கேளீர் தமிழ் வரலாறு - 12: உலகளாவிய தமிழின் முதல் நாளிதழ் சுதேசமித்திரன்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி - 1892 மார்ச்சு இரண்டாம் தேதி - சிவப்பு எழுத்துகளால் பொறிக்கத்தக்க நாளின் நாயகர் கறுப்பு எழுத்துகளால் பொறிக்கத்தக்கவராகிவிட்டார்!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி - 1892 மார்ச்சு இரண்டாம் தேதி - சிவப்பு எழுத்துகளால் பொறிக்கத்தக்க நாளின் நாயகர் கறுப்பு எழுத்துகளால் பொறிக்கத்தக்கவராகிவிட்டார்!
சேலம் இராமசாமி முதலியார் காலமாகிவிட்டார்.
தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்குத் தமிழில் செய்தியைத் தெரிவிக்க, இரங்கல் வெளியிட ஏதேனும் வாய்ப்பிருந்ததா?
Advertisement
Advertisement
ஒன்றே ஒன்றுதான் இருந்தது.
அது -
'சுதேசமித்திரன்'!
என்ன எழுதியிருந்தது? யார் இரங்கல் தெரிவித்திருந்தார்?
அது அகால மரணம்!
'சாதல் இனிது' என மகாகவி பாரதி ஏன் எழுதினார்? அகால மரணங்கள் இனிதில்லைதானே! 1852 செப்டம்பர் 6இல் பிறந்தார் என எல்லோரும் சொல்கின்றார்கள்! பிறந்த தேதியில் பிழையேதும் இருக்குமோ? நாற்பது அகவைகூட நிறையவில்லையே! அதற்குள் எத்துணைப் பெரும்பணி! இறந்த வயதில் விவேகாநந்தர், பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு முன்னோடியோ! எல்லிஸின் பின்னவரோ!
'சேலம் இராமசாமி முதலியாரை இழக்கும் துர்ப்பாக்கியம் இத்தமிழ் நாட்டிற்கு நேர்ந்தது' என்று கண்ணீரை மையாக்கிக் கதறி எழுதினார் உ.வே. சாமிநாதய்யர், பிற்காலத்தில் தனது 'என் சரித்திரம்' நூலில்!
அதை மட்டும்தானா எழுதினார்?
'அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடிதுடித்துப் போனேன்.
'அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இராவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' என்றும் எழுதினார்.
தமிழில் எந்த நூலையும் பெரிதாக இயற்றாத ஒருவர், தமிழில் எந்த நூலையும் பதிப்பிக்காத ஒருவர் தமிழின் வரலாற்றில் மகத்தான பேரிடத்தைப் பெற்றுவிட்டார்! தமிழன்புதான் காரணம்! உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்வாழ்க்கைப் போக்கை மாற்றியமைத்ததன் மூலம் தமிழின் போக்கையே மாற்றி அமைத்தவர் அவர். பழந்தமிழ்க் கருவூலம் செப்பமாக நம் கைக்குக் கிடைக்க வித்திட்ட பெம்மான்!
உ.வே. சாமிநாதய்யருக்கு மட்டுமா? சி.வை. தாமோதரம் பிள்ளைக்கும் பதிப்புப் பணிக்குத் துணைநின்ற பெருந்தகை அவர்!
இறப்பதற்கு முந்தைய ஆண்டு. 1891. அந்தக் காலச் சென்னப்பட்டினத்தின் பிரமுகர்களெல்லாம் தமிழருமை உணரச் சீவக சிந்தாமணி குறித்துப் பட்டதாரிகள் கழகத்தில் (காஸ்மாபொலிடின் கிளப்பில்)ஆங்கிலத்தில் அரிய உரைநிகழ்த்தினார். குறுநூலாகவும் அப்போதே அதை வெளியிட்டிருந்தார். சிந்தாமணி இலக்கிய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட முதல் உரை இதுவாகத்தானே இருக்க வேண்டும். இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றோமா? 'சிந்தாமணிச் செல்வர்' சேலம் இராமசாமி முதலியார் என இனியாகிலும் தமிழுலகம் அவரை அழைக்கவேண்டும்.
வியப்பூட்டும் ஒரு நிகழ்வு. நம்பமுடிகிறதா? இந்தியர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க - செயல்பட முதன்முதலாக காங்கிரஸ் அமைப்பு தோன்றிய 1885ஆம் ஆண்டு. அதே ஆண்டு இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட லிபரல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இங்கிலாந்து மக்களிடையே உரையாற்ற, இந்தியர்களின் நிலையை இங்கிலாந்து மக்களுக்கு உணர்த்த இந்தியாவிலிருந்து மூன்று இந்தியர்களைக் கொண்ட குழு புறப்பட்டுச் சென்றது.
வங்காள மாகாணத்திலிருந்து மன் மோகன் கோஷ்; பம்பாய் மாகாணத்திலிருந்து நாராயண கணேஷ் சந்தவர்கர்; புகழ்பெற்ற சட்ட வல்லாளர்கள், பத்திரிகையாளர்கள். பின்னாளில் நீதிபதி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் என ஆனவர் சந்தவர்கர்! சென்னை மாகாணத்திலிருந்து ஒருபெரும் பிரதிநிதியாகச் சென்று இங்கிலாந்தில் லிபரல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முழங்கிய பெருமைக்குரியவர் சேலம் இராமசாமி முதலியார். இந்திய அளவில் ஒரு காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமைதாங்கும் வாய்ப்பும் தேடிவந்தது. தவிர்த்துவிட்டார். ஆனாலும் மாநாட்டில் பங்கேற்றுத் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். தேசத்தின் உரிமைக்காகத் தீவிரமாகக் குரல்கொடுத்தார்; செயல்பட்டார்.
ஜி. சுப்பிரமணிய ஐயருக்குப் பாரதியார் குறிப்பிட்ட தொடரை இவருக்கும் நாம் வழங்குவோம். அந்தக் காலத் 'தமிழ்நாட்டுத் தலைவர்'!
1892 மார்ச்சில் மறைந்த சேலம் இராமசாமி முதலியாருக்கு 1892 டிசம்பர் 28இல் அலகாபாத்தில் கூடிய எட்டாம் காங்கிரஸ் மாநாட்டில் மாநாட்டுத் தலைவர் உமேச சந்திர பானர்ஜி தனது உரையில் புகழாரம் சூட்டியிருந்தார். மகாகவி பாரதி எழுதிய காங்கிரஸ் வரலாற்று நூலான 'பாரத ஜன சபை' நூலிலிருந்து பாரதியின் தமிழில் அதனைக் காண்போமா?
'சென்னையிலிருந்து சேலம் இராமசாமி முதலியார் இறந்துபோன துக்கச் செய்தி வந்திருக்கிறது. அவர் நமக்காகப் பெருங்காளை போலே உழைத்தார். அவர் முதிர்ந்த அறிவும் தீரமுமுடையவர்'.
அவர் தமிழின் வரலாற்றிலும் இந்திய நாட்டின் வரலாற்றிலும் செயற்கரிய செய்த முன்னோடிப் பெரியர்! எத்தனை பெரியோரின் உழைப்பில், தியாகத்தில் இந்த இடத்தை நாம் அடைந்திருக்கின்றோம்!
இப்பேர்ப்பட்ட தமிழ்ப்பெருமகனுக்கு, பழந்தமிழைப் பயின்று திளைத்த, திளைக்க முயன்ற தமிழ்க் காதலருக்கு அவர் இறந்துபட்ட பொழுதில் உடனடியாகத் தமிழ்மண் தமிழ்மொழியில் இரங்கல் உரை வரைந்து நன்றி பாராட்டியது; இரங்கற்பாக்கள் படைத்துக் கண்ணீரைக் காணிக்கையாக்கியது; 'சுதேசமித்திரன்' வாயிலாக!
அந்தக் காலம் உலகளாவிய தமிழின் முதல் நாளிதழே தோன்றாத காலம்!
கண்ணுக்கெட்டிய தொலைவு தமிழ் இதழ்கள் அருகிக் கிடந்த காலம்!
ஆனாலும் ஜி. சுப்பிரமணிய ஐயர் தொடங்கி நடத்திய 'சுதேசமித்திரன்' 1892 மார்ச்சு 8 இதழ் வரலாற்றுச் சிறப்புடைய இரங்கல் உரையை எழுதிச் சேலம் இராமசாமி முதலியாரைப் போற்றியது! இந்த இரங்கல் உரையை இதழை நடத்திய ஜி. சுப்பிரமணிய ஐயர் அல்லது 1898 வரை உதவி ஆசிரியராக இருந்து இதழை முழுமையாகப் பார்த்துக்கொண்ட 'விவேக சிந்தாமணி'யின் ஆசிரியர் எனவும் அறியப்படும் சி.வி. சாமிநாத அய்யர் (ஒருகாலத்தில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' உரிமையாளராக இருந்த சதானந்தின் தந்தை) எழுதியிருக்கவேண்டும்.
