முகப்பு
சிறுவர்மணி

ஒப்பரிய உலக நகரங்கள் ஏதென்ஸ்

கிரேக்க நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் 3000 ஆண்டு கால பழமை வரலாற்றைத் தன்னுள் அடக்கியுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கிரேக்க நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் 3000 ஆண்டு கால பழமை வரலாற்றைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கத்திய கலாசாரத்திற்கும் நாகரிகத்திற்கும் தொட்டிலாக விளங்குவது. உலகிற்கு மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்திய நகரம் ஏதென்ஸ்.
 கிரேக்கப் பெண் கடவுளான "ஏதெனா' என்ற பெயரிலிருந்து ஏதென்ஸ் என்ற பெயர் வந்திருக்கக்
 கூடும் என்று கூறப்படுகிறது.
 பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த மாமன்னர்களால் ஆளப்பட்ட ஏதென்ஸ், கிரேக்க இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு மையமாகத் திகழ்கிறது.
 வரலாற்றுப் புகழ்பெற்ற தத்துவ மேதைகளான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்கள், அரசியல் வல்லுநர்கள் வாழ்ந்து சிறப்பித்த நகரம் ஏதென்ஸ்.
 ஐரோப்பாக் கண்டத்தில் 8-வது பெரிய நகரமான ஏதென்ஸின் மக்கள்தொகை சுமார் 40 லட்சமாகும். மத்தியதரைக் கடலுக்கும், ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது ஏதென்ஸ்.
 மே, ஜூன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஏதென்ஸிற்குச் சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள்.
 ஒலிம்பிக் ஆலயம்: கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கி கி.மு. 2-ஆம் நூற்றாண்டு வரை 400 ஆண்டுகளாகக் கட்டி முடிக்கப்பட்ட கிரேக்க நாட்டிலேயே மிகப்பெரிய ஆலயம்.
 முன்னர் 56 அடி உயரமுள்ள 104 பிரமிப்பூட்டும் சலவைக்கல் தூண்கள் இந்த ஆலயத்தைத் தாங்கி நின்றன. ஆனால், இப்போது பதினைந்து தூண்கள் மட்டுமே பிரமிப்புக்கு ஆதாரமாகக் காட்சியளிக்கின்றன.
 பார்த்தினான் ஆலயம்: ஏதெனா தேவிக்கு ஆலயமான இது பார்த்தினான் என்று அழைக்கப்படுகிறது. அக்ரோபோலிஸ் என்ற இடத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் மிகவும் முக்கியமானது. இது கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் கிரேக்க பாரம்பரியத்தையும், அதன் புகழ் வாய்ந்த கலாசாரத்தையும் பறைசாற்றுகிறது.
 கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த கட்டடக் கலை வல்லுநர்களால் கட்டப்பட்ட பார்த்தினான் ஆலயம் 15 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. அது காண்போரை பிரமிக்க வைக்கிறது.
 சிண்டக்மா சதுக்கம்: நகரத்தின் நடுநாயகமாகத் திகழும் இந்தச் சதுக்கத்தில்தான் ஏதென்ஸ் நகர சட்டமன்றம், அமைச்சகங்கள் அமைந்துள்ளன. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் பன்னாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
 இச்சதுக்கத்தில் உள்ள பூங்கா, அதில் நிறுவப்பட்டுள்ள சிலைகள், நீர்ச்சுனைகள், பசுமை குலுங்கும் மரங்கள் கண்ணைக் கவர்கின்றன. அத்துடன் பண்டைக்காலம் முதலே ஆயிரக்கணக்கான புறாக்கள் இங்கு வாழ்கின்றன. இவை அனைத்தும் பிரபலமானவை.
 சலவைக்கல் விளையாட்டரங்கம்: சின்டக்மா சதுக்கத்திற்குத் தென்மேற்கில் கள்ளி மர்மரோ விளையாட்டரங்கு உள்ளது. புராதன ஒலிம்பிக் மைதானத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்ட இந்த அரங்கில் கி.பி. 1896-ஆம் ஆண்டில் முதன்முதலாக புதிய ஒலிம்பிக் போட்டிகள் அரங்கேறின. உலகிலேயே முற்றிலும் சலவைக் கற்களால் கட்டப்பட்ட ஒரே விளையாட்டரங்கம் இதுதான்.
