உறக்கம்
சுந்தருக்கு திடீரென்று உறக்கம் கலைந்து விழிப்பு வந்து பார்த்தபோது, அறையில் ஜகஜ்ஜோதியாய் குழல் விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. படுக்கைக்கு நேரெதிரே உயரத்தில் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரம் நேரம் பன்னிரண்டு நாற்பது எனக் காட்டியது.
சுந்தருக்கு திடீரென்று உறக்கம் கலைந்து விழிப்பு வந்து பார்த்தபோது, அறையில் ஜகஜ்ஜோதியாய் குழல் விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. படுக்கைக்கு நேரெதிரே உயரத்தில் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரம் நேரம் பன்னிரண்டு நாற்பது எனக் காட்டியது. பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, விஜி செல்போனில் சுடோக்கு போட்டுக் கொண்டிருந்தாள். பின்பக்கச் சுவரில் பொருத்தியிருந்த படிக்கும் விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. கைபேசியிலும் விளக்கெரியத்தான் விஜி விளையாடிக் கொண்டிருந்தாள்.
சுந்தருக்கு வியப்பாக இருந்தது. ஷேவிங் முடித்து விட்டு கண்ணாடிக்கு மேலேயுள்ள ஸீரோ வாட் விளக்கை அணைக்க மறந்துபோய் குளிக்கப் போய்விட்டால் கூட கோபித்துக் கொள்வாள். இப்படிப் பொறுப்பில்லாமல் இருந்தால் எலெக்ட்ரிஸிடி பில் எப்படி ஏறாமல் இருக்கும்? நம்ம பணம் வீணாகிறது மட்டுமில்லை, நாட்டுக்கே கஷ்டம்தானே - என்று ஊத ஊத பெரிய விஷயமாக்கி விடுகிறவள் இப்போது ஒன்றுக்கு மூன்று விளக்குகள் எரிய விட்டு சுடோக்கு!
ஒருவேளை தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறாளோ? ""என்னம்மா தூக்கம் வரலியா?'' என்று ஓர் உண்மையான பரிவோடு மனைவியைக் கேட்டான்.
Advertisement
Advertisement
""ஆமாங்க'' என்று இவன் பக்கம் திரும்பாமலேயே பதில் கூறினாள்.
சுந்தருக்கு வியப்பு கூடியது. படுக்கையில் படுத்து ஒரு பத்து நிமிடம் அன்றைய நாளேட்டின் உள்பக்கக் கட்டுரை ஒன்றை மேலோட்டமாகப் படிக்கத் துவங்கின உடனேயே உறக்கம் கண்ணைச் சுழற்றும் தருணம் வந்துவிடும் விஜிக்கு. அப்போதும் செய்தித்தாளைச் சுருக்கமில்லாமல் மடித்து கட்டிலுக்குக் கீழே வைத்து அதன் மேல் ஒரு பேப்பர் வெய்ட்டும் வைத்துவிட்டு படிக்கும் விளக்கை அமர்த்திவிட்டுத்தான் உறங்கப்போவது என - காலை கண் விழித்தது முதல் இரவில் கண்ணயரும் வரை எந்த நேரமும் நறுவிசாக இருக்கிறவளுக்கு என்ன ஆயிற்று இன்று?
""என்ன கவலை, விஜி?''
""இப்படி மாமாவும் அத்தையும் காசி, கயா, அலகாபாத்துன்னு மூணு வார டூர் கிளம்பிப் போய்ட்டாங்களே?''
சுந்தருக்கு வியப்பு மேலும் கூடியது. தாளவில்லை. மாமியார் - மருமகள் சண்டை என்று ஏதுமில்லையென்றபோதும், தனது பெற்றோர்களோடு ஈஷிக்கொள்கிற மாதிரியும் தன் மனைவி அன்பு காட்டியதில்லை என்ற ஏக்கம் சுந்தருக்கு அடிமனதில் எப்போதும் உண்டு.
