90 வயது ஆணழகன்!
தொண்ணூறு வயதிலும் உடற்பயிற்சியால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார், ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனசாவா.
ஆணழகன்
தொண்ணூறு வயதிலும் உடற்பயிற்சியால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார், ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனசாவா. தன்னைவிட வயதில் 30 முதல் 40 வயது சிறியவர்களுடன் ஆணழகன் போட்டியில் பங்கேற்று அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
ஸ்பெயின் நாட்டின் சாண்டா சுசானாவில் ஆணழகன் போட்டியை சர்வதேச உடற்தகுதி, பாடிபில்டிங் கூட்டமைப்பு அண்மையில் நடத்தியது. அந்தப் போட்டியில் கலந்துகொள்ள தோஷிசுகே கனசாவா மனு செய்தபோது, பலகட்டத் தேர்வுகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டார். இதற்காக தோஷிசுகே கனசாவா ஜப்பானில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து ஸ்பெயின் சென்றார்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட அவர், தனது வயதைப் பொருள்படுத்தாமல் உடல் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு, போட்டி ஏற்பாடு செய்தவர்களையும், சக போட்டியாளர்களையும் மலைக்க வைத்தார். அவர் கூறியது:
'தொண்ணூறு வயதில், மற்றவர்கள் செய்யாத விஷயங்களை நான் செய்ய விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் பாடிபில்டிங்கைத் தொடர விரும்புகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கவும், நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கும் உணவுப் பழக்கம்தான் முக்கியக் காரணம். ஐம்பது வயதை எட்டியதிலிருந்து, பழுப்பு அரிசி, நாட்டோ (நொதிக்க வைக்கப்பட்ட சோயா பீன்ஸ் உணவு), மிசோ சூப் அடங்கிய பாரம்பரிய ஜப்பானிய உணவை உண்டு வருகிறேன். தசைகளை வலுவாக வைப்பதற்காக உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கிறேன்.
இதுவரையில் ஒரு நாள் கூட எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில்லை. போட்டியில் எனக்கு வெண்கலப் பதக்கம் கூட கிடைக்கவில்லை என்றாலும், உலகின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறேன். 93 வயதில் மீண்டும் ஒருமுறை போட்டியிடுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.
நான் போட்டியில் பங்கேற்றது முதியவர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும், தங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யவும் ஊக்குவிக்கும் என நான் நம்புகிறேன். ஒருவர் சாதிக்க நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்ற மன வலிமையும், மன உறுதியும் முக்கியமானவை. மக்கள் வயதாகும்போது தொடர்ந்து தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என்கிறார் தோஷிசுகே கனசாவா.