 கட்டடங்கள்: பார்த்தினான் ஆலயம் மட்டுமல்ல. ஏதென்ஸ் நகரில் தொன்மைமிக்க பல அருமையான கட்டடங்கள் உள்ளன. ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் பழமையான கட்டடம், தேசிய நூல் நிலையம், ஏதென்ஸ் கலைக்கழகக் கட்டடம் ஆகிய இம்மூன்றும் சிறந்த கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
 குன்றுகள்: ஏதென்ஸ் நகரைச் சுற்றிலும் பல குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் மிக உயரமானது லிகாபட்டஸ் குன்று. இதன் உச்சியிலிருந்து ஏதென்ஸ் நகரத்தை முழுமையாகப் பார்க்க முடியும்.
 பாராளுமன்றம்: கிரேக்கக் கட்டடக் கலையின் ஒப்பரிய சிறப்பினைப் பிரதிபலிக்கும்விதமாக கிரேக்க பாராளுமன்றக் கட்டடம் இன்றும் திகழ்கிறது. நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட இந்தக் கட்டடம் 1910-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு இன்று பாராளுமன்றமாகவும் அதிபர் அலுவலகமாகவும் இருந்து வருகிறது.
 நினைவு இல்லம்: பாராளுமன்றத்தின் அருகிலுள்ள "அடையாளம் தெரியாதவர்களுக்கான கல்லறை' அதிபரின் காவல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது. கிரேக்க நாடு இதுவரை ஈடுபட்ட போர்களில், நாட்டுக்காக உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான வீரர்
 களின் நினைவாக உருவாக்கப்பட்டது. இந்த நினைவு இல்லத்தில் கி.பி. 1821-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டம் மற்றும் அதன் பின்னர் நடந்த எல்லாப் போர்களின் விவரங்களும் அடங்கிய பட்டயங்களைக் காணலாம்.
 அருங்காட்சியகங்கள்: ஏதென்ஸின் மிக நீண்டகால வரலாற்றை விளக்கும் வகையில் அருங்காட்சியகங்கள் பல உள்ளன. இங்குள்ள தேசிய புதைபொருள் ஆராய்ச்சி அருங்காட்சியகம் உலகத்தின் தலைசிறந்த பத்து அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
 அகோரா: அகோரா என்றால் சந்தை என்று பொருள்படும். பழங்காலத்தில் மக்கள் அதிகமாகக் கூடுமிடமாக அகோரா விளங்கியது. பழைய அகோரா, ஏதென்ஸ் நகரத்தின் வர்த்தகம், அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் மைய அங்கமாகக் கருதப்பட்டது.
 பழைய அகோராவுக்கு கிழக்கில் கி.மு. முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட புதிய அகோரா ரோமானிய அகோரா என்றும் சீஸர் அகஸ்டஸ் அகோரா என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அருகில் மாசிடோனியா நாட்டு வானியல் நிபுணரால் ஒரு நீர்க்கடிகாரம் அமைக்கப்பட்டது. இதனைக் காற்றுக் கோபுரம் என்றும் அழைக்கின்றனர்.
 அக்ரோபோலிஸ்: கி.மு.5-ஆம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்று விளங்கியது அக்ரோ போலிஸ் எனப்படும் புனிதமான குன்று. இது கடல் மட்டத்திலிருந்து 156 மீட்டர் உயரத்தில் மூன்று ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டின் மன்னர்கள் உருவாக்கிய சிலைகள் மற்றும் கலைப் பொருள்களுக்குமான இருப்பிடமாக இது திகழ்ந்தது. இதனைச் சுற்றிலும் கிரேக்க சாம்ராஜ்யத்தின் பல முக்கிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்கள் போர்க்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கும் இடங்களாகப் பயன்பட்டன.
 இந்தக் குன்று, அதிலுள்ள பாறைகள், அவற்றின் இடையே காணப்படும் புற்செடிகள் என இன்றும் அழகாகக் காட்சியளிக்கிறது.
 ஏதென்ஸ் நகரில் உள்ள கோளரங்கம் உலகின் மிகச் சிறந்த கோளரங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது.
 ஏதென்ஸ் மற்ற நகரங்களுடன் ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு துறைமுகம், ஒரு விமானநிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
 பண்டைக் காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலாப் பயணிகளும் விரும்பிச் செல்லும் இடங்களில் ஏதென்ஸ் நகரம் முக்கிய இடம் பெற்றுள்ளது.

 

முழு கட்டுரையைப் படிக்க →