நேபாள வெள்ளம்! சோகமே உருவாய் உரிமையாளருக்காக ஒரேயிடத்தில் காத்திருக்கும் நாய்!
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உரிமையாளருக்காக காத்திருக்கும் வளர்ப்பு நாய் பற்றி..
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் காத்திருக்கிறது.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதங்களுடன் பேரழிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்படுவதால் அவா்களை அடையாளம் காணும் பணி சவாலாக மாறியுள்ளது.
இந்த வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் இருந்த நான்கு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நான்கு வீடுகள் அமைந்திருந்த பகுதியில் இடிபாடுகளுக்கு மத்தியில் சேற்றில் அமர்ந்திருக்கும் வெள்ளை - கருப்பு நிற நாய் ஒன்று, அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சிகள் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.
ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள இடிபாடுகளையும் சேறு, சகதிகளையும் பணியாளர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அமர்ந்திருக்கிறது வளர்ப்பு நாய்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் விக்ரம் தாபா என்பவர் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விடம் கூறுகையில், “நாங்கள் பிஸ்கட் கொடுத்துப் பார்த்தோம், பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அழைத்தோம், ஆனால் அது தலையைக்கூடத் திருப்பவில்லை. அது இந்த இடத்தை விட்டு நகராமல் உள்ளது” என்றார்.
சில மீட்டர் தொலைவில் இயங்கும் கனரக இயந்திரங்களின் இரைச்சல் கூட அந்த நாயை அசைக்க முடியவில்லை என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வீட்டு உரிமையாளர்களில் யாருடைய நாய் என்பது இதுவரை தெரியவில்லை.
ஆனால், சரியாக சாப்பிட மறுக்கும் நாய், வீடு இருந்த பகுதியையே சுற்றி, உரிமையாளரைத் தேடி வருவது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.
Pet dog waits for owner missing in Nepal floods.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.