FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள பெருவெள்ள மீட்புப் பணிகளுக்கு அமெரிக்கா கூடுதல் நிதியுதவி

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அமெரிக்கா கூடுதல் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது தொடர்பாக...

23 செப்டம்பர் 2026, 11:25 am IST
அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனல் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். - ஏஎன்ஐ
பகிர்:

காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீரமைக்க கூடுதலாக 31 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (செப்.22) கூடுதலாக 31 மில்லியன் டாலர்(ரூ.260 கோடி) நிதியுதவியை அறிவித்துள்ளது. இதில் நிரந்தரப் பாலங்கள் அமைத்தல், மனிதாபிமான உதவிகள் மற்றும் எதிர்கால பேரிடர் மீட்புப் பணிகளுக்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை (ஆளில்லா விமானங்கள்) வழங்குதல் ஆகியவை அடங்கும்.

இது தொடர்பாக நேபாளத்திற்கான அமெரிக்க தூதரகம் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனல் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, நேபாளம்-அமெரிக்கா இடையிலான உறவுகள், ​​சமீபத்திய நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான ஆற்று பெருவெள்ளத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் நேபாளத்தின் மீட்புப் பணிகளுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இன்னும் கண்டுபிடிக்கப்படாத சுமார் 70 அமெரிக்கர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவின் "ஆழ்ந்த அனுதாபங்களை" அலிசன் ஹூக்கர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு, நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்கா கூடுதலாக 31 மில்லியன் டாலர்(ரூ.260 கோடி) நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட முக்கிய போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மீண்டும் சீரமைப்பதற்காக. அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து நிரந்தரமான மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலங்களை அமைப்பதற்காக 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதோடு, பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பையும் வலுப்படுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு வசதிகள், அத்துடன் தங்குமிடம், பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் குளிர்காலத் தேவைகளுக்கான உதவிகள் என மொத்தம் 8 மில்லியன் டாலர் கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும்.

மேலும், எதிர்கால பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு டிரோன்களை வழங்குவதற்காக 13 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் நிதியுதவி அறிவிப்பின் மூலம், நேபாளத்தின் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கான அமெரிக்காவின் மொத்த உதவி 36 மில்லியன் டாலரைக் கடந்துள்ளது.

மேலும், மிகவும் கூடுதல் உதவிகள் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை வழங்குவதற்காக, நேபாள அரசுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா செவ்வாய்க்கிழமை காத்மாண்டுவில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்ட நிலையில், இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 14 பேர் கொண்ட குழுவுடன் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஷா, செப். 24 ஆம் தேதி உரையாற்றவுள்ளார்.

அப்போது, சர்வதேச சமூகத்தின் முன் நேபாளத்தின் முக்கிய முன்னுரிமைப் பிரச்னைகளை முன்வைத்து ஷா பேசவுள்ளார். குறிப்பாக, நேபாளத்தில் தீவிரமடைந்து வரும் பருவநிலை நெருக்கடி, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பருவநிலை நீதி, தொழில்நுட்பப் பரிமாற்றம், பருவநிலை நிதியை எளிதாகப் பெறுதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கான சர்வதேச ஆதரவு ஆகியவை குறித்து பிரதமர் ஷா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கில் தங்கியிருக்கும் நாள்களில், ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். செப்.26 ஆம் தேதி அவர் நாடு திரும்புகிறார். பிரதமர் ஷா பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை-பாறைச் சரிவு காரணமாக உருவான திடீர் வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் பேரழிவிற்குள்ளாக்கியது. இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போடே கோஷி நதி, வெள்ள நீரை அடித்துச் சென்று, வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன் நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,451 ஆக உயர்ந்ததாகவும், இவற்றில், 1,333 உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், 112 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்திற்குப் பிறகு 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மொத்தம் 344 பேர் 19 சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவர்களில் 12 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், நான்கு பேர் சிகிச்சையின் போது உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 1,134 பேர் 21 தற்காலிகத் தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்; இதில் ரசுவாவில் உள்ள ஒன்பது மையங்களில் 793 பேரும், நுவாகோட்டில் உள்ள எட்டு மையங்களில் 220 பேரும், தாடிங்கில் உள்ள நான்கு மையங்களில் 121 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, தடயவியல் ஆய்வகங்களில் 3,345 டிஎன்ஏ மாதிரிகள் கையாளப்பட்டு வருவதாகவும், இதில் உயிரிழந்தவர்களின் 1,329 உடல்களிலிருந்து சேகரித்த டிஎன்ஏ மாதிரிகளும், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 2,016 ஒப்பீட்டு டிஎன்ஏ மாதிரிகளும் அடங்கும்.

மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவும் சர்வதேச தடயவியல் நிபுணர் குழுக்களில் இந்தியாவில் இருந்து 19 டிஎன்ஏ நிபுணர்கள், சிங்கப்பூரிலிருந்து 2 கைரேகை நிபுணர்கள், தென் கொரியாவிலிருந்து 3 டிஎன்ஏ நிபுணர்கள், அமெரிக்காவிலிருந்து 3 கைரேகை நிபுணர்கள் மற்றும் சீனாவிலிருந்து 15 டிஎன்ஏ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள 430 கி.மீ நீளமுள்ள ஆற்றுப் பகுதிகளில், 'டிமுரே-திரிவேனி' முன்னெடுப்பின் கீழ் 2,472 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துதல், டிஎன்ஏ தொடர்பான தகவல்களைப் பரப்புதல் மற்றும் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் முகாம் செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

summary

US announces additional USD 31 million to support Nepal's flood recovery efforts...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments