பிரபஞ்சமும் நாமும் ஒன்றுதான்
சென்னை லலித் கலா அகாதெமி கண்காட்சி அரங்கில், 'காஸ்மிக் அர்பன் கனெக்ட்' எனும் தனிநபர் ஓவியக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
சென்னை லலித் கலா அகாதெமி கண்காட்சி அரங்கில், 'காஸ்மிக் அர்பன் கனெக்ட்' எனும் தனிநபர் ஓவியக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில், பெங்களூரைச் சேர்ந்த ஓவியர் ஜகன் என்கிற சுந்தரேசன் ஜகன்னிவாசன் வரைந்த 150 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இவரது ஓவியங்கள் 'அப்ஸ்டிராக்ட்' என்ற அரூப ஓவியங்கள் வகையைச் சார்ந்துள்ளன.
சென்னையில் நடைபெற்ற ஜகனின் மூன்றாவது ஓவியக் கண்காட்சி வரவேற்பைப் பெற்ற நிலையில், 'கண்காட்சியின் வாயிலாக நான் இந்தச் சமூகத்துக்குச் சொல்கிற செய்தி, இந்தப் பிரபஞ்சமும், நாமும் வேறுவேறு இல்லை; இரண்டும் ஒன்றுதான்'' என்கிறார் அவர்.
ஜகனிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
'என் அப்பா பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா. சுந்தரேசன். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களான 'அப்புசாமியும், சீதாபாட்டியும்' தமிழ் வாசகர்கள் மனதில் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவரது எழுத்துகளை நான் ரசித்துப் படித்திருக்கிறேன்.
இருந்தாலும் என் ஆர்வம் ஓவியம் நோக்கியே இருந்தது. அவர் மனிதர்களை, அவர்களின் பேச்சை, உடல் மொழியை ஒருவர் பேச்சுக்கு அவர்களது எதிர்வினையை மிகவும் கூர்ந்து கவனிப்பார். ஆனால், அவர் பார்க்கும் கோணம் நாம் பார்ப்பதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
அதை அவர் நகைச்சுவையாக தன் எழுத்தில் கொண்டு வந்தார்; அதைப் படிக்கும் வாசகர்களை புன்னகைக்க வைத்தார்; வாய்விட்டுச் சிரிக்க வைத்தார்; இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை உற்றுக் கவனிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்று, நான் கவனித்தவை எனக்குள்ளே ஏற்படுத்தும் தாக்கத்துக்கேற்ப அவற்றை வண்ணங்களில் அப்ஸ்டிராக்ட் ஓவியங்களாக வரைகிறேன்.
நான் கார்பரேட் உலகில் சொந்தமாக பிசினஸ் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஓவிய ஆர்வம் இருந்தாலும், அதற்காக அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பிசினஸ் போதும் என்று முடிவு செய்துவிட்டு ஓவியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
கரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கிய நான் முழு மூச்சில் வண்ணங்களோடு விளையாடத் துவங்கினேன். என் மகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த பெங்களூரைச் சேர்ந்த மூத்த ஓவியர் தொட்டாமணிதான் எனக்கும் ஓவிய நுட்பங்களை கற்றுக் கொடுத்த குரு. அவர் என்னுடைய இந்த சென்னை லலித் கலா அகாதெமி ஓவியக் கண்காட்சியை வடிவமைத்துக் கொடுத்ததுடன் துவக்க விழாவிலும் பங்கேற்றார்.
அப்ஸ்டிராக்ட் ஓவியங்கள்
என்னை ஓர் ஓவியன் என்று சொல்வதைவிட, வண்ணங்களின் வழியாக மன உணர்வுகளின் வெளிப்படுத்துகிறவன் என்று சொன்னால் சரியாக இருக்கும். மனம், கேன்வாஸ், கலர் ஆகிய மூன்றும் இணைந்ததே ஓவியம். சிலர் ஒரு கோயிலையோ, மனிதரையோ பார்த்து, கண்ணால் காண்பதை ஓவியமாகத் தீட்டலாம். அது ஒரு வகை.
