அனைத்தும் தருவார் அன்பநாயக ஈஸ்வரர்
நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு தரும் நம்பிக்கை தெய்வம்..
வரலாற்றுச் சிறப்புமிக்கக் கிடங்கல் கோட்டையில் அமைந்துள்ளது அறம்வளர்த்த நாயகி சமேத அன்பநாயக ஈஸ்வரர் திருக்கோயில். திண்டிவனம் என்பது கிடங்கலின் புதிய பெயர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி "சாசனச் செய்யுள் மஞ்சரி' என்ற நூலில் கூறியுள்ளார்.
கிடங்கலைத் தலைநகரமாகக் கொண்டு அமைந்த ஒய்மா நாட்டை ஆண்ட மன்னர்களில் சிறுபாணாற்றுப்படையின் பாட்டுத் தலைவனான ஒய்மான் நல்லியகோடன் ஆட்சிக் காலத்தில் ஓவியர் குடியினர் வழிபடும் தெய்வமாக இத்திருக்கோயில் இறைவன் விளங்கினார்.
இந்த வரலாற்றை சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனரால் அறியமுடிகிறது.
Advertisement
Advertisement
திண்டிவனம் என்ற சொல்லுக்கு அடர்வனம் என்றும், சோலை என்றும் பொருள்படும். சோலைகளால் சூழப்பட்ட இப்பகுதி திண்டிவனம் என வழங்கல் ஆயிற்று என்பதே பொருத்தமுடையது.
மேலும், ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய "ஊரும் பேரும்' என்ற நூலில் ஈசனார் கோயில் கொண்ட திண்டிச்சரம் என்னும் திருக்கோயில் ஒய்மா நாட்டு கிடங்கற் பகுதியில் அமைந்துள்ளது என்றும், தேவாரத்தில் குறிப்பிட்ட தலம் திண்டிவனத்தில் கண்ணுள்ள சிவன் கோயிலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பகுதிகளாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய இம்மூன்றும் ஒன்றுபட்டு காணப்படுகிறது.
பலி பீடம், நீண்ட கொடி மரம் கடந்து சென்றால், கருவறையில் இறைவன் அன்பநாயக ஈஸ்வரர் காட்சியளிக்கிறார். அனைத்துப் பேறுகளும் அருளும் பெரும் வரப்பிரசாதி. நீண்ட நாள்களாகியும் நீதிமன்ற வழக்குகளில் முடிவு கிடைக்காதவர்கள், இவரை வழிபட்டால் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவருக்கு முன் நந்தி, பலிபீடம் போன்றவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. கருவறையை அடுத்து தனியாக உட்பகுதியில் அறம்வளர்த்த நாயகி சந்நிதி அமைந்துள்ளது. பரிவார தெய்வங்களான ஐயனார், விநாயகர், முருகன் போன்ற கடவுளுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பகிரகத்தை அடுத்துள்ள வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்களும் எதிரில் நந்திகேஸ்வரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இக்கோயிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாசனங்களும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சங்க காலத்துக்குப் பின் இக்கோயிலின் திருப்
பணிகளும், மானியங்களும் பிற்காலச் சோழர்களால் ஏற்படுத்தப்பட்டன என்பதைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
முதலாம் குலோத்துங்கச் சோழன் வழங்கிய நந்தா விளக்கு முதலிய பொருள்கள் பற்றி அர்த்த மண்டபம் தென்புறச் சுவர் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. விக்கிரமசோழன் காலத்தில் இக்கிடங்கல் ஒய்மா நாட்டு விஜய ராஜேந்திர வளநாட்டுக் கிடக்கை நாட்டுக் கிடங்கிலான இராஜேந்திர சோழ நல்லூர் என வழங்கியதாகக் கல்வெட்டு கூறுகிறது.
இவர் காலத்தில் (கி.பி.1132) அர்த்த மண்டபத் திருப்பணி செய்யப்பட்ட செய்தியையும், வட்டிக்காக 30 பொற்காசுகளுக்கு சிங்கினி நல்லூரில் (சிங்கனூரில்) பன்னிரண்டு அடி கோலால் ஆயிரம் குழி நிலம் வாங்கி வழங்கிய செய்தியையும் அந்தக் கல்வெட்டால் அறியமுடிகிறது.
இத்திருக்கோயில் சிதையுண்டு புதையுண்ட காலத்தில் சுமார் 35ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட அஷ்டபுஜ துர்கையின் உருவம் போற்றத்தக்கதாகும். இத்துர்கை சிம்ம வாகனத்தில் முன்பக்கம் பார்க்கும்போது, நின்ற கோலத்திலும், பின் பக்கத்தில், அமர்ந்த கோலத்திலும் காட்சியளிக்கின்றது.
இந்த துர்கைக்கெனத் தனிக் கோயில் சிவாலயத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது காவல் தெய்வமாகப் போற்றப்பட்டு கிடங்கல் கொற்றவை என்று அழைக்கப்படுகிறது. இது அருணகிரிநாதரால் வைப்புத் தலமாகப் பாடல் பெற்ற திருக்கோயிலாகும்.
சித்திரை மாத புனர்பூச நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். ஆடிக்கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை இரண்டாவது சோமவாரம், திருக்கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம், துர்கைக்கு ராகு கால பூஜை என சிவன் கோயில் அனைத்து உற்சவங்களும் நடைபெறும்.
தரிசனத்துக்காக காலை 7 மணிமுதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் கிடங்கல் அன்புநாயக ஈஸ்வரர் கோயில், திண்டிவனம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.
- பொ.ஜெயச்சந்திரன்