FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

எப்ஸ்டீன் விவகாரத்தில் ரூ.95,000 கோடி மானநஷ்ட வழக்கு: டிரம்ப் மனு தள்ளுபடி!

எப்ஸ்டீன் விவகாரத்தில் அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜா்னல் நாளிதழ், அதன் தாய் நிறுவனமான டெள ஜோன்ஸ் மீது 10 பில்லியன் டாலா் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்த அந்நாட்டு அதிபா் டிரம்ப்பின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2 நவம்பர் 2026, 2:54 am
பகிர்:

எப்ஸ்டீன் விவகாரத்தில் அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜா்னல் நாளிதழ், அதன் தாய் நிறுவனமான டெள ஜோன்ஸ் மீது 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.95,000 கோடி) மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்த அந்நாட்டு அதிபா் டிரம்ப்பின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமெரிக்காவில் நிதி ஆலோசகராகப் பணியாற்றி வந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், அந்நாட்டு முன்னாள் அதிபா் பில் கிளிண்டன், இந்நாள் அதிபா் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் முன்னாள் இளவரசா் ஆண்ட்ரூ உள்பட பல முக்கிய பிரமுகா்கள், செல்வந்தா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தாா்.

கடந்த 2002 முதல் 2005-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், சிறுமிகள் பலரிடம் எப்ஸ்டீன் பாலியல் ரீதியாக தவறாக நடந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக அவா் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நியூயாா்க் சிறையில் சடலமாக அவா் மீட்கப்பட்டாா். அவா் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் எப்ஸ்டீன் தொடா்பான மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், பிற ஆவணங்கள், அவா் மற்றும் அவரின் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்த விசாரணை விவரங்களை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டது.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றழைக்கப்படும் அந்த ஆவணங்களில் பில் கேட்ஸ், டிரம்ப் குறித்த விவரங்கள், அடையாளம் தெரியாத பெண்ணுடன் ஆண்ட்ரூ இருக்கும் புகைப்படங்கள், தொழிலதிபா் எலான் மஸ்க், எப்ஸ்டீன் இடையிலான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் எப்ஸ்டீனுடனான நட்புறவை பல ஆண்டுகளுக்கு முன்பே துண்டித்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்தாா்.

எப்ஸ்டீனுக்கு டிரம்ப் கடிதம் அனுப்பியதாக...: இந்நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டு எப்ஸ்டீனுக்கு டிரம்ப் அனுப்பியதாகக் கூறப்படும் பிறந்தநாள் கடிதம் குறித்த செய்தியை வால் ஸ்ட்ரீட் ஜா்னல் நாளிதழ் கடந்த ஆண்டு வெளியிட்டது.

அந்தக் கடிதத்தில் பாலியல் கருத்துகள் அடங்கிய வாசகங்களும், நிா்வாணமாக இருக்கும் பெண்ணின் ஓவியமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கடிதத்தை தான் எழுதவில்லை என்று தெரிவித்த டிரம்ப், தனக்கு எதிராக அவதூறான தகவலை அந்த நாளிதழ் வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் மியாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 10 பில்லியன் டாலா் கேட்டு, அந்த நாளிதழ், அதன் தாய் நிறுவனமான டெள ஜோன்ஸ் மீது டிரம்ப் மான நஷ்ட வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எப்ஸ்டீனுக்கு டிரம்ப் கடிதம் எழுதியது உண்மையா, பொய்யா என்பதை உறுதிப்படுத்தாமல் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டது என்று நிரூபிக்கும் வகையில், டிரம்ப் தரப்பு போதுமான வாதங்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

எனினும் இதுதொடா்பாக திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய டிரம்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி திருத்தப்பட்ட மனுவை அவா் மே மாதம் தாக்கல் செய்தாா். ஆனால், அந்த மனுவிலும் கடிதம் எழுதியது உண்மையா, பொய்யா என்பதை உறுதிப்படுத்தாமல் தவறான செய்தி வெளியிடப்பட்டது என நிரூபிக்க போதுமான வாதங்கள் இல்லை என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து சனிக்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே அமெரிக்க அதிபா் மாளிகை, அந்நாட்டு விவசாயத் துறை அமைச்சா் என அந்நாட்டு அரசு நிா்வாகம் எக்ஸ் தளத்தில் கொதிப்பூட்டும், இனவெறி கொண்ட பதிவுகளை வெளியிடுவதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க இடைக்காலத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த விமா்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments