பிள்ளைப்பேறு அருளும் பரமசிவன்!
பிள்ளைப்பேறு அருளும் போடிநாயக்கனூர் பரமசிவன் கோயிலின் அதிசய வரலாறு பற்றி..

தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற மலைக் கோயில்களுள் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், 208 படிகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு: குச்சனூரில் சோமசுந்தர ஆச்சாரி } சிவசங்கரி தம்பதியினருக்கு கி.பி. 1900- ஆம் ஆண்டு பிறந்தவர் வால குருசாமி. இளம் வயதிலேயே தன் தந்தையைப் போல சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேறினார்.
போடிநாயக்கனூரில் திருமணம் செய்துகொண்டு நகைத் தொழில் செய்து வந்த வாலகுருசாமிக்கு குழந்தைப்பேறு இல்லாததால், ராமேசுவரம் சென்று ராமநாதசுவாமியை வழிபட்டு வந்தார். அதன்பின் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "பால அபிஷேகன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
Advertisement
Advertisement
ஆனால், அவர்களின் மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கவில்லை. அக்குழந்தைக்கு மூன்று வயது ஆன நிலையில், மரணமடைந்துவிட்டது. மனம் வெறுத்த தம்பதியர் தங்களிடம் இருந்த பூஜைப் பொருள்களை எல்லாம் ஆற்றில் கொண்டுபோய்விட முடிவுசெய்து, மூட்டைக் கட்டித் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
அன்று இரவு வால குருசாமிக்கு கனவு தோன்றியது. அதில் துறவி ஒருவர் மலை மீது நின்றிருக்க, இறந்த அவரது மகன் உயிரோடு துறவியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனை துறவி தூக்க முயற்சித்தபோது, அவன் வர மறுத்ததால், உடனே துறவி, ""இவன் எனக்கு உதவியாக என்னுடனேயே இருப்பான். மனம் வெறுக்காதே. போடி நாயக்கனூர் மலை மீது எனக்குக் கோயில் எழுப்பி, நீ உன் பூஜைகளைத் தொடர்ந்து செய்துவா. உனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள் பிறப்பார்கள்'' என்று கூறினார்.
""ஐயா! தாங்கள் யார்?'' என வால குருசாமி கேட்க, அப்போது சிவனும் பார்வதியும் காளை வாகனத்தில் காட்சி தந்தனர்.
கனவு கலைந்தது. திடுக்கிட்டு எழுந்தவர், காலையில் போடிநாயக்கனூரில் உள்ள மலை மீது ஏறிப்பார்த்தபோது, அங்கே பாதச்சுவடுகளும், ஏராளமான பூக்களும் காணப்பட்டன. பேரானந்தம் அடைந்தார், வால குருசாமி.
உடனே விஷயத்தை, அப்பகுதியை ஆண்டு வந்த போடிநாயக்கனூர் ஜமீன் டி.வி.கே. காமராஜ பாண்டிய நாயக்கரிடம் கூறி, சிவபெருமானுக்குக் கோயில் கட்டி வழிபட தனக்கு அனுமதி தருமாறு கேட்டார்.
அவர், "உன்னிடம் கூறியதை இறைவன் என்னிடமும் கூறட்டும்... அனுமதி தருகிறேன்'' என்று கூறி, வால குருசாமியை அனுப்பி வைத்தார். சில நாள்களிலேயே ஜமீன் கனவில் தோன்றிய சிவபெருமான், வால குருசாமி கோயில் எழுப்பி வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
திடுக்கிட்டு எழுந்த ஜமீன், மறுநாள் வால குருசாமியை அழைத்து, மலை மீது கோயில் எழுப்பி பரம்பரையாக பூஜை செய்து வர கி.பி.1937}ஆம் ஆண்டில் செப்புப் பட்டயம் மூலம் அனுமதி வழங்கினார். அன்று முதல் மலை மீது ஓர் அழகிய ஆலயம் எழுப்பி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கி.பி.1947-ஆம் ஆண்டு வைகாசி மாதம் கோயில் கட்டத் தொடங்கிய செய்தி, கல்வெட்டாக கருவறை வெளிச்சுவரில் இன்றும் காணப்படுகிறது.
இறைவன் வரமளித்தபடி, வால குருசாமிக்கு அடுத்தடுத்து ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன. வால குருசாமி, தமது 81-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
சிறிய மலை மீது கோயில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் கிருஷ்ணானந்த சுவாமிகள் அதிஷ்டானமும் அமைந்துள்ளது.
மலையின் நடுப்பகுதியில் பிள்ளை வரம் தந்த தொட்டில் மண்டபம் அமைந்துள்ளது. குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் தொட்டில் இங்கே வைக்கப்பட்டு உள்ளது.
மலைக்கோயிலில் கொடிமரம், பலிபீடம், இடதுபுறம் லஷ்மி நாராயணப் பெருமாள் சந்நதியும், வலதுபுறம் வள்ளி } தெய்வானை உடனுறை ஆறுமுகப் பெருமான் சந்நிதியும், பைரவர் சந்நிதியும் அமைந்துள்ளன. பிரதான வாயிலின் கீழே ஈசானிய மூலையில் நவகிரகங்களும் தீபமேற்றும் தூணும் அமைந்துள்ளன.
கோயிலின் நடுநாயகமாக பரமசிவன் சந்நிதி அமைந்துள்ளது. பரமசிவன் லிங்க ரூபமாக கிழக்கு நோக்கிக் காட்சி தருகின்றார். இவர் குழந்தை வரம் அருளும் பெரும் வரப்பிரசாதி. இவரின் அடிப்பாகத்தில் சிறிய சுயம்பு மூர்த்தமும் உள்ளது.
மலை மீது, ஆலய வலம் வரும் போது ஒருபுறம் பசுமையான வயல்வெளி, தென்னந்தோப்பு, போடி நகரமும், மறுபுறம் மேகங்கள் தவழ்ந்து விளையாடும் பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலையும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
சுமார் ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இம்மலையைச் சுற்றி எண்திசையிலும் லிங்கங்களை நிறுவி, பெüர்ணமி கிரிவலம் வருவதற்கு நல்ல பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
போடி நாயக்கனூர் ஜமீன் வடமலை ராஜபாண்டியன் தலைமையிலான அன்னதான அறக்கட்டளை மூலமாக கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
தரிசனத்துக்காக காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் பரமசிவன் கோயில் தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் நகரின் மேற்கே 4 கி.மீ. தொலைவில், போடி மெட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.