அபிராமி அந்தாதியும் சகலகலாவல்லி மாலையும்
கர்நாடக இசையுலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ள இசைக்கலைஞர் காயத்ரி கிரீஷ், பக்தி இசைத் துறையில் இரு புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
கர்நாடக இசையுலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ள இசைக்கலைஞர் காயத்ரி கிரீஷ், பக்தி இசைத் துறையில் இரு புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை ஆகிய இரண்டுக்கும் மகாகவியின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைக்க, கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா விளக்கவுரை அளிக்க, அதை இனிமையான குரலில் பாடி இருக்கிறார் காயத்ரி கிரீஷ். இவற்றின் காணொலி 'யூ டியூப்'-இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.
அவரிடம் பேசியபோது:
"அபிராமி அந்தாதி காணொலி எனது நீண்ட நாள் கனவுத் திட்டம். 'அபிராமி அந்தாதி'யில் ஆரம்பத்தில் வரும் விநாயகர் துதி, இறுதியில் வரும் நூற்பயனோடு சேர்த்தால் மொத்தம் 102 பாடல்கள். அத்தனைக்கும், ராஜ்குமார் பாரதி அற்புதமாக இசையமைத்தார்.
Advertisement
Advertisement
அவற்றுக்கு எளிமையாகவும் பக்திபூர்வமாகவும் விளக்க உரை வழங்கினார் முத்தையா.
பதிவான பாடல்கள், விளக்கவுரைக்கான காணொலிகளை அம்பாள் கோயில்களுக்கே நேரில் சென்று படம் பிடித்ததே சவாலான பணியாகும். இதற்குக் காஞ்சி பீடாதிபதி, தருமபுரம் ஆதீனம் ஆகிய இருவரும் அருளாசி உரை வழங்கினர். இந்தப் பணிக்கு திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழச் செய்தது.
அதன்படி, விநாயகர் துதியில் ஆரம்பித்து, முதல் சில பாடல்களை திருக்கடையூரில் படம் பிடித்தோம். பத்து, பன்னிரண்டு பாடல்களுக்கு ஒரு தலம் என்ற அளவில், அடுத்தடுத்து திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சி கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், கொல்லூர் மூகாம்பிகை கோயில், சிருங்கேரி சாரதா பீடங்களுக்குச் சென்று பாடல்கள் பாடி, விளக்கமளித்துப் படம்பிடித்தோம். முடிவில் திருக்கடையூரிலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தோம்.
நாங்கள் கொல்லூருக்குச் சென்றபோது அங்கே கடும் மழை. மழை விட்ட நேரத்தில், படம் பிடிக்க வேண்டி இருந்தது.
கோயில்களில் முறைப்படி அனுமதி பெற்று, பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் படம் பிடித்தோம். அபிராமி அந்தாதி பாடல்களை பலகாலம் கேட்டிருக்கிறோம் என்றாலும், அதற்குள் இவ்வளவு கருத்துகள் பொதிந்துள்ளதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது என்று பலரும் பாராட்டினர்.
இதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றி, மூவரும் ஆலோசனை செய்தோம். அப்போது முத்தையா, 'குமரகுருபரர் எழுதியது சகலகலாவல்லி மாலை. அதை அதிகமாக யாரும் எடுத்துப் பாடியதில்லை. மொத்தமே பத்துப் பாடல்கள்தான்' என்று கூறினார். உடனடியாக எங்கள் கூட்டு முயற்சி துவங்கியது.
ராஜ்குமார் பாரதி இசை அமைக்கும் பாணியே சற்று வித்தியாசமானது. அவர் எந்த ஒரு பாடலுக்கும் இன்ன ராகத்தில் இசை அமைப்பது என்று முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு இசை அமைக்க உட்காரமாட்டார். பாடலைக் கேட்டு அதனை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னரே ராகத்தை முடிவு செய்வார். சகலகலாவல்லி மாலை பாடல்களுக்கு அவர் இசை அமைத்த ராகங்கள் சரஸ்வதியோடு தொடர்புடைய கல்யாணி, வாகதீஸ்வரி போன்றவையாக அமைந்தது அந்தக் கலைவாணியின் அருள்தான்.
ஒவ்வொரு பாடலுக்கும் எளிமையாகவும், சுருக்கமாகவும் சுமார் இரண்டரை நிமிடத்தில் விளக்க உரை அளித்தது முத்தையாவின் ஆழ்ந்த ஞானமும், எதையும் வெகு எளிமையாகச் சொல்லும் ஆற்றலும்தான்.
சகலகலாவல்லி மாலை காணொலியை கூத்தனூர் கோயிலில் படம் பிடிக்க விரும்பியபோது அது
இயலவில்லை. அப்போது இணையத்தில், சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் சரஸ்வதி கோயில் இருப்பது தெரிய வந்து, அங்கே படப்பிடிப்பை முடித்தோம்.
அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை இரண்டுமே பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பு முறையில் அல்லாத செய்யுள் வடிவம் கொண்டவை. அவற்றுக்கு இசை அமைப்பது பெரும் சவால்.
ராஜ்குமார் பாரதி அதனை அபாரமாகச் செய்து கொடுத்தார்.
இதுபோன்ற பக்திப் பாடல்களை பலரும் ரசித்துக் கேட்பார்கள், பாடுவார்கள். அவற்றின் அர்த்தம் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் இவை, ரசிகர்களுக்கு மட்டுமில்லை, முழுமையாக அர்த்தம் புரிந்து பாடியது எனக்கும் புதியதொரு அனுபவத்தை அளித்தது'' என்றார் காயத்ரி கிரீஷ்.
-எஸ். சந்திரமெளலி