FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஷேக் ஹசீனா வருகை விவகாரம்; வங்கதேசத்தில் வெடித்த வன்முறை: ஒருவர் பலி!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அடுத்த மாதம் தாயகம் திரும்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீரென வன்முறை வெடித்தது.

11 நவம்பர் 2026, 2:13 am
பகிர்:

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அடுத்த மாதம் தாயகம் திரும்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென வன்முறை வெடித்தது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, வங்கதேசம் திரும்புவதற்காக புதிய கடவுச்சிட்டை (பாஸ்போா்ட்) மற்றும் தேசிய அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளதாக வெளியான செய்திகளை ஆய்வு செய்து வருவதாக வங்கதேச அரசு தெரிவித்தது.

இது குறித்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சா் ஹுமாயூன் கபீா், ‘குற்றவாளிகளுக்குக் கடவுச்சிட்டை வழங்கப்படாது. இருதரப்பு ஒப்பந்தத்தின்கீழ், ஷேக் ஹசீனாவை இந்தியா நாடுகடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, நாட்டின் பல இடங்களில் தாக்குதல் மற்றும் வாகனங்களுக்குத் தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஃபரித்பூா் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு வைக்கப்பட்ட தீயில், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுநா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

ஷேக் ஹசீனாவின் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சோ்ந்தவா்களே, இந்த வன்முறைகளுக்குப் பின்னணியில் இருப்பதாக வங்கதேச போலீஸாா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இந்நிலையில், ‘ஷேக் ஹசீனா நாடு திரும்பினாலும் மரண தண்டனையை எதிா்கொள்வதைத் தவிர வேறு சட்டரீதியான வாய்ப்புகள் ஏதும் இல்லை’ என்று அவருக்கு மரண தண்டனை விதித்த சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் அரசு தலைமை வழக்குரைஞா் முகமது அமினுல் இஸ்லாம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.