முகப்பு
வெள்ளை மாளிகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்று அழைத்துச் செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா.
உலகம்

இணைந்து செயல்பட்டால் உலகம் பயன்பெறும்: மோடி

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகள் மட்டுமல்லாது உலகமே பயன்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலகம்

இணைந்து செயல்பட்டால் உலகம் பயன்பெறும்: மோடி

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகள் மட்டுமல்லாது உலகமே பயன்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:17 PM
வெள்ளை மாளிகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்று அழைத்துச் செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா.
பகிர்:

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகள் மட்டுமல்லாது உலகமே பயன்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இரு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் இந்திய-அமெரிக்க உறவு குறித்து அந்நாட்டின் "வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"இந்திய-அமெரிக்க உறவு எவ்வித சர்ச்சைகளும் இன்றி வலுப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும் துறைகளில் இரு நாடுகள் மட்டுமல்லாது உலகமே பயனடைந்து வருகிறது.
இப்போது சர்வதேச அளவில் நிலையற்ற பொருளாதாரச் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
அரசியல் அமைப்பிலும், வளர்ச்சியிலும் இருநாடுகளும் ஒன்று மற்றொன்றின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளன. இரு தரப்புக்கும் வெற்றி என்ற இலக்கை இருநாடுகளையும் தொடர்ந்து இணைந்து செயல்பட வைக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது' என்று அந்தக் கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு வாஷிங்டனின் புறநகரான வர்ஜீனியா பகுதியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனர். சுமார் 600 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
பயங்கரவாதம் குறித்து நாம் (இந்தியா) 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியபோது உலகில் பலரும் "அதுவொரு சட்டம்-ஒழுங்குப் பிரச்னை' என்று கூறினர். அந்தப் பிரச்னையை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
துல்லியத் தாக்குதல்: தற்போது உலகெங்கும் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பயங்கரவாதம் குறித்து பயங்கரவாதிகளே விளக்கம் அளிப்பதால் நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை. இந்திய ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. அது, தேவை ஏற்படும்போது இந்தியாவால் தனது இறையாண்மையைக் காத்துக் கொள்ளவும், பாதுகாப்பை உறுதிசெய்யவும் முடியும் என்பதைப் பறைசாற்றியது.
இந்தியாவின் வலிமை: இந்தியா அந்த அதிரடித் தாக்குதலை நடத்தியபோது நமது வலிமையை உலகம் உணர்ந்து கொண்டது. நாம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அதேவேளையில், தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்தைச் சமாளித்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக இந்தியா பலத்தைக் காட்டவும் தயங்க மாட்டோம் என்பதையும் உலகம் கண்டது.
யாரும் கேள்வி எழுப்பவில்லை: துல்லியத் தாக்குதலை நடத்தியதற்காக உலக நாடுகள், இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்க முடியும். ஆனால், பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ற இந்தியாவின் மிகப்பெரிய நடவடிக்கை குறித்து முதல் முறையாக எந்தவொரு நாடும் கேள்வி எழுப்பவில்லை.
பயங்கரவாதத்தின் உண்மையான முகத்தை உலகிற்கு எடுத்துக் கூறி உணரச் செய்வதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பயங்கரவாதம் என்பது அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கிறது என்றார் மோடி.
சீனா மீது தாக்கு: அவர் தொடர்ந்து பேசுகையில், சீனாவை மறைமுகமாகச் சாடும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார். தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் போக்கு, அதன் காரணமாக தனது அண்டை நாடுகளான புரூனே, மலேசியா, பிலிப்பின்ஸ், தைவான், வியத்நாம் ஆகியவற்றுடன் சீனாவுக்கு உள்ள தகராறு குறித்து அவர் சூசகமாகக் குறிப்பிட்டுப் பேசியதாவது:
தனது இலக்குகளை எட்டுவதற்காக உலக ஒழுங்கைக் குலைப்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. இதுவே இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசாரமாகும். நாம் சர்வதேச சட்டத்துக்கு கட்டுப்பட்டிருக்கிறோம். ஏனெனில், அதுவே நமது குணாதிசயமும் பண்பும் ஆகும். நம்மைப் பொருத்தவரை "உலகமே ஒரு குடும்பம்' என்ற சித்தாந்தமானது வெறும் வார்த்தை அல்ல. அது நமது இயல்பு.
இந்தியாவின் திறன்: உலக சட்டங்களை மதித்துப் பின்பற்றும் இந்தியாவுக்கு தனது இறையாண்மை, அமைதி, பாதுகாப்பு, மக்கள், வளர்ச்சி ஆகியவற்றைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் திறனும் உள்ளது. தேவை ஏற்படும்போது நாம் அதைச் செய்கிறோம். இதை உலகத்தால் என்றும் தடுத்து நிறுத்த முடியாது.
ஊழல் இல்லாத அரசு: இந்திய மக்கள் ஊழலை வெறுப்பவர்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஊழலை வேருடன் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்திய மக்கள் வாக்களித்தனர். எனது தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக பாஜக கூட்டணி இந்தியாவில் ஆட்சியில் உள்ளது. எங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எழவில்லை.
வளர்ச்சியை நோக்கிய பயணம்: மக்கள் எங்களுக்கு என்ன நோக்கத்துக்காக வாக்களித்தார்களோ அதனை நோக்கி பயணித்து வருகிறோம். அரசு நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளோம். இந்தியாவின் வளர்ச்சி குறித்து நாட்டு மக்கள் எத்தகைய உயர் கனவுகளைக் கண்டார்களோ, அதனை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →