மருமகளுக்கு 'எஸ்'... மகளுக்கு 'நோ'
கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டம், நவல்குண்ட்டில் குடும்ப ரகசியம் காக்கப்படுகிறது.
கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டம், நவல்குண்ட்டில் குடும்ப ரகசியம் காக்கப்படுகிறது. அதாவது, திருமணத்துக்குப் பிறகு சொந்த மகள் கணவன் வீட்டுக்குச் சென்றுவிடுவாள். அங்கு ரகசியத்தைக் கூறி விடுவாள். அதனால் சொல்லித்தரமாட்டார்கள். மாறாக, வீட்டுக்கு வரும் மருமகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். அது, ஜமக்காளம் தயாரிப்பின் கலையும், ரகசியமும்தான்!
கர்நாடகாவின் பாரம்பரியமான, புவிசார்குறியீடு பெற்ற ஜமக்காளத்தை 'நவல்குண்ட் துர்ரி' என்று அழைக்கின்றனர். 16- ஆம் நூற்றாண்டில் பிஜாபூரிலிருந்து நாவல்குண்ட்டுக்கு வந்த நெசவாளர்களால் இது அறிமுகமானது.
Advertisement
Advertisement
பஞ்சு நூல், கைத்தறியைப் பயன்படுத்தி இங்கு பெண்கள் தறியில் அமர்ந்து ஜமக்காளத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவற்றின் பின்னணியில் பெரும்பாலும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, வெள்ளை நிற வண்ணங்கள் இருக்கும். தாயம் ஆடும் பலகை வடிவம், மலர்கள், அலை, பல இயற்கை வடிவங்கள் உள்ளிட்டவை ஜமக்காளத்தில் இடம்பெறுகின்றன.
தரையில் விரித்துப் படுக்கும் ஜமக்காளம், வழிபாடுகளில் பயன்படுத்தும் சிறிய வண்ண பாய் என இரு வகைகளைத் தயாரிக்கின்றனர். முன்பு 75 பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்ட நிலையில், தற்போது 35 பெண்கள் மட்டுமே உள்ளனர்.
'ஜமக்காளா', 'சத்ரஞ்சி' எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஜமக்காளம் 6 அடி முதல் 8 அடி வரை கொண்டது. பருத்தி ஜமக்காளங்கள், செயற்கைப் பட்டு ஜமக்காளங்களும் தயாராகி விற்பனைக்கு வருகின்றன. விலை ரூ.350 முதல் ரூ. 2,500 வரை. தரத்துக்கேற்ப விலை மாறுபடுகிறது. ரூ.30 ஆயிரத்துக்குத் தரமான ஜமக்காளம் உண்டு.
மயிலை மையமாகக் கொண்ட ஜமக்காளம் இங்கு மிகவும் பிரபலம். 'நவல்குண்டா' என்றால் 'மயில்களின் குன்று' எனப் பொருள்.