ரஷியாவின் பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட களமிறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைத் தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர். இதில், சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறியவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது.
இந்த நிலையில், நிரந்தர வேலை, அதிக ஊதியம், குடியேற்றம் உள்ளிட்ட தரகர்களின் பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பப்படும் வங்கதேச தொழிலாளர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் சில ஆவணங்களில் கையெழுத்திட வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரஷிய ராணுவ முகாம்களுக்கு வங்கதேச தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு அங்கு ஆயுதம், மருத்துவம், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட கட்டாயப் பயிற்சிகள் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்து தப்பித்து தாயகம் திரும்பிய சில வங்கதேச தொழிலாளர்கள் கூறுகையில்,
“ஆபத்தான சூழல்களில் போர்க்களத்தில் நாங்கள் களமிறக்கப்பட்டோம். ஆனால், ரஷிய வீரர்கள் எங்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டனர். நாங்கள் அவர்கள் கூறும் வேலைகளைச் செய்ய மறுப்பு தெரிவித்ததற்கு ரஷிய அதிகாரிகள் எங்களைத் தாக்கினர். மேலும், 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவோம் என அவர்கள் எங்களை மிரட்டினார்கள்” என்று கூறியுள்ளனர்.
இதுபோன்று ஏமாற்றப்பட்டு ரஷியாவின் போரில் சண்டையிட களமிறக்கப்பட்ட வங்கதேசத்தினரின் எண்ணிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த விவகாரம் குறித்து ரஷிய மற்றும் வங்கதேச அரசுகளும் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் களமிறக்கப்படுவதற்கு இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக, நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.