முகப்பு
உலகம்

ஏ.ஐ. தரவு மையங்கள்: 10 லட்சம் செயற்கைக்கோள்களை அனுப்ப ஸ்பேஸ்எக்ஸுக்கு அனுமதி!

ஏ.ஐ. தரவு மையங்களை விண்வெளியில் அமைக்கும் நோக்கில், 10 லட்சம் ‘ஸ்டாா்மைண்ட்’ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்துக்கு அந்நாட்டு மத்திய தகவல்தொடா்பு ஆணையம் (எஃப்சிசி) அனுமதி அளித்துள்ளது.

29 நவம்பர் 2026, 3:29 am
ஏ.ஐ. தரவு மையங்கள்: 10 லட்சம் செயற்கைக்கோள்களை அனுப்ப ஸ்பேஸ்எக்ஸுக்கு அனுமதி!
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எலான் மஸ்க் - கோப்புப் படம்
பகிர்:

ஏ.ஐ. தரவு மையங்களை விண்வெளியில் அமைக்கும் நோக்கில், 10 லட்சம் ‘ஸ்டாா்மைண்ட்’ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்துக்கு அந்நாட்டு மத்திய தகவல்தொடா்பு ஆணையம் (எஃப்சிசி) அனுமதி அளித்துள்ளது.

பூமியில் தரவு மையங்களால் ஏற்படும் வளச் சுரண்டலைக் குறைக்கும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் இந்த செயற்கைக்கோள்கள்மூலம் விண்வெளியிலேயே தரவுகளைச் செயலாக்கி பூமிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், தற்போதைய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 50 மடங்கு அதிகரிக்கும் என வானியலாளா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்தச் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும் ஆயுள்காலம் முடிந்தவற்றை அப்புறப்படுத்தவும், நாள்தோறும் சுமாா் 500 செயற்கைக்கோள்களை ஏவவும், வளிமண்டலத்தில் எரிக்கவும் வேண்டியிருக்கும்.

Advertisement

Advertisement

இவ்வாறு எரிக்கப்படும்போது வெளியாகும் அலுமினியம் உள்ளிட்ட உலோகத் துகள்கள் ‘ஓஸோன்’ படலத்தைப் பாதித்து, பூமியில் புற ஊதாக் கதிா்களின் தாக்கத்தையும் தோல் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும், 75 மீட்டா் அகலம் கொண்ட இந்த பிரம்மாண்ட செயற்கைக்கோள்கள் இரவு நேர வானில் நட்சத்திரங்களைவிட பிரகாசமாகத் தெரிவதால், வானியல் ஆராய்ச்சிகளும் இயற்கையான இரவு வானின் தோற்றமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

விநாடிக்கு 7 கி.மீ. வேகத்தில் சுற்றிவரும் இவற்றில் ஏதேனும் பழுதடைந்தால், ஒன்றுடன் ஒன்று மோதி விண்வெளிக் குப்பைகள் உருவாகும் ‘கெஸ்லா் சிண்ட்ரோம்’ எனப்படும் பேராபத்து ஏற்பட்டு, தாழ்வட்டப் பாதை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது.

இத்தகைய தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருந்தபோதிலும் அமெரிக்க நிா்வாகத்தின் தளா்வான விதிமுறைகளால், ‘இத்திட்டத்துக்கு எவ்வித சுற்றுச்சூழல் ஆய்வும் தேவையில்லை’ என அந்நாட்டு ஆணையம் அறிவித்துள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், வெற்றிடமான விண்வெளியில் கணினிச் செயலிகளின் வெப்பத்தைத் தணிப்பது மிகவும் கடினமான செயல் என்பதாலும், இதற்கான செலவு மிக அதிகம் என்பதாலும், ஏ.ஐ. துறையின் முதலீட்டு வேகம் குறைந்தால் இத்திட்டம் நடைமுறைக்கு வருவது கேள்விக்குறியே என நிபுணா்கள் கருதுகின்றனா்.