கும்பகோணத்திலிருந்து 'வே. சாமிநாதன்' கையறுநிலைப் பதிகமே பாடியிருந்தார்! 'ஐயர்' என்னும் பின்னொட்டைத் தனிக் கடிதங்களில் மட்டுமல்லாமல் பொதுவிலும் அவரே பயன்படுத்தாத காலமொன்று இருந்திருக்கின்றது. வரலாற்றின் அரிய பதிவு அது!
'1885 ஆம் வருஷம் இங்கிலாந்தில் ஜெனரல் எலெக்ஷன் நடந்த பொழுது இத்தேசத்திலிருந்து இந்தியாவின் பிரதிநிதிகளாகச் சென்ற மூவரில் இறந்தவர் இவ்விராஜதானிக்குப் பிரதிநிதியாகச் சென்று, யாவரும் மெச்சும்படி அங்கு இத்தேச விஷயங்களைப் பற்றிப் பிரசங்கித்துப் பிரக்கியாதி பெற்றார்...
சேலம் கலக காலத்தில் லார்ட் ரிப்பன் சென்னைக்கு விஜயமாக வந்த பொழுது நிர்த்தோஷிகளான கனவான்களையெல்லாம் கவர்ன்மென்டார் கைதிகளாக்கி கலகத்தில் சம்மந்தப்பட்டவர்களென்று தண்ணீர் மேல ஏற்றித் தீபாந்திர சிûக்ஷ விதித்திருந்த அநியாயத்தை நிவர்த்திக்க வேண்டி அவருக்கு விண்ணப்பம் செய்துகொண்டு, தீபாந்தரத்துக்கனுப்பப்பட்டிருந்த கைதிகளையெல்லாம் விடுதலை செய்விக்கக் காரணமாயிருந்தார்...'
என்றெல்லாம் மிக விரிவாகச் 'சுதேசமித்திரன்' அவரது பெருந்தொண்டை எழுதியிருந்தது. அரும்பாடுபட்டு இதனைத் தேடிக் கண்டுபிடித்த என்னால் இதற்கு முந்தைய இதழைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இதழிலேயே இறப்புச் செய்தி முதலியவற்றைச் 'சுதேசமித்திரன்' எழுதியிருந்ததாம். 'ராய்பஹதூர் சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் சென்ற புதன்கிழமை காலஞ்சென்ற துக்கசமாசாரத்தையும், அதனால் இந்தியாவுக்கு நேர்ந்த நஷ்டத்தையும், இவ் விராஜதானிக்கு நேர்ந்த பெருநஷ்டத்தையும் பற்றித் துயருற்று அவர் மரணத்தால் நம் மனதுக்குத் தோன்றிய சிந்தனைகள் சிலவற்றைச் சென்ற சஞ்சிகையில் வெளியிட்டோம்' என்னும் குறிப்பால் அதனை அறிகின்றோம்.
உ.வே. சாமிநாதய்யர் படைத்த ஒன்பது பாடல்களால் ஆன உள்ளத்தை உருக்கும் கையறுநிலைக் கவிதையும் அதில் வெளிவந்திருந்தது. பழம்புலவராகச் செய்யுள் புனைபவர் மட்டுமல்லர், கவிஞரும் அவர் என்பதை இரங்கற்பாடல்கள் உறுதிசெய்திருந்தன. 'என் சரித்திரம்' நூலிலும், கி.வா. ஜகந்நாதன் தொகுத்துப் பதிப்பித்த 'தமிழ்ப் பா மஞ்சரி' நூலிலும் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க, இச் 'சுதேசமித்திர'னால் உ.வே. சாமிநாதய்யரின் கவிதையிலக்கியம் இப்போது கூடுதலாக ஆறு பாடல்களைப் பெற உள்ளது.
புதிதாகக் கிடைத்த ஆறு பாடல்களில் ஒரு பாடலை மட்டும் இங்கே காண்போம்.
'பார்படைத்தும் கல்விப் பயன்படைத்தும் மேலோர்சொல்
சீர்படைத்தும் செல்வத் திரள்படைத்தும் வாழ்ந்தோரில்
ஏர்படைத்த சேலத் திராமசா மிப்புயல்போல்
ஆர்படைத்தார் பூரணமா ஆயுள் படைத்திலனே!'
ஒரு பெருந்தமிழ்மகனுக்குச் 'சுதேசமித்திரன்' செலுத்திய இந்த அஞ்சலிகளும் சிவப்பு எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை!
ஒருபுறம் 'தமிழின் முதல் நாளிதழே தோன்றாத காலம்' எனச் சொல்லிவிட்டு, மறுபுறம் 'சுதேசமித்திரன்' வரைந்த இரங்கல் என்பது முரணாகத் தெரிகிறதா?
சுதேசமித்திரனின் வரலாறு இன்றைய தமிழுலகம் அறிய வேண்டிய வரலாறு. ஒரு காலக் கட்டத் தமிழின் வரலாறாகவும் தமிழ்நாட்டின் வரலாறாகவும் அது திகழ்கிறது!
ஆங்கில 'இந்து' நாளிதழைத் தொடங்கிய ஆறு நண்பர்களில் ஒருவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அவரும்
மு.வீரராகவாச்சாரியாரும் முதன்மையானவர்கள். ஆனால் ஜி. சுப்பிரமணிய ஐயர்தான் 'இந்து'வின் ஆசிரியர். இந்தியாவையே அந்த நாளில் சென்னையை நோக்கித் திரும்பவைத்தவர்.
ஆங்கிலமறியாத பெரும்பான்மைத் தமிழ்மக்களை அரசியல் விழிப்புணர்வு பெறச்செய்யத் தமிழில்தான் பத்திரிகை நடத்தவேண்டும் என்பதை உணர்ந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தமிழில் தொடங்கிய சொந்தப் பத்திரிகைதான் 'சுதேசமித்திரன்'.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! இருபதாம் நூற்றாண்டு பிறக்காத காலம் அது! 1882ஆம் ஆண்டு 'சுதேசமித்திரன்' முதன்முதலில் வார இதழாக மலர்ந்தது. பின்னர் வாரம் இருமுறை இதழாக வளர்ந்தது. 1897இல் வாரம் மும்முறை இதழாக வெளிப்படத் தொடங்கியது.
முத்தாய்ப்பாக 1899ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழின் வரலாற்றில், தமிழர்களின் வரலாற்றில் புதிய ஒளி தொடங்கியது! அப்போதிலிருந்துதான் 'சுதேசமித்திரன்' நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. அதைத்தான் பாரதி 'புதிய விழிப்பு' என வருணித்திருந்தார்.
வாரம் இருமுறையாக வெளிவந்த 'சுதேசமித்திர'னில்தான் 1892 மார்ச்சு 8இல் சேலம் இராமசாமி முதலியாருக்கு இரங்கல் உரை வெளிவந்தது.
சேலம் இராமசாமி முதலியார் நிகழ்வு ஓர் உதாரணம். இப்படி ஆயிரம் ஆயிரம் வரலாறுகளைச் சுமந்து வந்தது 'சுதேசமித்திரன்'!
வார இதழ்க் காலம், வாரம் இருமுறைக் காலம், வாரம் மும்முறைக் காலம், நாளிதழ்க் காலம் எனச் 'சுதேசமித்திரன்' வெளிவந்த காலங்களெல்லாம் சமகால எழுச்சியை, விளைவுகளை, பயன்களைத் தாண்டித் தமிழ்நாட்டு வரலாற்றை எதிர்காலச் சந்ததிக்காகப் பதிவுசெய்து வைத்த காலங்களாகவும் அமைந்தன.
1921 மார்ச்சு 15ஆம் தேதி பாரதியார் 'சுதேசமித்திர'னில் 'காலக் கண்ணாடி' என்னும் கட்டுரையினை எழுதியிருந்தார். இங்கிலாந்திலே அந்த ஆண்டு பெரிய நூலகங்களின் தலைவர்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பழைய பத்திரிகைகளையெல்லாம் விலைக்குக் கொடுத்தார்களாம். ஆனால் 'இலண்டன் டைம்ஸ்' பத்திரிகையை மட்டும் விலைக்குக் கொடுக்காமல் உலக சரித்திரத்திற்கு ஆதாரமாகச் சேகரித்து வைத்தார்களாம். பாரதியார் அந்த நிகழ்வைக் குறிப்பிட்டுவிட்டு, 'தமிழ்நாட்டில் அத்தகைய பதவி நம் 'சுதேசமித்திரனுக்கு'க் கடவுள் அனுக்ரகம் செய்யும்படி பிரார்த்திக்கிறேன்' என்று எழுதியிருந்தார்.
உலக சரித்திரத்திற்கு ஆதாரம் 'இலண்டன் டைம்ஸ்' என்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முதற் காற்பகுதிக் காலம் வரை, ஏன் 1934இல் 'தினமணி' தோன்றும்வரை தமிழ்நாட்டுச் சரித்திரத்திற்கு ஆதாரம் 'சுதேசமித்திரன்'!
'தமிழின் முதல் நாளிதழ்' எனச் 'சுதேசமித்திர'னைச் சொல்வதில் இதழியல் குறித்து நூல்களை எழுதியுள்ள அ.மா. சாமி கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார். அது குறித்தும், படிப்படியான 'சுதேசமித்திரன்' வரலாறு குறித்தும் பிறகு காண்போம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நாளிதழாகத் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் சரிபாதியைக் கடந்தும் வெளிவந்த தமிழின் முதல் நாளிதழ், ஒரே நாளிதழ் 'சுதேசமித்திரன்'தான்!
அதையும் தாண்டி உலகளாவிய தமிழின் முதல் நாளிதழ் 'சுதேசமித்திரன்'தான்!
அது என்ன 'உலகளாவிய தமிழின் முதல் நாளிதழ்'?
பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, ஐக்கிய மாகாணம், பர்மா, இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், கொச்சின் சைனா, சுமத்திரா, போர்னியோ, பிஜி, அயர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய பிற மாகாணங்களிலும் பிற நாடுகளிலும் என உலகளாவிய நிலையில் தமிழர் பிரதிநிதிகளால் 'நமக்காக ஓர் இதழ்' என வாங்கிப் படிக்கப்பட்ட நாளிதழ் என்னும் பெருமைகொண்டது 'சுதேசமித்திரன்'! உலகளாவிய நிலையில் பரவி வாழும் தமிழர்களின் சிக்கல்களைப் பேசிய முதல் இதழ் அது! உலகத் தமிழர்கள் தங்கள் குரல்களையும் மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தப் பயன்படுத்திய முதல் இதழ் 'சுதேசமித்திரன்'.
இவ்வளவு பெருமையாகப் பேசும் 'சுதேசமித்திர'னைப் பாரதிதாசன் பாராட்டி எழுதியுமிருக்கிறார்; விமரிசனம் செய்துமிருக்கிறார். பெரியார் விமர்சனம் செய்திருக்கிறார்! என்ன காரணம்?
இன்று 'சுதேசமித்திரன்' என்றதும் வரலாறு தெரியாமல் சிலர் ஒரே நிலையில் எண்ணிவிடுகின்றனர்.
தமிழின் மறுமலர்ச்சி இதழாகப் பிற்காலத்தில் நடைபோட்ட 'மணிக்கொடி'யின் வரலாற்றில் எப்படி முதன்மையாக மூன்று கட்டங்கள் உண்டோ அதைப்போலச் 'சுதேசமித்திரன்' வரலாற்றிலும் மூன்று கட்டங்கள் முதன்மையாக உண்டு.
ஜி. சுப்பிரமணிய ஐயர் காலச் 'சுதேசமித்திரன்',
ஏ. அரங்கசாமி ஐயங்கார் காலச் 'சுதேசமித்திரன்', சி.ஆர். சீனிவாசன் காலச் 'சுதேசமித்திரன்' என ஆசிரியர்களைப் பொறுத்து மூன்று கட்டங்கள் 'சுதேசமித்திரன்' வரலாற்றில் உண்டு. ஆசிரியர் மாற்றம், நிருவாக மாற்றம் ஆகியன இருப்பினும் 1962 வரை 'சுதேசமித்திரன்' தொடர்ந்து நடந்தது. பின்னர்ச் சென்றுதேய்ந்து இற்றது.
ஒரே பெயரிலிருந்தாலும் இதழின் ஆசிரியர்கள், நிருவாகம் ஆகியவற்றைப் பொறுத்து இதழின் போக்கில் சில மாற்றங்கள் இருக்குமல்லவா?
பெரியார் பொதுவாழ்வில் நகராட்சித் தலைவர் என்ற நிலையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே ஜி. சுப்பிரமணிய ஐயர் இறந்துவிடுகின்றார். முதற்கட்டச் 'சுதேசமித்திரன்' முடிவுக்கு வந்துவிட்டது.
பிற்காலச் 'சுதேசமித்திரன்' மீது சிலருக்குச் சில நோக்கில் விமர்சனம் உண்டு. எந்தக் காலம், யார் ஆசிரியர், என்ன காரணம் எனப் பாகுபடுத்திப் பார்க்க நமக்குத் தெரிய வேண்டும்.
இன்று தமிழுலகத்தில் ஓரளவேனும் 'சுதேசமித்திரன்' பெயர் உச்சரிக்கப்படுகின்றதென்றால், 'சுதேசமித்திர'னைத் தெரிந்திருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் மகாகவி பாரதியார். பாரதியார் வரலாறு பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் பேசும்போது 'சுதேசமித்திர'னை நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படிப் பேசும்போது 'சுதேசமித்திரன்' வரலாறு பற்றிய மேலே குறிப்பிட்ட தெளிவு நமக்கு அவசியம்!
நாமும் இப்போது பாரதியின் வரலாற்றைப் பேசுவோம்! அதில் 'சுதேசமித்திரன்' வரலாறு கலந்துதானே இருக்கும்!
தொடக்கத்தில் ஜி. சுப்பிரமணிய ஐயர் காலச் 'சுதேசமித்திர'னிலும், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ. அரங்கசாமி ஐயங்கார் காலச் 'சுதேசமித்திர'னிலும் பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார். 'சுதேசமித்திர'னில் பாரதியாருக்கு முன்னும் பின்னும் சமகாலத்திலும் சி.வி. சாமிநாத அய்யர், குருமலை சுந்தரம் பிள்ளை, அ. சுப்பிரமணிய பாரதி, எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் முதலியோர் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
பத்திரிகைத் துறையில் பாரதியின் குரு ஜி. சுப்பிரமணிய ஐயர்தான்! 'பரமகுரு' ஆனது எப்படி?
இறக்கும் வரை பாரதியாருக்கு ஜி. சுப்பிரமணிய ஐயர் மேல் அன்பும் மதிப்பும் இருந்துவந்தது. சிலகாலம் அரசியல் களத்தில் விமர்சனமும் இருந்தது.
புதுச்சேரி வாழ்க்கையில் வ. ராமசாமி ஐயங்கார் என்னும் வ.ரா. உள்ளிட்டவர்களிடம் பாரதியார் 'சுதேசமித்திரன்' கால நிகழ்வுகளைக் கதைபோல நினைவுகூர்ந்திருக்கிறார். 'மகாகவி பாரதியார்' நூலில் வ.ரா. அவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்.
பாரதியார் பேசுவதுபோலவே வ.ரா. எழுதியிருக்கும் இரு பகுதிகளைப் பார்த்துவிடுவோமா?
'நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குவதில் அய்யர் (சுப்பிரமணிய அய்யர்) ரொம்ப 'கொம்பன்'; என்றாலும், பத்திரிகைத் தொழிலில் எனக்குப் பழக்கமும் தேர்ச்சியும் வரும்படி செய்தவர் அவர்தான். அவரை நான் ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்'.
'அய்யர் என்னை, அன்பைக் கொண்டு ஏய்த்தது உண்மை; என்றாலும், இந்த மொழிபெயர்ப்பு வேலை எனக்கு எவ்வளவு ஒத்தாசை செய்தது தெரியுமா? இங்கிலீஷ் ரொம்ப நயமான பாஷையானதால், இங்கிலீஷ் எழுத்தின் கருத்து சிதைந்து போகாமல், தமிழர்களுக்கு அதை ஸ்வாரஸ்யமாய்ச் சொல்லும் பொருட்டு, நேரான தமிழ்ச் சொற்களை நான் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. தமிழ் பாஷையின் கம்பீரமும் ரஸமும் அப்பொழுது எனக்கு இன்னும் தெளிவாய்த் தெரிந்தன'.
நாமும் தமிழுக்குள் நெருக்கமாகப் புழங்கினால் தமிழ்மொழியின் கம்பீரமும் சுவையும் இன்னும் தெளிவாகத் தெரியும், பாரதிக்குத் தெரிந்தது போல.
ஜி. சுப்பிரமணிய ஐயர் பாரதியைச் சுடச் சுடக் காபி கொடுத்து நயமாக ஏய்த்து வேலை வாங்கிய சுவையான கதையெல்லாம் இன்னும் இருக்கின்றன. வ.ரா. நூலில் படித்துக்கொள்ளுங்கள்.
இப்போது 'பரம குரு' இரகசியம் வெளிப்பட்டுவிட்டது.
தமிழின் வரலாறு பற்றிய சுவையான 'பரம இரகசியங்கள்' பல இன்னும் வெளிப்பட இருக்கின்றன, 'சுதேசமித்திர'னிலிருந்து!
(தொடரும்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.