FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சூரிய சக்தியில் இயங்கும் இரு சக்கர வாகனம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 8 -ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாற்பத்து ஆறு வயதான தொழிலாளி ராஜன், தனது இரு சக்கர வாகனத்தை சூரிய சக்தியில் இயங்குமாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தி வருகிறார்.

24 அக்டோபர் 2026, 9:29 pm
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 8 -ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாற்பத்து ஆறு வயதான தொழிலாளி ராஜன், தனது இரு சக்கர வாகனத்தை சூரிய சக்தியில் இயங்குமாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

'நான் சேலம் மாவட்டம், மத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாழப்பாடியில் இயங்கி வந்த தனியார் நூற்பாலையில் பிட்டர் பணிக்கான உதவியாளராக வேலை செய்தேன்.

அந்த நூற்பாலை மூடப்பட்ட பிறகு 'சகலகலா' என்ற பயிற்சி மையத்தின் வாயிலாக வீட்டு உபயோக மின் சாதனங்களைப் பொருத்துவதற்குப் பயிற்சி பெற்றேன். தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வரும் சூரிய சக்தி மின் திட்டத்தை வீடுகளுக்கு அமைத் துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறேன்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தினந்தோறும் வேலைக்குச் செல்வதற்காக, பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அண்மையில் வாங்கினேன். 5 பேட்டரிகள் கொண்ட அந்த இருசக்கர வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு தினந்தோறும் ஒரு யூனிட் அளவில் மின்சாரம் தேவைப்பட்டது. எனவே, அதை பெரிய செலவு இல்லாமல், சூரிய சக்தி வாகனமாக மாற்ற முடிவுசெய்தேன்.

இதையடுத்து, ரூ. 5 ஆயிரம் செலவில் 125 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் வகையிலான சூரிய சக்தி தகடை விலைக்கு வாங்கி, அதை எனது வாகன இருக்கையின் பின்பகுதியில் பொருத்தினேன். அந்தச் சூரிய சக்தி தகட்டில் இருந்து வாகனத்தில் உள்ள பேட்டரிக்கு, மின் வயர்கள் வழியாக இணைப்பு கொடுத்து அதில், மின்சாரம் சேகரமாகும் வகையில் வாகனத்தை மாற்றி அமைத்தேன்.

தற்போது, இந்த இரு சக்கர வாகனத்தில் நான் வெளியில் செல்லும்போது சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தால் பேட்டரி தானாகவே சார்ஜ் ஆகிவிடுகிறது. இதனால், பகல் முழுக்க எவ்வளது தொலைவு பயணித்தாலும் வாகனம் நிற்பதில்லை, எனக்குச் செலவும் இல்லை. ஆனால், இந்த வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்லமுடியும். மேலும் ஒருவரை உட்காரவைத்துச் செல்ல முடியாது.

தற்போதைய சோதனை வெற்றிபெற்றுள்ளதால், இந்தத் தகடை உயரத்தில் பொருத்திவிட்டு, இருவர் பயணிக்கும் வகையில் மாற்றி அமைக்க யோசித்து வருகிறேன். இந்த வாகனத்தைப் பார்க்கும் மக்கள், தங்களுக்கும் இதேபோலச் செய்துகொடுக்குமாறு கேட்கின்றனர்.

இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், எல்லா வகையான மின்சார வாகனங்களிலும் சூரிய சக்தி தகட்டைப் பொருத்தமுடியாது. 3 அல்லது 5 பேட்டரிகள் கொண்ட வாகனங்களில் மட்டுமே இது சாத்தியம். செலவோ, பராமரிப்புச் செலவோ கிடையாது.

பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, எரிபொருள் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக அண்மைக்காலமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

வாகனங்களை இயக்குவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சூரிய சக்தியைப் பயன்படுத்துவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சூரிய சக்தி வாகனங்களின் பயன்பாட்டை நம் நாட்டிலும் மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் ராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments