FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கயிற்றுக் கட்டில்களுக்கு மவுசு!

உடலுக்கு உறுதியளிக்கும் இயற்கை உணவுகள், பயன்தரும் பாரம்பரிய பொருள்களைப் பயன்படுத்துவதில் அண்மைக்காலமாக மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

31 அக்டோபர் 2026, 10:25 pm
பகிர்:

பெ.பெரியார்மன்னன்

உடலுக்கு உறுதியளிக்கும் இயற்கை உணவுகள், பயன்தரும் பாரம்பரிய பொருள்களைப் பயன்படுத்துவதில் அண்மைக்காலமாக மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் பித்தளைப் பாத்திரங்கள், பானங்களில் கோலி சோடா உள்ளிட்ட பாரம்பரியப் பொருள்களின் விற்பனையும் பெருகிவருகிறது.

இந்த வரிசையில் உடல் வலியை நீக்கி, நிம்மதியான உறக்கம் தரும் பாரம்பரிய கயிற்றுக் கட்டில்களும் இடம்பிடித்துள்ளன. மரச்சட்டம் பூட்டப்பட்ட கட்டில்கள் மட்டுமின்றி, குறைந்த விலையில் கிடைக்கும் - நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்ட கயிற்றுக் கட்டில்களையும் தேடிப்பிடித்து வாங்கிப் பயன்படுத்துவதில் மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வாழப்பாடியைச் சேர்ந்த கயிற்றுக் கட்டில் தயாரிக்கும் தாய் -மகளான சந்திரகலா, மணிமேகலை ஆகியோர் கூறியதாவது:

'கிராமப்புறங்களில் முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை வீடுகள்தோறும் தாழ்வாரத்திலும், விளைநிலத்தின் களத்து மேடுகளிலும் மரச் சட்டங்களால் பூட்டப்பட்டு நார், நூல் கயிற்றால் பின்னப்பட்ட கயிற்றுக் கட்டில்கள் காணப்பட்டன. தோட்ட வேலையை முடித்து வீட்டுக்கு வந்து உணவு உண்டதும், காற்றோட்டமாக வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்து ஓய்வெடுத்தல் என்பது விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தனிச் சுகத்தை அளித்தது.

தற்போது விதவிதமான தோற்றத்தில் இரும்பு, மரப்பலகைக் கட்டில்களும், பஞ்சு, ஸ்போம், ஸ்பிரிங் மெத்தைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால், கயிற்றுக் கட்டில்களின் பயன்பாடு அடியோடு குறைந்துபோனது. இதனால், பாரம்பரிய கயிற்றுக் கட்டில்களின் விற்பனையும் சரிந்துபோனது.

பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருள்களின் ஒன்றான கயிற்றுக் கட்டில்களுக்குக் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மரச்சட்டங்களைவிட, சதுர மற்றும் உருளை வடிவ இரும்புக் குழாய்களை சட்டமாகப் பொருத்தப்பட்ட கட்டில்கள் எடை குறைவாக இருப்பதால், கையாளுவது சுபலமாக உள்ளது. இதுமட்டுமன்றி, நீடித்து உழைக்கும் என்பதாலும், இந்த வகைக் கயிற்றுக் கட்டில்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

முதியவர்களிடம் கயிற்றுக் கட்டில் புனையும் முறை குறித்து அறிந்துகொண்டு, இரும்புக் குழாய்களால் பூட்டப்பட்ட கட்டில்களில் கயிற்றைப் புனைந்து நாங்கள் இருவரும் விற்பனை செய்து வருகிறோம். எஃகு இரும்பு, மரக்கட்டில் வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரத்துக்குள் கயிற்றுக் கட்டில்கள் கிடைக்கின்றன. இதனால் பலரும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்று பயன்படுத்துகின்றனர். இதனால், எங்களைப் போன்ற கைவினைஞர்களுக்குக் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

முன்னோர் பயன்படுத்திய பாரம்பரியப் பொருள்களை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது மனநிறைவைத் தருகிறது' என்கின்றனர் சந்திரலேகா, மணிமேகலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments