பைக் பந்தயத்தில் பறக்கும் பெண்!
தாய்லாந்து நகோன்சாய்ஸ்ரியில் அண்மையில் நடைபெற்ற எஃப்.ஐ.எம். ஆசிய மகளிர் கோப்பை சர்க்யூட் பைக் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜகதிஸ்ரீ குமரேசன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தாய்லாந்து நகோன்சாய்ஸ்ரியில் அண்மையில் நடைபெற்ற எஃப்.ஐ.எம். ஆசிய மகளிர் கோப்பை சர்க்யூட் பைக் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜகதிஸ்ரீ குமரேசன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜப்பானின் அயானே காமகாரி முதலிடத்தையும், கொரியாவின் மின்சே கிம் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.
சென்னையைச் சேர்ந்த இருபத்து இரண்டு வயதான ஜகதிஸ்ரீ, சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் படித்தவர். 2021-ஆம் ஆண்டு டிவிஎஸ் ரூக்கீஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட முதல் பெண், 2024- இல் 'கேர்ள்ஸ் ஸ்டாக் 165 சிசி சர்க்யூட் ரேஸிங்', 'நேஷனல் டிராக் ரேஸிங்' ஆகிய போட்டிகளில் தேசிய சாம்பியன், 2025-26 சீசனில் கேர்ள்ஸ் ஸ்டாக் 165சிசி நேஷனல் சாம்பியன்ஷிப் என்று பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.
சர்வதேச அளவில் சாதிக்கும் ஜகதிஸ்ரீ கூறியது:
Advertisement
Advertisement
'2019-ஆம் ஆண்டில் தந்தையுடன் சென்னைக் கிழக்குக் கடற்கரை சாலையில் பைக்கில் சென்றபோது, 'டீம் ஒன் ரேசிங்' குழுவினர் பயிற்சி பெறுவதைப் பார்த்தே எனது வாழ்க்கைப் பயணம் பைக் ரேஸிங் என்று தீர்மானித்தேன்.
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த பைக் ரேஸிங் உலகில் 'டீம் ஒன் ரேசிங்' மூலம் அடியெடுத்து வைத்தேன். தேவையான உபகரணங்களை வாங்குவதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, பந்தயங்களில் வாய்ப்புகள் கிடைக்காமை போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பயிற்சியாளர் முகமது
ஹனீஃபின் வழிகாட்டுதலின்படி, பெரிய ரக மோட்டார் சைக்கிள்களில் பயிற்சியைத் தொடங்கினேன். ஹெல்மெட் அணிந்து அதன் முகப்புத் திரையை இறக்கிய பிறகு, பைக்கை ஓட்டுவது ஆணா பெண்ணா என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
2021 டி.வி.எஸ். ரூக்கீஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் வெற்றி மேடை ஏறிய முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றேன். பந்தயப் பாதையின் மேற்பரப்புகளைப் பகுப்பாய்வு செய்தல், டயர் தேய்மானத்தைக் கையாளுதல், ஒவ்வொரு வளைவுக்கும் முன்பாகவே துல்லியமான பிரேக்கிங் புள்ளிகளைக் கணித்தலில் தேர்ச்சி பெற்றேன். முழு நேரப் பந்தயத்துக்கு 2023-இல் தயாரானேன். இந்திய தேசிய டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப்பில் முதல் தேசியப் பட்டத்தை வென்றேன்.
2024 -ஆம் ஆண்டில் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. சாம்பியன்ஷிப்பை முடிப்பதில் ஆழ்ந்த உறுதியுடன் இருந்த நான், இறுதிச் சுற்று முடியும் வரை அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்தேன்.
'மெட்ராஸ் சர்வதேச சர்க்யூட்' பந்தயத்தின் கீழ் 2024 தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், மீண்டும் கடுமையான விபத்தில் சிக்கினேன். கீழே விழுந்து கிடக்காமல், எழுந்து பைக்கைத் தூக்கி நிறுத்தி, கடுமையான வலியையும் தாங்கிக்கொண்டு ஆறாவது இடத்தைப் பிடித்தேன்.
கடினமாகப் போராடிப் பெற்ற அந்தப் பத்து புள்ளிகளே, கேர்ள்ஸ் ஸ்டாக் 165சிசி பிரிவில் எனது முதல் சர்க்யூட் தேசியப் பட்டத்தை உறுதி செய்யப் போதுமானதாக இருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், மற்றொரு டிராக் ரேசிங் தேசியப் பட்டத்தையும் மூன்றாவது முறையாக வென்றேன்.
'டோடூ' என்று நான் அழைக்கும் யமஹா பைக்கை ஓட்டி, அக்டோபர் 2025-இல், சென்னையில் நடைபெற்ற 4-ஆவது சுற்றின்போது, தகுதிச் சுற்றின் முதல் சுற்றிலேயே விபத்துக்குள்ளானதால் பின்னடைவு ஏற்பட்டது.
13 பைக்குகள் கலந்து கொண்ட பந்தயத்தில் நான் கடைசி இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. களத்தில் முன்னேறி, மூன்று சுற்றுகளுக்குள் முன்னிலை பெற்று, பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றேன். அதே சீசனில், 'பெட்ரோனாஸ் டிவிஎஸ் இந்தியா ஒன்-மேக் சாம்பியன்ஷிப்'பில் பெண்கள் பிரிவில் முதலாவதாக வந்தேன்.
இடைவிடாத உள்நாட்டு வெற்றி, சர்வதேசப் போட்டிகளுக்கான கதவுகளைத் திறந்தது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த எஃப்.எம்.எஸ்.சி.ஐ.யால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், தாய்லாந்தில் நடைபெற்ற எஃப்.ஐ.எம். ஆசிய மகளிர் சர்க்யூட் ரேசிங் கோப்பையில் கலந்து கொண்டேன்.
தைவானில் நடைபெற்ற ஆசிய சர்க்யூட் ரேசிங் கோப்பையில் பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தேன். தேசிய அளவில் 40-க்கும் மேற்பட்ட வெற்றிகள், சர்வதேச அளவில் 3 முறை முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளேன். எனது லட்சியம், சர்வதேசப் பந்தயங்களில் உலகச் சாம்பியனாக வருவதாகும்'' என்கிறார் ஜகதீஸ்ரீ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.