FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மெக்கா நெரிசல் சம்பவத்தை அரசியல் ஆக்கக் கூடாது:பெரிய மசூதி இமாம் வலியுறுத்தல்

மெக்கா நெரிசல் சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று பெரிய மசூதி இமாம் ஷேக் சலே அல்-தாலிப் தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மெக்கா நெரிசல் சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று பெரிய மசூதி இமாம் ஷேக் சலே அல்-தாலிப் தெரிவித்துள்ளார்.

ஹஜ் புனிதப் பயணத்தினிடையே, மெக்கா அருகேயுள்ள மினாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 719 பேர் பலியாகினர். 863 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தோரில் 18 இந்தியர்கள் உள்படப் பல்வேறு நாட்டினர் அடங்குவர்.

Advertisement

Advertisement

சவூதி அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால்தான் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் உயிரிழக்க நேரிட்டது என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஹஜ் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக மறு ஆய்வு செய்யுமாறு சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மெக்கா பெரிய மசூதியின் இமாம் ஷேக் சலே அல்-தாலிப் கூறியதாவது:

கடவுளின் விருந்தினர்களாக லட்சக்கணக்கானோர் மெக்கா வருகின்றனர்.

இவர்களின் நலன்களைக் கவனித்துக் கொள்ள ஆயிரக்கணக்கான பேரை சவூதி அரசு ஈடுபடுத்தியிருக்கிறது. ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், புனித மசூதிகளுக்கு வருகை தருபவர்களுக்கும் சவூதி அரசு பல்லாண்டுகளாக சேவை அளித்து வருகிறது.

பெரும் திரளாக மக்கள் கூடும் இடத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் மீறப்பட்டதன் மூலம் நிகழ்ந்த விபத்தால் அரசுக்கு களங்கம் ஏற்படுத்திவிடமுடியாது.

இஸ்லாமியருக்கு ஏற்படும் விபத்துகளை எவரும் உள்நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. மெக்கா நெரிசல் சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது.

ஹஜ் பயணம் எந்தச் சிக்கலும் இன்றி சுமுகமாக நடைபெற சவூதி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று பெரிய மசூதி இமாம் ஷேக் சலே அல்-தாலிப் கூறியுள்ளார்.

மெக்கா பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகைக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

அந்தத் தொழுகையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்களும் அடங்குவர்.

ஈரான் கண்டனம்

விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றாததால் நெரிசல் ஏற்பட்டது என்று சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலி கூறியதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மினா நெரிசலில் ஈரானைச் சேர்ந்த 136 பேர் உயிரிழந்தனர். 102 பேர் காயமுற்றனர். மேலும் 340 பேரைக் காணவில்லை.

நெரிசலைத் தொடர்ந்து, ஹஜ் பயண ஏற்பாடுகளை ஈரான் அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து நேரடியாக விசாரணை நடத்த ஈரானின் உயர்நிலைக் குழுவொன்று சவூதிக்குச் செல்லவுள்ளது. ஈரானில் பல்வேறு இடங்களில் சவூதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments