முகப்பு
உலகம்

தற்கொலை படை பிரிவை ராணுவத்தில் சேர்க்கும் தலிபான்கள்

நாடு முழுவதும் சிதறிக் கிடக்கும் தற்கொலைப் படை வீரர்களை ஒரே பிரிவின் கீழ் ஒன்றிணைக்கும் பணிகளை ஆப்கன் ராணுவம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
கோப்புப்படம்
பகிர்:

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், காபூலுக்குள் புகுந்த தலிபான்கள் நள்ளிரவில் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார். தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் பல எதிர்த்தாலும் பாகிஸ்தானும், சீனாவும் வரவேற்றனர்.

தலிபான்களின் ஆட்சியிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அந்த நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனால், முன்பிருந்தது போல் அல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நடத்தப்படும் என தலிபான்கள் அறிவித்தனர்.

இதற்கு நேர்மாறாக, பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் ஒன்றாக அமர்ந்து படிக்க கூடாது போன்ற பிற்போக்குத்தனமான அறிவிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தலிபான்கள் திணிக்கத் தொடங்கினர். இதற்கு அனைத்து நாடுகளிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான உத்தரவைத் தலிபான்கள் பிறப்பித்துள்ளனர். தலிபான்கள் ஆட்சி அமைக்கும் முன்பு வரை போராளிக் குழுவாக இருக்கும் போதே அவர்களின் ராணுவத்தின் ஒரு அங்கமாகத் தற்கொலை படை இருந்துவந்தது. 20 ஆண்டுக்கால போரில் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்கொள்ளத் தற்கொலைப் படை வீரர்களைத் தலிபான்கள்  முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

இப்போது நாடு முழுவதும் சிதறிக் கிடக்கும் தற்கொலைப் படை வீரர்களை ஒரே பிரிவின் கீழ் ஒன்றிணைக்கும் பணிகளை ஆப்கன் ராணுவம் மேற்கொண்டுள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என விரும்புவதாக தலிபானின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறியுள்ளார்.

இந்த வீரர்களை ராணுவத்தில் இணைப்பதாகவும் இவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.