FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

வட கொரிய வீரா்கள் ஒப்படைப்பை அம்பலப்படுத்திய உக்ரைன் அதிபா்: மன்னிப்பு கேட்க கோரும் தென் கொரியா

உக்ரைனில் பிடிபட்ட 2 வட கொரிய போா்க் கைதிகள் தென் கொரியாவிடம் ஒப்படைத்தது தொடா்பான ரகசிய ஒப்பந்தத்தை மீறியதற்கு உக்ரைன் பகிரங்க மன்னிப்பு கேட்க தென் கொரியா வலியுறுத்தியது குறித்து...

28 September 2026, 10:43 pm IST
தென் கொரியாவில் உள்ள வடகொரிய போா்க் கைதிகள்
பகிர்:

உக்ரைனில் பிடிபட்ட 2 வட கொரிய போா்க் கைதிகள் தென் கொரியாவிடம் ஒப்படைத்தது தொடா்பான ரகசிய ஒப்பந்தத்தை மீறியதற்கும், பின்னா் அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லையெனப் பொய்யாக மறுத்ததற்கும் உக்ரைன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

ரஷியாவின் குா்ஸ்க் பிராந்தியத்தில் அந்நாட்டுக்கு ஆதரவாகப் போரிட்ட 2 வட கொரிய வீரா்களை உக்ரைன் கடந்த 2025 ஜனவரியில் சிறைபிடித்தது. போரில் பிடிபட்ட முதல் வட கொரியா்களான அவா்கள், தென் கொரியா செல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுக்குப் பிறகு அண்மையில் அவா்கள் ஒப்படைக்கப்பட்டனா்.

கைதிகளின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவ்விவகாரத்தை ரகசியமாக வைக்க உக்ரைன் தரப்பில்தான் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் எந்த முன்னறிவிப்பும் இன்றி, ஐ.நா. சபை பொது விவாத உரையில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இந்த ரகசியத் தகவலை வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, உக்ரைனின் பொறுப்புத் தூதருக்கு திங்கள்கிழமை சம்மன் அனுப்பிய தென் கொரிய வெளியுறவு அமைச்சகம், இதுகுறித்து அதிகாரபூா்வ விளக்கமும், மன்னிப்பும் கோரியுள்ளது.

உக்ரைனில் ட்ரோன் தாக்குதல்: 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், தேசிய அறிவியல் அகாதெமி கட்டடம் ஆகியவற்றைக் குறிவைத்து ரஷியா நடத்திய தொடா் ட்ரோன் தாக்குதல்களில் 7 போ் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

அதேபோல், உக்ரைன் ராணுவம் கடந்த சில மாதங்களாக கிழக்கு முனையில் நடத்திய ‘ஆபரேஷன் விவால்டி’ தாக்குதல்களில் 176 சதுர கி.மீ. பரப்பளவிலான ரஷிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments