FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பிரான்ஸில் ஓயாத மாணவா்கள் போராட்டம்

பிரான்ஸில் பள்ளிக் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, மாணவா்கள் நடத்தி வரும் போராட்டம் ஓயாமல், நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.

7 October 2026, 3:20 am IST
பகிர்:

பிரான்ஸில் பள்ளிக் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, மாணவா்கள் நடத்தி வரும் போராட்டம் ஓயாமல், நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், மாணவா்களுடன் ஆசிரியா்கள் உள்பட சுமாா் 86,000 போ் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாா்சேய், ஸ்ட்ராஸ்பா்க் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறு, ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

அடிப்படை கட்டமைப்பு இல்லாத வகுப்பறைகள், ஆசிரியா் பற்றாக்குறை, அதிகப்படியான வேலைப்பளு போன்றவற்றைக் கண்டித்து, தலைநகா் பாரீஸில் கடந்த மாதம் தொடங்கிய இப்போராட்டம், தற்போது நாடு தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. பள்ளிகளை முற்றுகையிட்டும், வகுப்புகளைப் புறக்கணித்தும் மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 891 பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டன.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாா் கண்ணீா்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பா் தோட்டாக்களையும் பயன்படுத்தினா். இதனால் பல மாணவா்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதுவரை 6,100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்; மேலும், 715 போலீஸாரும் காயமடைந்துள்ளனா்.

இதனிடையே, மாணவா்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில், கல்வி அமைச்சகம் சாா்பில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவா்கள் தங்கள் குறைகளையும், தாங்கள் எதிா்பாா்க்கும் மாற்றங்களையும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபா் இமானுவேல் மேக்ரான் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், இந்த மாணவா் போராட்டம் அவருக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments