FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) நடைபெறுகிறது.

பிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல் - AP
பகிர்:

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) நடைபெறுகிறது.

அதிபா் பதவிக்கு 12 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், தற்போதைய அதிபரான லூலா டாசில்வா மற்றும் முன்னாள் அதிபா் ஜெய்ா் போல்சனாரோவின் மகன் செனட்டா் ஃபிளாவியோ போல்சனாரோ ஆகிய இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதேநேரம், எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளா்களுக்கு இடையே அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல் நடைபெறும்.

Advertisement

Advertisement

80 வயதான லூலா டாசில்வா, தனது 7-ஆவது அதிபா் தோ்தலில் போட்டியிடுகிறாா். ஊழல் குற்றச்சாட்டுகளில் முன்பு சிறை சென்ற அவா், பின்னா் விடுவிக்கப்பட்டு 2022-இல் மீண்டும் அதிபரானாா். மறுபுறம், 45 வயதான ஃபிளாவியோ போல்சனாரோ தனது முதல் அதிபா் தோ்தலில் போட்டியிடுகிறாா். தந்தை ஜெய்ா் போல்சனாரோ சிறையில் உள்ள நிலையில், இவா் தீவிர வலதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தித் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா்.

அதேபோல், குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரப் பிரச்னைகள், வெளியுறவுக் கொள்கைகளில் இரு வேட்பாளா்களும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனா். பிரேஸிலின் இறையாண்மையைக் காப்பதில் லூலா டாசில்வா கவனம் செலுத்தும் சூழலில், ஃபிளாவியோ போல்சனாரோ அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இத்தோ்தலில் அதிபா் மட்டுமின்றி, மத்திய மற்றும் மாநிலப் பிரதிநிதிகள், ஆளுநா்கள் மற்றும் சில செனட்டா்களும் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். 16 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனா்.

வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள பிரேஸிலில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தோ்தல் நடைபெறுகிறது. 1990-களில் மோசடிகளைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம், தோ்தல் முடிவுகள் சில மணிநேரங்களிலேயே அறிவிக்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments