புதிய விடியல்! ஆசிய கண்ட அளவில் ஜிம்னாஸ்டிக்கில் இந்திய வென்ற தங்கமும் வெள்ளியும்!
ஜிம்னாஸ்டிக்ஸிலும் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்வதற்கான நம்பிக்கையை இந்திய வீரர்கள் ஹர்ஷித் தாமோதரன், அக்ஷத் பஜாஜ் ஆகிய இருவரும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஜிம்னாஸ்டிக்ஸிலும் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்வதற்கான நம்பிக்கையை இந்திய வீரர்கள் ஹர்ஷித் தாமோதரன், அக்ஷத் பஜாஜ் ஆகிய இருவரும் ஏற்படுத்தியுள்ளனர். இருவரும் உலக அளவில் சாதனை புரியத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் ஜுன்யியில் அண்மையில் நடைபெற்ற 13-ஆவது சீனியர், 19-ஆவது ஜூனியர் ஆண்கள் கலைநயமிக்க உடல் வளை கலை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 'வால்ட்' பிரிவில் ஹர்ஷித் தாமோதரன், அக்ஷத் பஜாஜ் முறையே முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர்.
ஜூனியர் ஆண்கள் வால்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதால், ஹர்ஷித் தாமோதரன் வரலாற்றைப் படைத்தார். 'கருவி சார்ந்த இறுதிப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லும்' என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஹர்ஷித்தின் வெற்றியானது 'உடல் வளை கலை' வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
வால்ட் இறுதிப் போட்டியில் 13.649 புள்ளிகளுடன் ஹர்ஷித் தாமோதரன் தங்கப் பதக்கத்தை வெல்ல, அக்ஷத் பஜாஜ் 13.433 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஜெர்மனியில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற 'டிடிபி போக்கல் 2026 ஜூனியர் உலகக் கோப்பைக்கான போட்டி'யில் ஹர்ஷித் தாமோதரன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தார். இந்த வெற்றியானது புதிய விடியலாகும்.
இதுவரை பதக்கம் வென்றோர்:
மெர்சினில் நடைபெற்ற 2018 உலகக் கோப்பையிலும் தாஷ்கண்டில் நடைபெற்ற 2024 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கம் வென்ற தீபா, 2016 ரியோ ஒலிம்பிக்கில் 'ப்ரோடுனோவா' சாகசத்தை நிகழ்த்தி உலகையே தன் பக்கம் ஈர்த்தார். புதுதில்லியில் நடைபெற்ற 2010 காமன்வெல்த் போட்டிகளில் ஆஷிஷ் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார். மெல்போர்னில் நடைபெற்ற கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் அருணா ரெட்டி வெண்கலம் வென்றார். கடந்த சில ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை போட்டிகளில் பிரணதி நாயக் பல வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இருந்தாலும், சர்வதேச அளவில் ஆண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களுக்குத் தங்கப் பதக்கம் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. அந்தத் தடையை ஹர்ஷித் தாமோதரன் 'ஜுன்யி' நகரில் நடைபெற்ற போட்டியில் தகர்த்தெறிந்தார். ஆசியக் கண்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளின் வரலாற்றிலேயே இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றது இதுவே முதல் முறையாகும்.
ஒடிஸ்ஸா அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் பயிற்சித் திட்டத்தில் தாமோதரன், பஜாஜ் இருவரும் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இருவருக்கும் சீனியர் பிரிவு போட்டிகளில் பதக்கங்களை வெல்வது இலக்காக மாறியுள்ளது. 2030 காமன்வெல்த் போட்டிகள், இந்தியா நடத்த விரும்பும் 2036 ஒலிம்பிக் போட்டிகளில் தாமோதரன், பஜாஜ் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.