ஆப்கன் சிறை மீது தலிபான்கள் தாக்குதல்: 355 கைதிகள் தப்பியோட்டம்
ஆப்கானிஸ்தானின் கஜினி நகரச் சிறை மீது தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தி 355 கைதிகளை விடுவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் கஜினி நகரச் சிறை மீது தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தி 355 கைதிகளை விடுவித்தனர்.
இந்தத் தாக்குதலில் 4 சிறைக் காவலர்கள் உயிரிழந்தனர்.
தலிபான்களின் புதிய தலைவராக முல்லா அக்தர் அறிவிக்கப்பட்டதால் அந்த அமைப்பில் குழப்பம் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையிலும், இந்தத் துணிகரத் தாக்குதலை அந்த அமைப்பு நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கஜினி மாகாண துணை ஆளுநர் முகமது அலி அஹமதி கூறியதாவது:
கஜினி சிறைக்கு ராணுவச் சீருடையணிந்து வந்த தலிபான் பயங்கரவாதிகள், சிறை வாசலில் வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை நள்ளிரவு 2.30 மணிக்கு வெடிக்கச் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏவுகணை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தினர் என்றார் அவர்.
தாக்குதலைத் தொடர்ந்து, சிறையிலிருந்த 436 கைதிகளில் 355 பேர் தப்பியோடியதாக அமைச்சகம் கூறியது.
இந்தத் தாக்குதலில் 4 போலீஸார் உயிரிழந்ததாகவும், 7 போலீஸார் காயமடைந்ததாகவும் ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தப்பியோடிய சிறைக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும், பிற குற்றங்கள் தொடர்பாகவும் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தலிபான் அமைப்பு, இந்த சிறை உடைப்புக்குப் பொறுப்பேற்றது.
கடந்த 2011-ஆம் ஆண்டு, காந்தஹார் மாகாணத்திலுள்ள சிறையில் தலிபான்கள் துணிகரத் தாக்குதல் நிகழ்த்தி 500 பயங்கரவாதிகளை விடுவித்தது நினைவுகூரத் தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.