தன் பெற்றோரைப் பற்றி சுந்தருக்கு எப்போதும் பெருமைதான். குழந்தைகள் ஆறாம் வகுப்பு - ஏழாம் வகுப்பு என்று தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டு தனியறையில் உறங்குகிற அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய நாள் வரை, தனக்குத் திருமணமாகி இந்த பதினான்கு - பதினைந்து ஆண்டுகளில் தவிர்க்க முடியாத வெளியூரில் நடக்கும் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணங்கள் என்றால்கூட ஓரிரு நாட்களில் திரும்பி ஓடிவந்து விடுவார்கள்.
""மருமக வேலைக்குப் போறவ; அவளுக்கு நாங்க இல்லாம சரிப்படாது'' என்று ஒரு தரம்;
""குழந்தைங்க பள்ளிக்கூடத்திலே இருந்து திரும்பி வரச்சே கவனிக்கணும்ல'' என்று இன்னொருதரம்;
இப்படி ஏதேதோ சொல்லிவிட்டு இரயிலில் இடம் கிடைக்காவிட்டால் கூட, பேருந்து ஏதாவது ஒன்றில் ஏறி இரவு முழுக்க உட்கார்ந்து பயணம் செய்து வந்து விடுவார்கள். உறவினர்களின் வற்புறுத்தலை மீறி தாங்கள் "தப்பித்து' வந்ததை பெற்றோர்கள் விவரிக்கும்போது சுந்தருக்குச் சிலசமயம் கண்கள் கலங்கிவிடும். தன்னை வளர்த்ததுபோல் தன் குழந்தைகளையும் வளர்க்கிற அவர்களது பொறுப்புணர்வைப் பார்க்கிறபோது, பெற்றோரைப் பற்றிய தனது பெருமை நியாயமானதுதான் என்று சுந்தர் அடிக்கடி தன்னைத்தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்வான்.
ஆனால் விஜியோ, ""நீங்க ஒரேபிள்ளை. பொண்ணு வீட்டுல போய்த் தங்க முடியாது. அதனால அவங்க நம்மளோட இருக்காங்க. இதுல பெருமைப்படறதுக்கு என்ன இருக்கு?''
என்று இடது கை சுண்டுவிரல் நக நுனியால் புறந்தள்ளி விடுவாள்.
அதுபோன்று புறந்தள்ளுகிற மனப்பான்மை விஜியிடம் உண்டென்றாலும், தொலைக்காட்சித் தொடர்களில் வருவதுபோன்ற கண்ணீர்த்தனமான சென்டிமெண்டாலிடி அவளிடம் அறவே கிடையாதென்றாலும், கடமை உணர்வு நிறைந்தவள் தன் மனைவி விஜி என்பதையும் சுந்தர் உணர்ந்திருந்தான். சொல்லப் போனால், பெற்றோரை தான் கவனிப்பதைவிட கூடுதலான அக்கறையுடன் கவனிக்கிறவள் விஜி. மாமாவுக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை இரண்டுமே உண்டென்பதால் மாதாமாதம், மளிகை சாமான்கள் ஏதாவது மறந்துபோனாலும் போவாள். அவருக்கு வாங்க வேண்டிய மருந்துகளை மறக்க மாட்டாள். அதேபோல் அத்தையின் இருதயத்தில் "மிஸ்ஸிங் - பீட்' உண்டென்பதால் மாதம் ஒருமுறை இருதய நிபுணரிடம் அழைத்துச் சென்று விடுவாள். அதற்கெல்லாம் தன் கணவன் தன்னைப் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்க மாட்டாள். அப்படி எப்போதாவது இவன் பாராட்ட நேர்ந்தாலும் கூட அதையும் புறந்தள்ளி விடுவாள்: ""என்னங்க? அடுத்தது, பல் துலக்கறது, குளிக்கறது இதுக்கெல்லாம் கூட பாராட்டுவீங்க போலருக்கே? அந்த அளவுக்கு ரொட்டீனான சமாச்சாரங்க, அத்தை மாமாவோட ஹெல்த்தை நான் பாத்துக்க வேண்டியது'' அது அவளோட எளிமையா? செருக்கா? என்றுகூட சுந்தரால் இனம் காண முடியாது.
