வரலாற்றில் மிகவும் மோசமான புயலாக உருவாகியுள்ள மெலிஸாவின் மையப் பகுதிக்குள் அமெரிக்க விமானப் படை நுழைந்து விடியோ எடுத்துள்ளது.
ஆனால், புயலின் அதிகப்படியான கொந்தளிப்பால் அவர்கள் மீண்டும் தளத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தால் மிகவும் தீவிரத்தன்மை கொண்ட புயலாக, அதாவது 5ஆம் நிலை தீவிரம் கொண்ட புயலாக மெலிஸா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வேகம் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் உள்ளது.
புயல் குறித்த அறிவிப்புகளை அறிந்து முன்கூட்டியே வெளியிடும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூட, மெலிஸாவின் தீவிரத்தன்மையை முழுதாக அறிந்துகொள்ள முடியவில்லை. இதனால், தரவுகளை சேகரிப்பதற்காக அமெரிக்க விமானப் படை, மெலிஸா புயலின் மையப்பகுதிக்குச் சென்றது.
சூரிய உதயம் தொடங்கிய பிறகு புயலின் கண் பகுதியை நோக்கிச் சென்ற விமானப் படை, அதனை விடியோ பதிவு செய்துள்ளது. அதில், மிகவும் ஆக்ரோஷமாக வட்ட வடிவில் கண் பகுதி குழிந்து கால்பந்து திடல் போன்று காணப்படுகிறது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு மேகங்கள் அதனுள் இழுக்கப்பட்டு வருகின்றன.
புயலின் மையத்திலிருந்து கடல் அலைகள் வெவ்வேறு திசைகளில் ராட்சத அலைகளாக எழுகின்றன. இதனை விடியோ பதிவு செய்யும்போது புயலின் வேகம் மணிக்கு 282 கி.மீட்டராக இருந்ததாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.
மத்திய அமெரிக்க கரீபியன் கடலில் வேகமாக நகர்ந்து வந்த மெலிஸாவால், தென்மேற்கு ஜமைக்கா கடும் சேதங்களை சந்தித்துள்ளது. கடற்கரைப் பகுதிகளில் 13 அடிகள் உயரம் வரை அலைகள் எழுவதாகவும், சில இடங்களில் 40 அங்குலம் வரையில் மழை பெய்யலாம் எனவும் கூறப்படுகிறது.
மிகவும் தாழ்வான பகுதிகளில் மீட்புப் பணிகளை ஜமைக்கா அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக பாதுகாப்பான இடங்களில் 800 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஜமைக்காவில் கடும் சேதம்! கியூபாவை நோக்கி நகரும் மெலிஸா புயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.