பு, நல்ல எண்ணம் போய்விட்டன.

சில மாதங்களுக்குப் பிறகு படத் தயாரிப்பாளர் டி.ஆர்.ராமண்ணா தயாரிக்கத் திட்டமிட்டிருந்த "பணம் படைத்தவன்' என்ற படத்தில் நடிக்க மேனாட்டு முறையில் நடனம் ஆடத் தெரிந்த இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஒரு நடிகையை அவர் தேடிக் கொண்டு இருந்தார், சௌகார் ஜானகிக்கு அந்த நடனம் ஆடத்தெரியும் என்றேன். அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார்.

அப்போது ஜானகியிடம் அவர், நான்தான் சிபாரிசு செய்ததாக கூறி இருந்தார். ""அப்படியா?'' என்று கேட்டு விட்டு அதற்குப் பிறகு என்னிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அந்தப் படம் வெளிவந்து ஓடி முடிந்து விடவே, இனி விமர்சனம் எழுதியது யார் என்று சொன்னால் பரவாயில்லை என, எழுதியவர் ""பிரபல விமர்சகர் சுப்புடு'' என்றேன். ""அவர் அப்படித்தான் எழுதுவார்'' என்று சொல்லி தவறாக என்னை எண்ணியதற்கு வருத்தம் தெரிவித்தார்.

அதற்குப் பின் இப்போதும் முதுமை அணிந்து, நரை முடியுடன் காணப்படும் ஜானகி, குறையாத பிரியத்துடன் இருந்து வருகிறார். படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. சென்னை செனடாப் சாலையில் உள்ள சொந்த வீட்டில் இருந்து வருகிறார். அந்தப் புகழ்பெற்ற முன் கோபம்? அப்படியே இருக்கிறதா, அல்லது அகன்று விட்டதா என்று தெரியவில்லை?

கனபரிமான கம்பீரமான குணச்சித்திர நடிகர் எஸ்.வி. ரங்காராவைப் பேட்டி காண ஒரு நாள் போய் இருந்தேன். முன் கூட்டியே  போனில் பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. வீட்டு வாசலில் காவலுக்கு இருந்த கூர்க்கா என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. என் விசிட்டிங் கார்டை கொடுத்தும் அதை வாங்க மறுத்து, குறுக்கே நின்று கொண்டான்.

வருத்தமும், கோபமும் கொண்டு எதிரில் இருந்த நடிகை சாவித்திரியின் வீட்டிற்குள் சென்று போனில் பேசினேன். என்னிடம் பேசிய ரங்காராவ், ""உடனே வாருங்கள் உங்களை வரவேற்க நான் என் வீட்டு வாசல் கதவுக்கு அருகில் காத்து நிற்பேன்!'' என்றார்.

போனேன். என் கையைப் பற்றி வருத்தம் தெரிவித்த ரங்காராவ், அங்கு இருந்த கூர்காவைப் பயங்கரமாகப் பார்த்தார், இந்தியில் அவனிடம் பேசிவிட்டு, ""டிஸ்மிஸ்'' என்றார். பிறகு என்ன நடந்தது?

(இன்னும் வரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments