FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அசத்தும் அறுபது வகை தோசைகள்! விலையோ ரூ.70 வரைதான்!

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அறுபது வகையான தோசைகளைச் சுட்டு, திருச்சியில் உணவகம் நடத்தி வருகிறார் முப்பத்து நான்கு வயதான பொறியியல் பட்டதாரி ஆர்.கார்த்திகேயன்.

Updated On : 12 ஜூலை 2026, 4:08 am IST
பகிர்:

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அறுபது வகையான தோசைகளைச் சுட்டு, திருச்சியில் உணவகம் நடத்தி வருகிறார் முப்பத்து நான்கு வயதான பொறியியல் பட்டதாரி ஆர்.கார்த்திகேயன். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இங்கு சாப்பிடும் பொருள்கள் இலவசம்.

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள காட்டூரைச் சேர்ந்த பி.எச்.இ.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என்.ராஜகோபால் - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த எஸ்.மங்கையர்க்கரசி தம்பதியரின் மகன் இவர்.

அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'ஆட்டோமொபைல் துறையில் 2012 -ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றேன். விராலிமலையில் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தேன். பின்னர், எண்ணெய், எரிவாயு தொடர்பாகப் படிக்கச் சென்றேன். தாயின் உடல்நிலை சரியில்லாதபோது, படிப்பை பாதியில் கைவிட்டேன். அதன்பின் சென்னைக்குச் சென்று ஆறு கார்களை வாங்கி, ஓலா உள்ளிட்ட நிறுவனங்களுக்காக இயக்கினேன். கரோனா ஊரடங்கின்போது, கார்களை விற்றுவிட்டு ஊருக்குத் திரும்பினேன்.

வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தேன். சற்று வித்தியாசமாகவும் தோசை உள்ளிட்ட உணவுகளை விதவிதமாக நானும், எனது அக்காவும் தயாரித்தோம். வித்தியாசமான சுவையாக இருந்தது என உறவினர்கள், நண்பர்கள் பாராட்டியதால் உணவுத் தொழிலில் கால்பதிக்கும் எண்ணம் வலுப்பெற்றது.

2021-ஆம் ஆண்டு முதல் 'திருமுருகன் இட்லி ஷாப்' என்ற பெயரில், காட்டூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைக்கு எதிர்புறத்தில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை டிபன் கடை நடத்தி வருகிறேன். எனக்கு உறுதுணையாக மனைவி மணிஷா இருக்கிறார். கடையில் மைசூர் மசால் தோசை, பூண்டு தோசை உள்ளிட்ட 60 வகையான தோசைகள் ரூ.40 முதல் ரூ.70 வரையில் விற்பனை செய்கிறோம்.

திரைப்படம் ஒன்றில், நடிகர் வடிவேலு ஹோட்டலுக்குச் சென்று ஊத்தப்பம் ஆர்டர் செய்வார். அது பார்ப்பதற்கே சிரிப்பாக இருக்கும். அதுபோல், எனது கடையிலும் நெய் தாராளமாக ஊற்றி, வடிவேலு சொல்வது போல ஊத்தப்பம் தயாரிக்கிறோம். இதன் பெயரே 'வடிவேலு ஊத்தப்பம்'. இதன் விலை ரூ.70.

மும்பையிலும் 'திருமுருகன் இட்லி ஷாப்'பின் கிளை உள்ளது. இதனை மனைவி மணிஷாவின் தங்கை மஞ்சரியின் குடும்பத்தினர் பார்த்துக் கொள்கின்றனர். இங்கு போலவே அங்கும் 60 வகையான தோசைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், ராணுவ வீரர்களுக்கும் இலவச உணவு

பொறியியல் முதலாண்டு நான் படித்தபோது, சாலை விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் டிரைவர்களின் துரித நடவடிக்கையால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டேன். ஆம்புலன்ஸ் டிரைவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டிபன் கடை தொடங்கிய நாள் முதல் அவர்கள் சாப்பிட்டால் பணம் வாங்குவதில்லை.

எனது தாத்தா ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதால், ராணுவத்தினர் வந்து சாப்பிட்டாலும், அவர்களுக்கும் விலையில்லாமல் உணவை வழங்குகிறேன். வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவில் காலையிலும் உணவு வழங்க முடிவெடுத்துள்ளேன்'' என்கிறார் ஆர்.கார்த்திகேயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments