தெய்வத்தை அலங்கரிப்பதே தெவிட்டாத இன்பம்
ஆண்டு முழுவதும் திருவிழாக்களால் திளைத்திருக்கும் மாநகரம் மதுரை.

ஆண்டு முழுவதும் திருவிழாக்களால் திளைத்திருக்கும் மாநகரம் மதுரை. இங்கு நான்கு மாசி வீதிகளில் சுவாமியும், அம்மனும் பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே வரும் திருவீதியுலாவைக் காண கண்கோடி வேண்டும்.
சுவாமி திருவீதியுலாவின்போது பக்தர்கள் கண்ணில் முதலில்படுவது சுவாமி அலங்காரம்தான். ஆடை, ஆபரணங்கள், பின்னல் ஜடை உள்ளிட்ட அனைத்தும் பார்க்க வேண்டிய பரவசமாகும். சுவாமி அலங்காரங்கள் செய்யும் மீனாட்சி அம்மன் கோயிலின் இரா.சாமிநாத பட்டரிடம் பேசினோம்.
'எனக்கு பத்து வயதானபோது ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. கார்ட்டூன் புத்தகங்களைப் பார்த்து வரையத் தொடங்கினேன். ஓவிய ஆசிரியர் சங்கரநாராயணனிடம் பகுதி நேரப் பயிற்சி பெற்றேன். ஆதர்ச குரு சில்பியின் தெய்வீக ஓவியங்களை மாடலாக வரைவேன்.
Advertisement
Advertisement
சிற்பக் கல்லூரியில் பயிலவேண்டும் என்ற ஆசை இருந்தது. மாறாக செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் படித்தேன். அதிலும் ஓவியம் ஒரு முக்கியமான பாடமாக இருந்தது.
உறவினர்கள் பூஜை செய்யும் கோயில்களுக்கு சந்தனக்காப்பு, உற்சவர் அலங்காரத்துக்கு அழைப்பார்கள். அதிலிருந்து அலங்காரம் செய்வதில் ஈர்ப்பு ஏற்பட்டது.
முதலில் தனிப்பொறுப்புடன் அர்ச்சகராகப் பணியைத் தொடங்கியது மதுரை அழகப்பன் நகரில் உள்ள கனகதுர்கை அம்மன் கோயிலில்தான். பின்னாளில் எங்கள் குடும்பத்தார் பூஜை செய்யும் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்துவிட்டேன்.
33 ஆண்டுகளாக அலங்காரப் பயணம்
எனது ஓவியத் திறமையையும், அலங்கார கலைத் திறமையையும் கண்டு ஊக்கப்படுத்தியவர்கள் மூலம் 1993-ஆம் ஆண்டு முதல் நவராத்திரி விழாவில் தொடங்கிய பயணம் தனிப்பட்ட முறையில் 33 வருடங்களாகத் தொடர்கிறது. வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதற்காக சுவாமி அலங்காரங்களை விதவிதமாகச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன்.
சுவாமி அலங்காரப் பொருள்களை சொந்தமாகவே தயாரித்துக் கொள்வேன். வீணாகப் போகும் பொருள்களை வைத்தும் அலங்காரம் செய்கிறேன். இதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்குவது தேவையில்லாமல் போகிறது.
சிங்கப்பூரில் இருந்தபோது, 4 ஆண்டுகளில் பல கோயில்களின் திருவிழாக்களுக்கு சுவாமி அலங்காரம் செய்துள்ளேன். தமிழ்நாட்டில் பல ஊர்களிலும், புதுச்சேரியிலும், கர்நாடகம், ஆந்திரம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று அலங்காரங்கள் செய்துள்ளேன்.
மதுரையில் பல கோயில்களில் நவராத்திரி அலங்காரங்களும் திருவிழாக்களுக்கான அலங்காரமும் செய்துள்ளேன். சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட சமய கோயில்களில் அவரவர் சாஸ்திர சம்பிரதாயப்படி அலங்காரம் செய்து கொடுத்துள்ளேன். இதுவரையில் 200 கோயில்களுக்கு மேல் அலங்காரம் செய்துள்ளேன்.
ஒவ்வொரு முறையும் சுவாமி அலங்காரம் செய்யும்போது, எனது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப் பெறுவதை உணர்கிறேன். அலங்காரங்களை ஆத்ம திருப்திக்காகச் செய்கிறேன். எங்களைப் போன்ற கலைஞர்களை ஆதரிப்பவர்களால் தான் இதுபோன்ற கலைகள் வெளியே தெரியவருகிறது.
கலைஞன் என்பவன் புதிது புதிதாகச் சிந்தித்து தன்திறமையை மேம்படுத்த முயற்சி செய்யவேண்டும். அதுதான் கலைகளை வளர்க்க உதவும். சமூக ஊடகங்கள் மூலம் நான் செய்யும் அலங்காரங்கள் வெளிக்கொணரப்படுகிறது.
வெண்கலம், ஐம்பொன் சிலைகளுக்கும் அலங்காரம் செய்திருக்கிறேன். சிறிய சிலை
களில் விரும்பிய வண்ணம் செய்வேன். பெரிய சிலைகளுக்கு அலங்காரம் செய்தால், சிற்ப சாத்திர பிரமாணப்படி (அளவுப்படி) சரியாக வராது என்பதால், பித்தளை அல்லது ஐம்பொன் கை, கால்களை மட்டும் வைத்து துணியால் சுற்றிக்கட்டி உடல்வாகு ஏற்படுத்தி அலங்காரம் செய்கிறேன்.
சாதனைகள்
கோவை சாய் பாபா நகர் விநாயகர் கோயிலில் உள்ள பெருமாள் சந்நிதியில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில், ஒரே நாள் இரவில், 10 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஓர் அலங்காரம் என்று விஷ்ணுவின் தசாவதாரங்களைச் செய்து முடித்தேன்.
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, யாக சாலை முகப்பில் 'மகா சதாசிவ மூர்த்தி' என்ற சிவனின் விஸ்வரூபத்தை சுமார் 16 அடி உயரத்தில் 25 முகங்கள், 50 கைகளுடன் அமைத்தேன். அதில் முகம், கைகள் என அனைத்தும் நானே உருவாக்கினேன். இதற்கு 4 மாதங்கள் கடுமையாக உழைத்தேன். கழட்டி மாட்டும் வகையில் செய்த அந்த மெகா சைஸ் அலங்காரத்தை யாக சாலையில் நிறுவ மூன்று மணி நேரமேயானது.
மதுரை மீனாட்சி கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் அலங்காரத்தை சுரேஷ் பட்டருடன் இணைந்து செய்தேன். நாங்கள் இருவரும் இணைந்து 'மதுரை ஸ்ரீமீனாட்சி ஆர்ட்ஸ்' என்ற பெயரில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் சுவாமி அலங்காரத் திருப்பணிகளைச் செய்து வருகிறோம்'' என்கிறார் இரா.சாமிநாத பட்டர்.