FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புரந்தரதாசரை நெறிப்படுத்திய புனிதவதி

கர்நாடக இசைக்குத் தமிழ்நாட்டில் தியாகபிரம்மம் அவதரித்ததுபோல், கர்நாடகத்தில் தோன்றியவர் புரந்தரதாசர்.

8 நவம்பர் 2026, 1:10 pm
கோப்புப் படம்
பகிர்:

கர்நாடக இசைக்குத் தமிழ்நாட்டில் தியாகபிரம்மம் அவதரித்ததுபோல், கர்நாடகத்தில் தோன்றியவர் புரந்தரதாசர். கர்நாடக இசையை முறையாகக் கற்கும் மாணவர்களுக்கு, இன்று சொல்லிக் கொடுக்கப்படும் சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம் போன்ற ஆரம்பப் பயிற்சி முறைகளை ஒழுங்குபடுத்தியவர்களில் முதன்மையானவர்

புரந்தரதாசர். அதனால் அவரைக் 'கர்நாடகச் சங்கீத பிதாமகன்' எனப் போற்றுகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியின் அருகிலுள்ள 'புரந்தரகடா' எனும் ஊரில் 1484-ஆம் ஆண்டு அவதரித்தவர், புரந்தரதாசர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் என்பதாகும்.

Advertisement

Advertisement

இவருக்கு குருவாக அமைந்தவர் வியாச தீர்த்தர்.

ஸ்ரீ கிருஷ்ண பகவானையும் விட்டலரையும் வழிபடு தெய்வமாகக் கொண்டிருந்தார்.

ஸ்ரீநிவாச நாயக்கர் பெரும் செல்வம் படைத்து வணிகராகத் திகழ்ந்த காலத்தில் அவருக்கு நவகோடி நாராயணன் எனப் பெயர். வணிகத்தில் பெருஞ்செல்வத்தைப் பெற்ற அவர், இறையுணர்வு சற்றும் இல்லாதவராகவும், கருமியாகவும் இருந்தார். இவருடைய தந்தை வரதப்ப நாயக்கர் வைரங்கள், நவமணிகளை விற்கும் வியாபாரி.

நவகோடி நாராயணனின் மனைவியின் பெயர் சரஸ்வதிபாய். பெரியபுராணத்தில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையாரைப் போல, இறையடியாராகத் திகழ்ந்தவர். சரஸ்வதிபாய் எந்நேரமும் இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டும் இறையடியார்களை உபசரித்துக் கொண்டும் வாழ்ந்தார். இந்தப் புனிதவதியின் வாழ்க்கைதான், நவகோடி நாராயணனைப் புரந்தரதாசர் ஆக்கியது.

ஒருநாள் பாண்டுரங்கன் புரோகிதர் அவதாரம் எடுத்து, நவகோடி நாராயணனின் வீட்டுக்கு வந்து, 'என் மகனுக்கு உபநயனம் வைத்துவிட்டேன்; தாங்கள் கொஞ்சம் பொருள் உதவி செய்யுங்கள்' என்று கெஞ்சிக் கேட்டார். ஆனால், நவகோடி நாராயணன் 'இதற்கெல்லாம் என்னை எதிர்பார்க்காதீர்கள்; வேறிடம் பாருங்கள்' என விரட்டி அடித்துவிட்டார். இறைவன் அவரைச் சோதிக்க இரண்டு முறை வீடு வந்து கேட்டும், கஞ்சப்பிரபு கூறுவதையே கூறி விரட்டியடித்து விட்டார்.

நவகோடி நாராயணனை புரந்தரதாசராக மாற்ற நினைத்த இறைவன், நாயக்கர் இல்லாத நேரம் பார்த்து, அவருடைய வீட்டுக்குச் சென்று நவகோடி நாராயணனின் மனைவி சரஸ்வதிபாயிடம் நயந்து கேட்டார். வந்திருப்பவர் இறையடியார் என்பதை அறிந்த சரஸ்வதிபாய், தாம் அணிந்திருந்த வைரமூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்து, உபசரித்து அனுப்பி வைத்தார்.

நவகோடி நாராயணனைப் புரந்தரதாசராக மாற்ற நினைத்த பாண்டுரங்கன், அந்த மூக்குத்தியைக் கொண்டு அவள் கணவரிடமே விலை பேசினார். அந்த மூக்குத்தி தம் மனைவியினுடைய மூக்குத்தி என்பதை அறிந்த நவகோடி நாராயணன் வீட்டுக்கு வந்து, தம் மனைவியிடம் அவளுடைய மூக்குத்தியைக் கொண்டு வருமாறு பணித்தான்.

மனைவி சரஸ்வதிபாய் 'இது ஏதோ இறைவனின் திருவிளையாடல்' என்பதறிந்து, பாண்டுரங்கனிடம் 'இறைவா, இந்தச் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்று; அன்றெனில் யான் உயிரை விட்டுவிடுவேன்' என மண்டியிட்டாள். இறைவன் ஒரு புது வைரமூக்குத்தியைப் பூஜை பாத்திரத்தில் வைத்து மறைந்தான். சரஸ்வதிபாய் இறைவனின் திருவிளையாடலை வியந்து போற்றி, அந்த மூக்குத்தியைக் கொண்டு வந்து கணவரிடம் கொடுத்தாள்.

பாண்டுரங்கனின் திருவிளையாடல் நவகோடி நாராயணனின் வாழ்க்கையை மாற்றிப் போட்டது. தாம் வைத்திருந்த செல்வத்தையெல்லாம் பாண்டுரங்கனின் அருட்பணிகளுக்கே செலவிட்டார். புரந்தரதாசராக மாறிய நவகோடி வீடுவீடாகச் சென்று ஹரிநாமத்தைப் பாடி, உஞ்சவிருத்தியைப் பெற்று உயிர் வாழ்ந்தார். கன்னடத்தில் அவர் பாடிய பாடல்கள் பண்டிதர்கள் மட்டுமன்றி, எளிய மக்களையும் சென்றடைந்தன.

மனந்திருந்திய நவகோடி நாராயணன் தம்முடைய குருநாதராகிய வியாசராயரை அணுகினார். அவர் அவருடைய பெயரை மாற்றி 'புரந்தரதாசர்' எனப் பெயரிட்டார். அன்றிலிருந்து 'விட்டலா! விட்டலா!' என்று பாண்டுரங்கனின் பெயரையே உச்சரித்து வாழ்ந்தார்.

'கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர்' எனப்போற்றப்படும் புரந்தரதாசர், 1564-ஆம் ஆண்டு பரமபதம் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.