முகப்பு

சிறுவர் நூல் அரங்கம் - 29-11-2026

இன்றைய கல்வி நிலையில் உள்ள பிரச்னைகளையும், அதுதொடர்பான புரிதல்கள், மாணவர்களை மையப்படுத்தும் வகையிலான கல்வித் திட்டங்கள் குறித்தான ஆழ்ந்த கட்டுரையை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

28 நவம்பர் 2026, 9:34 pm
சிறுவர் நூல் அரங்கம் - 29-11-2026
பகிர்:

மாணாக்கருக்கான இக்கிகய்!

கல்விக்கான திசை வழித் தேடல்:

ஓர் ஆய்வுப் பார்வை

Advertisement

Advertisement

ஆர்.வெங்கடேசன்

ரூ.100

இன்றைய கல்வி நிலையில் உள்ள பிரச்னைகளையும், அதுதொடர்பான புரிதல்கள், மாணவர்களை மையப்படுத்தும் வகையிலான கல்வித் திட்டங்கள் குறித்தான ஆழ்ந்த கட்டுரையை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் நிலையில், இந்த நூல் அதற்கு ஆதரவுக்கரத்தை நீட்டுகிறது.

மாணவர்களின் தனித்திறன்களை அறிதல், அதற்கேற்றவாறு கல்வியைப் புகட்டுதல், தொழில் முறைக் கல்வி, இலட்சியப் பணிக்கான வழிகாட்டுதல், விருப்பத்துடனான கல்வி என்று மாணவர்கள் விரும்பும்படியான கல்வியை அளிப்பதே அவர்களை எதிர்காலத்தில் உத்வேகத்துடன் செயல்பட வைக்கும் என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவு முறையில் கல்வி நிலையங்கள், கல்வித் துறையில் தேவைப்படும் மாற்றங்கள் போன்றவற்றை தெளிவாக அவர் விளக்கியுள்ளார்.

(கற்க கசடற பதிப்பகம், மதுரை-625 020. ✆ 80720 87341.

விண்வெளிக்குப் போகலாமா?

தேமொழிச்செல்வி

ரூ.99

ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவி இளம்பிறை யுவிகா பயிற்சிக்குத் தேர்வாகி இஸ்ரோ செல்கிறாள். அங்கு மனிதி என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோட்டுடன் உரையாடும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கிறது. மனிதிக்கு எனக் குறிப்பிட்ட உருவம் கிடையாது. நாம் விரும்பும் உருவம், உடைகளை நாமே தேர்ந்தெடுத்தால் போதும், அடுத்த நொடி அந்த உருவத்துடன் மனிதி ரோபோ நம் கண் முன் தோன்றிவிடும். அந்த நபர் போலவே நமக்குப் பிடித்த மொழியில் பேசும்.

இளம்பிறை தனக்குப் பிடித்த கல்பனா சாவ்லா உருவத்தை விண்வெளி உடையுடன் தேர்ந்தெடுக்க, அவருடன் தமிழில் உரையாடுகிறது மனிதி ரோபோட். அப்போது இளம்பிறைக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு மனிதி ரோபோட் விளக்கம் அளித்திருப்பதைக் குழந்தைகளும் புரியும் வகையில் எளிய நடையில் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

(விங்ஸ் வெளியீடு, சென்னை -600 083. ✆ 96003 98660)

அரசியல் அரசி சத்தியவாணி முத்து

நிவேதிதா லூயிஸ்

ரூ. 60

சென்னை ஜார்ஜ் டவுனில் வாழ்ந்த நாகைநாதன் - ஜானகி அம்மாள் தம்பதியருக்கு 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் மகளாகப் பிறந்தவர் சத்தியவாணி. 'என் மகள் படிப்பாள். பெரிய ஆளாக வருவாள். அவளுக்குச் சின்ன வயதில் திருமணம் செய்து வைக்க மாட்டேன்'' என்று கூறிய அப்பா நாகைநாதனின் உறுதி சத்தியவாணியை மருத்துவர் ஆக்கியது.

'தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுவது உரிமையைத் தவிர, சலுகையல்ல' என்று முழங்கியவர். தமிழ்நாட்டின் முதல் தலித் பெண் அமைச்சர், முதல் தலித் பெண் மத்திய அமைச்சர், திராவிடக் கட்சிகளின் முதல் பெண்

மத்திய அமைச்சர் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட சத்தியவாணி முத்துவின் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. சங்கீதா பிரியாவின் படங்களும் ஆங்காங்குப் பொருத்தமாக அமைந்துள்ளன.

(ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, சென்னை -600 083. ✆ 96003 98660)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.