இஸ்ரேலில் புதிய எம்பிக்கள் பதவியேற்பு! முதல் நாளே நெதன்யாகுவுக்கு செக் வைத்த ஐசென்கோட்!
இஸ்ரேலில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டது குறித்து...
இஸ்ரேலில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றன.
Advertisement
Advertisement
அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை எந்தவொரு கட்சியும் கைப்பற்றவில்லை. பின்னர், அரபு கட்சிகளின் கூட்டணி ஐசென்கோட்டுக்கு ஆதரவளித்துள்ளன.
இதனால், புதிய அரசு அமைப்பதற்கு இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் ஐசென்கோட் உரிமைக் கோரினார். இதையடுத்து, கூட்டணிகளின் ஆதரவைப் பெற்று பிரதமராகப் பதவியேற்று ஆட்சி அமைக்க ஐசென்கோட்டுக்கு 6 வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 11) அன்று இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட் அவையில் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் கூட்டத்தில், ஐசெகோட் தலைமையிலான கூட்டணி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவர் அரசின் கீழ் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளைக் குறிவைக்கும் வகையில் புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினர்.
இதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்குவது குறித்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்துடன், பிரதமர் பதவிக்குக் கால வரம்புகளை நிர்ணயிப்பது மற்றும் நெதன்யாகு அரசினால் நீதித்துறை அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை ரத்து செய்வது உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.