இந்த வாரம் கலாரசிகன் - 29-11-2026
இன்னும் சரியாக பன்னிரண்டு நாள்கள், மகாகவி பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11 வர இருக்கிறது.

இன்னும் சரியாக பன்னிரண்டு நாள்கள், மகாகவி பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11 வர இருக்கிறது. வழக்கம்போல, ''நாங்கள் வருகிறோம்; நீங்கள் எப்போது எட்டயபுரம் வருவீர்கள்?'' என்று பாரதி அன்பர்கள் பலர் கேட்கிறார்கள்.
இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப்போலவே, எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் திறக்கப்படாமல் இருக்கும் என்று நமது நிருபர் சங்கரேஸ்வர மூர்த்தி தகவல் அனுப்பி இருக்கிறார். நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற இருந்த புதுப்பிக்கப்பட்ட பாரதி இல்லத்தின் திறப்பு விழா, இரண்டாவது முறையும் ஒத்திப் போடப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் மிகுந்த மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.
2025 மார்ச் 25-ஆம் தேதி, எட்டயபுரத்தில் உள்ள, நினைவகமாக்கப்பட்ட பாரதியாரின் குடும்பம் வசித்த வீட்டின் மேற்கூரை, இடிந்து விழுந்து மேல்தளம், தரைத்தளம் இரண்டுமே முற்றிலும் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து அதன் பழைமை மாறாமல் பாரதியார் இல்லம் புதுப்பிக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ரூ. 1.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு நாமெல்லாம் பாரதியார் பிறந்த தினத்தில் எட்டயபுரத்தில் கூடிய
Advertisement
Advertisement
போது, பாரதியார் இல்லத்தின் பணிகள் முற்றுப்பெறாமல் இருந்தன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த ஐந்து மாதங்களில் புதுப்பிக்கப்படும் பணி வேகம் எடுத்தது. அநேகமாக எல்லாப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகத் தெரிவித்தார்கள். அக்டோபர் இறுதி வாரத்தில், புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லம் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்குப் பிறகு, நவம்பர் 26-ஆம் தேதி காலையில் பாரதியார் இல்லத்தை முதல்வர் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைப்பார் என்று மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தரப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறப்பு விழாவுக்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்யத் தொடங்கினார்கள். இந்த ஆண்டு, புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மணிமண்டபம் நோக்கி ஊர்வலமாகச் செல்லலாம் என்கிற ஆனந்தப் பூரிப்பில் பாரதி அன்பர்கள் இருந்தோம்.
என்ன காரணம் என்று தெரியவில்லை. பாரதியார் இல்லத் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது. ஒரு வேளை, பாரதியார் பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதி அதன் திறப்பு விழாவை நடத்துவது என்று அரசு முடிவெடுத்திருக்கிறதோ என்னவோ? அப்படி
யொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்ன இருக்க முடியும்?
செய்தித் துறை அமைச்சர் ராஜ் மோகனுக்கு, பாரதி அன்பர்கள் சார்பிலும், 'தினமணி' வாசகர்கள் சார்பிலும், தனிப்பட்ட முறையில் எனது சார்பிலும் ஒரு பணிவான வேண்டுகோள்-மகாகவி பாரதியாரின் 145-ஆவது பிறந்த நாளான வரும் டிசம்பர் 11-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட எட்டயபுரம் பாரதியார் இல்லம் காணொலி மூலம் முதல்வரால் திறக்கப்படுவதற்கு வழிவகை செய்யுங்கள்.
அமைச்சர் ராஜ்மோனுக்கு என்னுடைய தனிப்பட்ட கோரிக்கை, வேண்டுகோள், அன்புக் கட்டளை-டிசம்பர் 11-ஆம் தேதி நீங்களும் எங்களுடன் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்த வாருங்களேன். எங்களுடன் ஊர்வலமாக அவரது மணிமண்டபத்துக்கு வந்து பாரதி அன்பர்கள் மத்தியில் உரையாற்றுங்களேன். கனவு மெய்ப்பட வேண்டும்!
ஆண்டுதோறும் 'தினமணி' சார்பில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் 'மகாகவி பாரதியார் விருது' குறித்து அடுத்த வாரம் விவரமாக எழுதுகிறேன். அதற்கு முன்னால், பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதி வழங்கப்படும் இரண்டு முக்கியமான விருதுகள் குறித்த தகவல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
நண்பர், தோழர் ஸ்டாலின் குணசேகரனால் வழிநடத்தப்படும் 'ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை', ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு 'பாரதியார் விருது' வழங்கி கெளரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான விருது கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல, திருவண்ணாமலை 'பாரதி ஜெயராமன் தமிழ் இலக்கியப் பேரவை' சார்பில், ஆண்டுதோறும் எட்டயபுரம், பாரதியார் இல்லத்தில் 'பாரதி பணியாளர் விருது' வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, கம்பம் பாரதி தமிழ் இலக்கிய மன்றத்தின் கவிஞர் பாரதனுக்கு வழங்கப்படுகிறது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத் தலைவரும், இப்போது மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் முனைவர் சி. சித்ராவிடம் இருந்து ஒரு பெரிய புத்தகக் கட்டு விமர்சனத்துக்கு வந்திருந்தது. பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் வழிகாட்டல்படி அனுப்பி இருப்பதாக ஒரு கடிதமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகங்களில் சில தனியாக விமர்சனம் செய்யப்படுகின்றன.
பாரதியாரின் வைர வரிகளான 'செப்பு மொழி பதினெட்டுடையாள்', 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்' என்கிற வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரது அற்புதப் படைப்பான 'ஞானரதம்', தமிழல்லாத 18 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்' என்பதற்கொப்ப, 18
உலக மொழிகளிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. பாரதியார் மீதான முனைவர் சித்ராவின் பற்றும், பாரதி புகழைப் பரப்பும் முனைப்பும், அவர் அனுப்பி இருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துப் பார்க்கத் தூண்டுகின்றன.
தாய்த் தமிழும், எமது பாரதி தந்த தன்மானமுமே சொத்து என்று கூறும் பாரதி பண்பாளர், தென்சென்னைத் தமிழ்ச் சங்க நிறுவனர் கவிஞர் மருத்துவர் ம. ஜீவரேகா. தானே காய்த்து, தானே வெடிக்கும் பருத்தி எங்கே போய் விலையாக வேண்டும் என்று மற்றவர்கள் நிர்ணயிப்பதுபோல, பெண்களின் வாழ்க்கையும் மற்றவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கவிஞர் ஜீவரேகாவின் கவிதை வரிகள் இவை-
காட்டுப் பூவுக்குக்கூட
நிர்ணயிக்குமிடமெல்லாம்
பூக்க வழி உண்டு
போக்கிடமேது
கடலைத் தவிர
கலங்கரை விளக்குக்கு...