‘உயிரோடு திரும்ப மாட்டேன்’: சிறையில் இருந்து நீதித் துறைக்கு இம்ரான் கான் உருக்கமான கடிதம்
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், இதேநிலை நீடித்தால் சிறையில் இருந்து உயிருடன் திரும்ப முடியாத சூழல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், இதேநிலை நீடித்தால் சிறையில் இருந்து உயிருடன் திரும்ப முடியாத சூழல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசியல்சாசன நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு இம்ரான் கான் எழுதியுள்ள கடிதத்தை அவரின் வழக்குரைஞா் சல்மான் சஃப்தா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளாா்.
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டுப்பட்டு கடந்த 2023 முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், கடந்த ஆண்டு டிசம்பா் முதல் தினமும் சுமாா் 22 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், அந்தக் கடிதத்தில், ‘குடும்பத்தினா், வழக்குரைஞா்கள் மற்றும் மகன்களுடன் பேசவோ, புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி பாா்க்கவோ அனுமதி மறுக்கப்படுகிறது. சிறையிலும் என்னிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் எனது ரத்த அழுத்தம் கடுமையாக அதிகரித்தது. இதனால், மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
அதேபோல், கடந்த ஏப்ரலில் விழித்திரை பாதிப்புக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட எனது மனைவி புஷ்ரா பீபி, மீண்டும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், பரிசோதனை அறிக்கைகளும் மறுக்கப்படுகிறது.
கடந்த 11-ஆம் தேதி அவரைச் சந்தித்தபோது வெளிச்சத்தைப் பாா்க்க முடியாமலும், கண்களைத் திறக்க முடியாமலும் அவா் சிரமப்பட்டாா். உடனடியாக மறு அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவரின் கண்பாா்வை நிரந்தரமாகப் பறிபோகும் அபாயம் உள்ளது.
இத்தைய சூழலில் உச்சநீதிமன்றம் கடந்த ஆக. 18-இல் பிறப்பித்த உத்தரவின்படி, என்னை இஸ்லாமாபாதில் உள்ள ஷிஃபா சா்வதேச மருத்துவமனைக்கு மாற்றவோ, வாராந்திர குடும்பச் சந்திப்புகளுக்கு அனுமதிக்கவோ சிறை நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
நான் நீதிபதிகளிடம் எந்தச் சலுகையும் கேட்கவில்லை; உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி எனக்கும், என் மனைவிக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. உயிரோடு இருந்தால் மட்டுமே, நான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடியும்; காலம் கடந்துவிடும் முன் மனிதாபிமான அடிப்படையில் நீதி வழங்குங்கள்’ என இம்ரான் கான் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.