நான் ஓர் இடத்துக்குச் செல்லும்போதோ அல்லது ஒருவரைக் காணும்போதோ என்னுடைய மனதில் என்னவிதமான எண்ணங்கள் உணர்வுகள் தோன்றுகிறதோ அந்த எண்ணங்களை, உணர்வுகளை வண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்துகிறேன். அது ஒரு அப்ஸ்டிராக்ட் ஓவியமாக உருவாகிறது. நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் எனப் பலவிதமான வண்ணங்களைப் பயன்படுத்தினாலும், அவை எல்லாமே என் எண்ணங்கள், உணர்வுகளின் வெளிப்பாடுதான்!
பாரம்பரிய ஓவியம், நவீன ஓவியம் என எதுவாக இருந்தாலும், மனம் ஒன்றி ஓவியத்தை வரைகிறபோது, மனதில் இருக்கும் பாரம் குறையும். மனம் லேசாகும். ஓவியம் என்பதே ஒரு பெருங்கடல். அதில் நவீன ஓவியங்கள் என்பது ஒரு பகுதி. அந்த நவீன ஓவிய வகைகளில் ஒன்றுதான் நான் வரையும் அப்ஸ்டிராக்ட் ரகம்.
ஓவியம் வரைவது என்பதே ஒரு சுகமான அனுபவம்தான். ஒரு விதையை மண்ணில் புதைத்து வைக்கிறோம். அது சில நாள்களில், மண்ணைத் துளைத்துக் கொண்டு மேலே வருகிறது. அதாவது, விதைக்குள் இருக்கும் உயிர், சக்தியாக எனர்ஜியாக மண்ணுக்குள்ளிருந்து வெளிப்படுகிறது. இது எத்தனை அற்புதமான விஷயம்! ஓவியமும் அதுபோலத்தான். எண்ணங்கள், உணர்வுகள் வண்ணத்தில் எனர்ஜியாக வெளிப்படுகின்றன.
நவீன ஓவியங்கள், அப்ஸ்டிராக்ட் ஓவியங்களைப் பொருத்தவரை எல்லாமே ஒரே மாதிரி இருக்காது. யார் மயில் வரைந்தாலும் அவரவர்கள் பாணியில் அது இருந்தாலும், பொதுவாக ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், அப்ஸ்டிராக்ட் ஓவியங்கள் அப்படி இல்லை. ஒரே விஷயத்தைப் பற்றிய இரு மனிதர்களின் உணர்வுகள் ஒரே மாதிரி இருந்தாலும், அவர்கள் அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிற விதம் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
ஏ.ஐ. ஓவியங்கள்
ஒருவரே ஒருவிதமான எண்ணங்களை இன்று ஓவியமாக வெளிப்படுத்தும்போது ஒரு மாதிரி இருக்கும். அதையே இன்னொரு நாள் வெளிப்படுத்தும்போது, அது மாதிரியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை; அவ்வளவு ஏன்? ஒரு விதமான மன நிலையில், ஒரு விஷயத்தை ஒருவர் அப்ஸ்டிராக்ட் ஓவியமாக வரையத் தொடங்குகிறார்.
அதை முடிக்காமல் மறுநாளும் அந்த ஓவியத்தைத் தொடர்ந்து வரைகிறார் என்றால், அது அவர் முந்தையநாள் வரைய நினைத்ததில் இருந்து மாறுபட்டதாகவும் இருக்கும் சாத்தியமுண்டு. அப்ஸ்டிராக்ட் ஓவியங்கள் வரைவது சுலபம் இல்லை. ஏனெனில், கண் முன்னால் எதுவும் கிடையாது. மனதில் இருக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உணர்வுபூர்வமாகப் பார்த்து, அதனை கேன்வாசில் வண்ணங்களால் வெளிப்படுத்த வேண்டும். இது பெரிய சவால்தானே?
கரித்துண்டு, கிரயான்ஸ், வாட்டர் கலர், அக்ரலிக்ஸ், ஆயில் பெயின்ட்ஸ், பல்வகையான பிரஷ்கள், கத்தி, பிளேடு என்று பலவகையான கருவிகளைப் பயன்படுத்தி காலம் காலமாக ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இது டிஜிட்டல் யுகம்.
செயற்கை நுண்ணறிவு காலம். எனவே, ஓவியம் வரைவதிலும் ஏ.ஐ. வந்துவிட்டது. என்னைப் பொருத்தவரையில் அதுவும் ஒரு கருவி. ஒரு தரப்பினருக்கு, ஏ.ஐ.யைப் பயன்படுத்தி வரையும் ஓவியங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்காது. எதிர்காலத்தில் அவர்களும் அதை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள்'' என்றார்.