FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தில் ஒருமித்த கருத்து:இந்தியா நம்பிக்கை

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர். இருவரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு இந்தச் சந்திப்பு தனியாக நடைபெற்றது.

அப்போது, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மோடி - சிறீசேனா சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அதேவேளையில், இலங்கையின் இறையாண்மைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். இந்த இரு விஷயங்களையும் ஒருசேர அணுகும் புதிய வழிமுறை கண்டறியப்படும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கையில், புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது என்றார் அவர்.

"இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்குமா?' என்ற கேள்விக்கு, விகாஸ் ஸ்வரூப் அளித்த பதில்:

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் பொருத்தவரையில், எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படக் கூடிய ஒருமித்த தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும். அந்தத் தீர்மானம் இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

போர்க்குற்றத்துக்கு எதிராக சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் ùஸய்த் ராத் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார். ஆனால், உள்நாட்டு விசாரணைக் குழுவே போதுமானது என இலங்கை அரசு கூறி வருகிறது.

இதனிடையே, ஜோர்டான் மன்னர், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்டோரையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்துப் பேசினார். இதுகுறித்து விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:

ஐ.எஸ். அமைப்பை ஒடுக்க வேண்டும்:

ஜோர்டான் மன்னர் அப்துல்லா - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ஐ.எஸ். பயங்கரவாதம்தான் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்ற கருத்தை இரு தலைவர்களும் ஆமோதித்தனர். அதேவேளையில், "மதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்க வேண்டும். இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதைத் தடுப்பதுடன், அந்த இயக்கத்தினரின் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்' என்று மோடி வலியுறுத்தினார்.

நீர்மின் திட்டங்களுக்கு உதவி:

இதற்கிடையே, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கேவும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினர்.

அப்போது, பூடானில் செயல்படுத்தப்படும் நீர்மின் திட்டங்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்யும் என மோடி உறுதியளித்தார். இதனால், பூடானுக்கு 1.10 கோடி மெட்ரிக் டன் கார்பன் மிச்சமாகும்.

மோடியிடம் ஷெரிங் பேசுகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க பூடான் ஆதரவு தெரிவிக்கும் என உறுதியளித்தார் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

"அமைதி நடவடிக்கையில் மாற்றம் தேவை'

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் - மோடி இடையேயான சந்திப்பு ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.

அப்போது, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகள், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நீடித்த வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

பான் கீ மூனிடம் மோடி பேசுகையில், "ஐ.நா. அமைதி நடவடிக்கைக் குழுவுக்கு அதிகப்படியான வீரர்களை இந்தியா அனுப்புகிறது. ஆனால், அமைதி நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கு முன்னர் இந்தியாவிடம் போதிய அளவில் கலந்தாலோசிப்பதில்லை. இந்த அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments