மாற்றம்.. முன்னேற்றம்...
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியை அடுத்த மத்தூர் எனும் குக்கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு, செயல்படும்...
பெ.பெரியார்மன்னன்
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியை அடுத்த மத்தூர் எனும் குக்கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு, செயல்படும் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், சேலம் கிழக்கு' என்ற தன்னார்வ இயக்கம் சிறப்புறச் செயல்படுவதோடு, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த அமைப்பை ஓராண்டுக்கு முன் தொடங்கிய ஆட்டோ ஓட்டுநர் வேலுசாமியிடம் பேசியபோது:
Advertisement
'குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு உலகம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. சமூகத்தின் மீதும், நாட்டு வளர்ச்சியின் மீதும் அதீத அக்கறை கொண்ட இவருடைய பெயரில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுக்காக இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி, தனித்திறன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, பரிசுகளைப் பெற வழிகாட்டி வருகிறேன்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற சங்கச் செயலாளர் வேலுசாமி, கலைச்செல்வி, மஞ்சுளா, பவித்ரா, முருகேசன், மலர்க்கொடி, முருகன் உள்ளிட்டோர் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 12 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனர். இதில் கலைச்செல்வி, மஞ்சுளா, வேலுசாமி, பவித்ரா, முருகேசன் ஆகிய ஐந்து பேரும் குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மதுரை அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டுச் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில் பங்கேற்ற வேலுசாமி, தனம் ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் பெற்றனர். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் நடைபெற்ற குண்டு எறிதலில் வேலுசாமி முதலிடமும், நித்திஷ்குமார் இரண்டாமிடமும், மஞ்சுளா மூன்றாமிடமும், 50 மீட்டர் ஓட்டத்தில் சௌந்திரம் மூன்றாமிடமும் பெற்றனர்.
சேலத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மஞ்சுளா, பார்வையற்றோர் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், காதுகேளாதோர் பிரிவில் திவ்யா வெள்ளிப் பதக்கமும், உடல் இயக்கக் குறைபாடு பிரிவில் கலைச்செல்வி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, பல்வேறு சமூக நிகழ்வுகளிலும் எங்கள் சங்கத்தினர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். இந்தப் பணிகளுக்கு என்னோடு சங்க நிர்வாகிகள் வேலுசாமி, கூத்தன், வேல்முருகன் உள்ளிட்டோரும், வாழப்பாடி விளையாட்டுச் சங்கம், அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட சமூக அமைப்பினரும் உறுதுணையாக இருக்கின்றனர்'' என்கிறார் வேலுசாமி.