அப்படிப்பட்ட நிலைமையில் அத்தை - மாமா மூன்று வாரம் தீர்த்த யாத்திரை என்று கிளம்பியிருப்பது - என்னதான் தொழில்ரீதியாக நடத்தப்படும் சுற்றுலா என்றாலும், சுற்றுலா நடத்துபவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்றாலும்கூட வருபவர்களில் முக்கால்வாசிப் பேர் இதேபோல் வயதானவர்கள் என்றாலும், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உடையவர்கள் தானென்றாலும் - விஜிக்குப் பாவம் பயமாகத்தானிருக்கும். இருந்தாலும், தன் பெற்றோரின் பிரிவு - அதுவும் மூன்றே மூன்று வாரங்களுக்கான பிரிவு - விஜியின் உறக்கத்தைக் கெடுக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது என்பது தெரிந்தபோது சுந்தருக்கு மனைவியைப் பற்றியும் பெருமையாக இருந்தது.
""மூணு வாரம்தானேம்மா? கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஓடிடும்...'' என்று கூறியபடியே மனைவியின் முதுகை வாஞ்சையுடன் வருடினான்.
""அது சரிங்க. நீங்க சுலபமா சொல்லிட்டு எட்டு மணி ஆஃபீஸ்னு காலைல ஏழு மணிக்கே ஓடிடுவீங்க. நான்தானே ஒத்தை ஆளா குழந்தைங்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பணும்... வீட்டைப் பூட்டிட்டு சாவிக்கொத்தை கவனமா கைப்பையில் போட்டுக்கணும். ஆஃபீஸ்ல எதுக்காவது ஹேண்ட்பேக்கைத் திறக்கச்சே, சாவிக்கொத்து என்னைப் பார்த்துச் சிரிக்கும் ஐயோ! வீட்டை சரியாப் பூட்டினமா இல்லையான்னு சந்தேகத்துலத் தவிக்கணும். கேஸ் அடுப்பை மூடினமா, ஆஃபிஸýக்கு ட்ரெஸ் பண்ணிக்கச்சே ஏஸி போட்டோமே திரும்ப ஆஃப் பண்ணமா. பையன்கிட்ட குடுத்தனுப்பின சாவியக் காணாமப் போக்கிட்டான்னா, ஸ்கூல்ல இருந்து திரும்பி வர்ற பிள்ளையும் பொண்ணும் ரோட்ல நிப்பாங்களேன்னு கவலைப்படணும். ஆஃபீஸ்ல வேலை ஓடாம தினம் தினம் தவிக்கணும். மூணுவாரம்தானேன்னு எவ்வளவு ஈஸியா சொல்றீங்க?'' என்று குரலில் ஓர் எரிச்சலோடு சொல்லியபடியே செல்போன், குழல் விளக்கு, படிக்கும் விளக்கு எல்லாவற்றையும் அமர்த்திவிட்டு உறங்கப் போனாள். தலையணையில் தலைபட்ட இரண்டே நிமிடங்களில் அவளிடமிருந்து எப்போதும் வரும் சன்னமான குறட்டை ஒலி இன்னும் வராததால், விஜி இன்னமும் உறக்கம் வராமல் தவிக்கிறாள் என்பது புரிந்தது.
இன்னொன்றும் புரிந்தது சுந்தருக்கு: ""அதானே பார்த்தேன், இப்ப புரியுது இவளோட இன்úஸôமேனியா'' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். மனைவியின் உறக்கம் குலைந்ததன் உண்மையான காரணம் புரிந்ததும், சுந்தருக்கு கலைந்திருந்த உறக்கம் மீண்டும் வர, புரிதலில் எழுந்த நிம்மதியில் உறங்கிப் போனான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.